Saturday, February 16, 2013

தமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913- 01.09.1980)இன்றைய தினமணியில், இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில், சென்னை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரியில், தவத்திரு, தனிநாயக அடிகளார் பிறப்பு நூற்றாண்டு  தொடக்க விழா, மற்றும் நூல் வெளியீடு நிகழ்வுதான் முதலில் இடம் பெற்றிருந்தது. செல்ல இயலவில்லை. அதனை ஈடுகட்டவே இந்தப் பதிவு.  அதற்கும் தினமணியே கைகொடுத்தது.

தினமணி, தமிழ்மணியில். சனிக்கிழமை, 13 ஜுன் 2009-ல்

தமிழாய்வினுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார்!

என்னும் தலைப்பில் 

ந. முருகேசபாண்டியன்
   
எழுதிய கட்டுரையின் மீள்பதிவுதான் இது. அஃது முழுமை 
பெற்றிடhttp://yarloli.com/?view=thavam  -இடம் பெற்ற கட்டுரையின் 
பெரும்பகுதியும் இடம்பெறச் செய்யப்பட்டது.

தமிழில் திறனாய்வு என்பது நீண்ட பாரம்பரியம் உடையதெனினும் புறநிலையில் ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் நூற்றாண்டுப் பழமையானது. இலக்கியப் படைப்புகளை வாசித்து அவற்றில் பொதிந்துள்ள நுட்பங்களை இரசித்து மகிழ்தலும், மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாகப் பிரயோகித்துத் திறனாய்வெனச் சிலாகிப்பதும் வழக்கமாக இருந்த காலத்தில், தனிநாயகம் அடிகளாரின் திறனாய்வு அணுகுமுறை தனித்துவமானது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. போன்றோரின் விமர்சனம் இரசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, அதனைப் பல்வேறு தளங்களுக்கு விரித்தவர் தனிநாயகம் அடிகள். 

தமிழுடன்;     ஆங்கிலம்,    இலத்தீன்,     ஸ்பானிஷ்,     பிரெஞ்சு,     போர்த்துகீஸ்
போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்த தனிநாயகம் அடிகளாரின் அனைத்துலகப் பார்வை முழுமையாக அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஒப்பிடுதலும் தர மேம்பாட்டினை அறிதலும் அவருடைய விமர்சனப் பார்வைக்குச் செழுமையூட்டின. தமிழ்மொழி, தமிழிலக்கிய மேன்மை, தமிழரின் பாரம்பரியச் சிறப்பினை உலகமெங்கும் வாழும் பிறமொழி அறிஞர்களிடம் பரப்புதலை வாழ்வின் இலக்காக தனிநாயகம் அடிகள் கொண்டிருந்தார்

ஈழத்திலுள்ள காவலூர் அருகிலுள்ள பொன்னகரம் எனப்படும் காம்பொன் என்ற சிற்றூரில், ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதியரின் முதல் குழந்தையாக 1913ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதியன்று தனிநாயகம் அடிகள் பிறந்தார். இவரது இயற்பெயர் சேவியர்.
சொந்த ஊரில் தொடக்கக் கல்வியும், யாழ்ப்பாணத்தில் கல்லூரிக் கல்வியும், கொழும்பு நகரில் இறையியல் கல்வியும் பயின்றார்.

பின்னர்; திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் சேர்ந்த தனிநாயகம், மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார். "The Carthaginian Clergy" என்ற தலைப்பில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அது 1960ல் நூல் வடிவில் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர் சிறிது காலம் வடக்கன்குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை மாணவராய்ச் சேர்ந்து எம்.லிட் பட்டம் பெற்றார்.

"பழந்தமிழ்க் கவிதையில் இயற்கை" என்பது ஆய்வுத் தலைப்பாகும். தூத்துக்குடியில் பணியாற்றிய அடிகள், தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவி "Tamil Culture" என்ற ஆங்கிலக் காலாண்டிதழை வெளியிட்டார்.

இலங்கைக்குச் சென்று பல்கலைப் பணியில் சேர்ந்தார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனத்தில், "தமிழிலக்கியம் வழியாகக் கல்வியியல்", என்ற தலைப்பில் முனைவர் பட்டர் பெற்றார். பின்னர் மலேசியாவிலுள்ள மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையின் தலைவராக 1968ம் ஆண்டு பணியேற்றார்.


1964ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் உலகமெங்கிலுமிருந்து கலந்துகொண்ட பேராசிரியர்களை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் குழு தோற்றுவிப்பதில் மூலவராக விளங்கினார். அவர் அவ்வமைப்பின் செயலராகப் பொறுப்பேற்றார்.


முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ம் ஆண்டு மலேசியாவில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்படுவதற்கான செயலாக்கத்தில் அடிகளாரின் பங்கு கணிசமானது. அந்நிறுவன வெளியீடான "Journal of Tamil Studies" இதழுக்குச் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அடிகளாரின் முதல் நூல் "தமிழ் தூது" இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. அது 1952ம் ஆண்டு வெளியானது. அடிகளாரின் உலகப் பயண அனுபவங்கள் "ஒரே உலகம்" என்ற தலைப்பில் 1963ம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவானது "திருவள்ளுவர்" என்ற தலைப்பில் 1967ம் ஆண்டு நூல் வடிவில் வெளியாகியுள்ளது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக் கட்டுரைகள் "Tamil Culture" இதழில் வெளியாகியுள்ளன. சுமார் 70 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.

