Tuesday, January 1, 2013

மக்கள் நீதிமன்றம் மூலம் 30 வழக்குகளுக்கு தீர்வு !

திருத்துறைப்பூண்டி: வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றத்தில் நடந்த முகாமில், ஒரேநாளில் 30 வழக்குகளில் சமரசம் பேசி தீர்வு காணப்பட்டு, 22.62 லட்சம் ரூபாய் கடன் தொகை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருத்துறைப்பூண்டி வட்ட, சட்ட பணிகள் சார்பில், மக்கள் நீதிமன்றம் திருத்துறைப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை ஆகிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில் பலதரப்பட்ட கடன்கள் பெற்று, திரும்ப செலுத்தப்படாமல் இருந்தது குறித்து, 150 வழக்குகள், சமரசம் அடிப்படையில் பேசி மக்கள் நீதிமன்றம் சார்பில் தீர்வு காண எடுத்துக்கொள்ளப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சிவசாமி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பரமேஸ்வரன், வக்கீல் சங்க செயலாளர் பாலமுரளி ஆகியோர் முன்னின்று, முகாமை நடத்தினர்
.
இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர்கள் திருத்துறைப்பூண்டி ஸ்ரீதரன், முத்துப்பேட்டை ரகுநாதன், தில்லை விளாகம் வீராச்சாமி, கட்டிமேடு சந்திரன் பங்கேற்றனர்.

முகாமில், 30 வழக்குகளில் இருதரப்பினர் முன்னிலையிலும் சமரசம் பேசி, 22 லட்சத்து, 62 ஆயிரத்து, 89 ரூபாய் கடன் தொகை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முகாம் தினத்திலேயே, 49 ஆயிரத்து, 500 ரூபாய் நீதிமன்றத்தில் வசூல் செய்யப்பட்டது.

முகாம் ஏற்பாட்டை வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் ரத்தினசபாபதி செய்திருந்தனர்.


                                                                                                                                                           
நன்றி :- தினமலர்                                        

0 comments:

Post a Comment

Kindly post a comment.