Tuesday, January 1, 2013

கோவையில் இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள் -

கோவை மாநகராட்சியின் பல இடங்களில் துவக்கப் பள்ளிக் கட்டடங்கள் மிக மோசமாகப் பழுதடைந்துள்ளன.

இக்கட்டடங்களை இடிப்பதற்கு கல்வித் துறையினர் பல ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறையினர் இதுவரை அனுமதி தரவில்லை.

அரசைப் பொறுத்தவரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து முடிந்தபின்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த பின்தான் பள்ளியில் ஓலை மற்றும் ஓடு வேய்ந்த கட்டடங்கள் இருக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது.

இதேபோல, பள்ளிப் பேருந்து மோதி பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோவை மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட குனியமுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இக் கட்டடங்கள் பூட்டப்பட்டுள்ளன. ஆனாலும் பள்ளிக் கட்டடத்தின் மீது சாய்ந்துள்ள மரத்தின் மீது குழந்தைகள் மதிய நேரத்தில் விளையாடிக் கொண்டுதான் உள்ளனர்.

மரத்தின் மீது விளையாடும் குழந்தைகள் தவறி விழுந்தாலோ அல்லது விளையாடும்போது கட்டடம் இடிந்து விழுந்தாலோ பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தன்னாசி கூறுகையில், பள்ளிக் கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுவரை கட்டடத்தை இடிப்பதற்கு எவ்வித அனுமதியும் தரவில்லை என்றார்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரையில் கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே சுமார் 40-க்கும் மேற்பட்ட பழுதான கட்டடங்களை இடிப்பதற்காக பொதுப்பணித்துறையின் கட்டடப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு கட்டடத்தைக் கூட இடிப்பதற்கு பொதுப்பணித் துறையினர் முன்வரவில்லை.

இப்போதைக்கு கட்டடங்களுக்கு ஆபத்தில்லை. ஆனால் கடும் மழை பெய்தால் எந்த நேரமும் ஆபத்துக் காத்திருக்கிறது. ஆபத்துக்கு முன் கட்டடத்தை இடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.                                                                                       

நன்றி ;-தினமணி, 31-12=2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.