தமிழிலக்கியப் பரப்பினுக்குள் சுருங்கியிருந்த தமிழாய்வுப் போக்கினை திறனாய்வு என்ற புதிய தளத்திற்கு விரிவுபடுத்தியவர் அடிகளார்.

பண்பாடு, ஒப்பிலக்கியம், கல்வி, இறையியல், புவியியல், வரலாறு,  மொழியியல். மெய்யியல்,  நாட்டுப்புறவியல், கவின் கலைகள் போன்ற பல்வேறு துறைகளுடன் தமிழ் இலக்கிய ஆய்வைத் தொடர்புபடுத்தி நுணுகி ஆராய்திட முனைந்தவர்களில் அடிகளாரின் செயற்பாடு முதன்மையானது. பன்மொழிப் புலமையுடைய அடிகளார் உலக இலக்கியப் படைப்புகளை மூலமொழிகளிலேயே வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர். ஆதலால், தமிழிலக்கியப் படைப்புகளை ஒப்பீட்டு நிலையில் ஆராய்ந்திடும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.

"உலக இலக்கியத் திரட்டு" என்னும் பெருந்தொகை நூல்களில், நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும் என்ற அடிகளாரின் ஆர்வத்தில் தமிழை அனைத்துலக இலக்கியப் பரப்பினுக்கு உயர்த்தும் முயற்சி பொதிந்துள்ளது.

உலகமெங்கும் பல நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுவதால், தமிழுக்கெனப் பொது ஒலிப்பு முறை என்ற கருத்தையும் அடிகளார் முன் வைக்கிறார். இது அவரது மொழியியல் அணுகுமுறையின் வெளிப்பாடாகும். தமிழ் உலக மொழியாவதற்கான தகுதியுள்ளது எனவும் தமிழின் தனித்தன்மைகளையும், வளங்களையும் உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டுமெனக் குறிப்பிடுகின்ற அடிகளாரின் பார்வை முழுக்க முழுக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.

தமிழரின் தொன்மை அடையாளங்கள் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இடத்தில் இன்றும் எச்சமுடன் காணப்படுவதை அடிகளார் விளக்குகிறார். மேலும் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்குமிடையில் சில அம்சங்களில் ஒற்றுமை நிலவுவதையும் நுணுக்கமாகச் சுட்டுகிறார்.

தொல்காப்பியம்,     சங்க இலக்கியம்,     சிலப்பதிகாரம்,     திருக்குறள்
ஆகிய நூல்களைத் தமிழில் முக்கியமானவையாக அடிகளார் கருதுகிறார்.

தமிழ், தமிழர் பற்றி ஐரோப்பிய மொழிகளில் வெளியாகியுள்ள நூல்களைத் தொகுப்பதன் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மொழியைக் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies" என்ற 122 பக்கங்களைக் கொண்ட பார்வை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இலத்தீன்,  பிரெஞ்சு,  ஜெர்மனி ,  இரஷியன் ,    மலாய் போன்ற பல மொழிகளில் தமிழியல் பற்றி வெளியான நூல்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. தமிழாய்வில் ஈடுபட முனைந்திடும் வெளிநாட்டவருக்குப் பார்வை நூலாக அடிகளார் தொகுத்த நூல் என்றும் விளங்கும் என்பது உறுதி.

இறுதியில் ஈழத்தில் தங்கியிருந்த அடிகளார் 1980ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இவ்வுலக வாழ்வைவிட்டு மறைந்தார். மாறிவரும் புதிய உலகத்தின் தேவைக்கேற்பவும், ஏற்கனவே தேங்கிப்போயுள்ள சூழலைத் தகர்த்தெறியவும் அடிகளாரின் ஆய்வுகள் முயன்றன. தமிழ், தமிழர் குறித்த திறனாய்வில் தனிநாயகம் அடிகளாரின் பங்கு என்றும் தனித்துவமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தமிழ்மணி (தினமணி)  சனிக்கிழமை, 13 ஜுன் 2009

http://yarloli.com/?view=thavam 

தனிநாயகம் அடிகள் (Rev.Father Xavier S.Thani Nayagam, (ஆகஸ்டு 2, 1913 - செப்டம்பர் 1, 1980) ஈழத்துத் தமிழறிஞர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவர்.

ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் மெய்யியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதி (முனைவர்) பட்டத்தையும் பெற்றார்.
   
தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணியாற்றினார், இங்கு இருந்தபோது பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

 த்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.

மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
  
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.

1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 வெளி இணைப்புகள்

 ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த் தூதுவர் - தனிநாயகம் அடிகளார்
 The Roving Ambassador of Tamil
        

தமிழ்த் தூதர் தவத்திரு டாக்டர் சேவியர் தனிநாயகம் அடிகளார்
 

தமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913- 01.09.1980)
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.