Sunday, February 17, 2013

வழிதெரியாமல் 8 கி.மீ. அதிகம் ஓடினேன்! இளமையின் இரகசியம் !

வயதாகிவிட்டால் மனிதன் பல விஷயங்களில் முடங்கி விடுகிறான். அல்லது "வயதாகிவிட்டது பேசாமல் இரு' என பிறரால் முடக்கப்படுகிறான். அதனையும் மீறி பலர் பலவிதமான சாதனைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.                               

                                                                                சிவகாசி   டி.டி.இராஜேந்திரன்

                   
 70 வயதிற்கு மேலும் பலர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சாதனை செய்து சரித்திரத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி, ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் முதியவர்களே ஆர்வத்துடன் பல செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் டி.டி.ராஜேந்திரன், 77 வயதிலும் உற்சாகமாக தினசரி பத்து கிலோமீட்டர் தூரம் ஓடுகிறார். இவர் முதியோர் ஓட்டப்பந்தயத்திலும், நடைபோட்டியிலும் மாநில அளவில் பல தங்கப் பதக்கங்களையும், தேசிய அளவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார். வெற்றியின் ரகசியம் குறி த்து அவரிடம் கேட்டோம்.

எப்போது முதல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டீர்கள்?

பல ஆண்டுகளாக தினசரி ஓடும் பழக்கம் உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு ஓடத் தொடங்குவேன். சிவகாசியில் உள்ள நான்கு ரத வீதியையும் பத்து முறை சுற்றி ஓடுவேன்.

ஒருநாள் ஓடிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓப்பன் மாரத்தான் போட்டி சிவகாசியில் நடைபெற்ற உள்ளது என்ற விளம்பர போர்டினை பார்த்தேன். நாமும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் என்ன என்று நினைத்து போட்டியில் கலந்து கொண்டேன். இப்போட்டி 2010ஆம்ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதி சிவகாசியில் நடைபெற்றது. போட்டியின் தூரம் 42.5 கிலோமீட்டர் தூரம். வழிதெரியாமல் கூடுதலாக 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி 6.30 மணி நேரத்தில் ஓடி வந்தேன். இதில் எனக்கு பரிசு எதுவும் கிடைக்கா விட்டாலும், எனது முயற்சியைப் பாராட்டி அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுஜிதாமஸ் வைத்யன் சான்று வழங்கினார். பின்னர் முதியோர் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

பின்னர் எந்தெந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றீர்கள்?

21.8.2010 அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின மாஸ்டர் ஓப்பன் ஓட்டப்பந்தயப் போட்டியில் 70 முதல் 75 வயது பிரிவில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயதில் 35 நிமிடம் 51 விநாடியிலும், 5000 மீட்டர் நடைபோட்டியில் 41நிமிடம் 29 விநாடியிலும் வந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றேன்.

29-வது தமிழ்நாடு முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் 2011 ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெற்றது. இப் போட்டியை விருதுநகர் மாவட்ட முதியோர் தடகளக் கழகம் நடத்தியது. மாநில அளவிலான இப் போட்டியில் 5000 மீட்டர் தூரத்தை 29 நிமிடம் 21 விநாடியில் ஓடிவந்து தங்கப்பதக்கம் பெற்றேன். அதில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயதத்தில் 1 மணி 15 நிமிடத்தில் ஓடிவந்து தங்கப்பதக்கம் பெற்றேன்.

2011 பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை தேசிய அளவிலான முதியோர் தடகளப் போட்டி சண்டீகரில் நடைபெற்றபோது, அதில் பங்கு பெற்றேன். கடுமையான குளிர் இருந்தது. பரிசு எதுவும் கிடைக்கவில்லை. 2012 ஜனவரி 7,8 தேதிகளில் தமிழ்நாடு முதியோர் தடகளக் கழகம் சார்பில் 30-வது சாம்பியன்ஷிப் போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றன. மாநில அளவிலான இப் போட்டியில் 75 வயது பிரிவில் கலந்து கொண்டு 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.

2012 பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதிவரை தேசிய முதியோர் தடகளக் கழகம் சார்பில் 33-வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8 நிமிடம் 12 விநாடியில் ஓடிவந்து மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றேன்.

விருதுநகர் மாவட்டத்திற்கு கிடைத்த முதல் தேசிய அளவிலான பதக்கமும் இதுதான். 2012 ஆகஸ்ட் 19,20 தேதியில் சென்னை முதியோர் தடகளக் கழகம் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 5 கிலோமீட்டர் நடைபயணத்திலும், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கம் பெற்றேன். தமிழ்நாடு முதியோர் தடகளக் கழகம் சார்பில் ஈரோட்டில் 2012 டிசம்பர் 29,30-ம் தேதிகளில் 31-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 5 மீட்டர் நடைப்போட்டியில் இரண்டாமிடமும், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் பெற்றேன்.

பந்தயங்களில் வெற்றி பெற எந்த முறையைக் கையாளுகிறீர்கள்?

5000 மீட்டர் ஓட்டபந்தயம் என்றால் 25 சுற்று ஓட வேண்டும். நான் இறுதி சுற்றில் எனது பலத்தை முழுவதும் உபயோகித்து ஓடி, எல்லைக்கோட்டை தொட்டுவிடுவேன். பந்தயத்தில் கலந்து கொள்ளுவதற்கு சுமார் இரண்டரை மணிநேரத்திக்கு முன்னர் இட்லி அல்லது பிரட் ஜாம் சாப்பிடுவேன்.


இளம் வீரர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?

எந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டாலும், ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை வேண்டும். தோல்வியடைந்துவிட்டால் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். தினசரி பயிற்சி அவசியம்.                                                                                                             





நன்றி :- தினமணி, ஞாயிறு கொண்டாட்டம், சந்திப்பு-எஸ்.பாலசுந்தரராஜ்

0 comments:

Post a Comment

Kindly post a comment.