Wednesday, January 16, 2013

தலை துண்டிக்கப்பட்ட வீரரின் குடும்பத்துக்கு இராணுவத் தளபதி நேரில் ஆறுதல்



இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 8ம் தேதி சுட்டுக் கொன்றனர். ஹேம்ராஜ் என்ற வீரரின் தலையையும் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர். அவரது தலையைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் என ஹேம்ராஜின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்திய ராணுவத் தளபதி எங்களைச் சந்தித்து, ஹேம்ராஜ் தலையை ஒப்படைப்போம் என்று வாக்குறுதி அளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம் என்று அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், ஹேம்ராஜின் குடும்பத்தாரைச் சந்தித்து, கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் 6 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். இதற்கிடையில், இந்திய இராணுவத்தின் 65வது ஆண்டு விழாவில் நேற்றுப் பேசிய இராணுவத் தளபதி பிக்ரம் சிங், 'நமது வீரரின் தலையைத் துண்டித்ததை, ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நாட்டிற்காகத் தங்களின் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை இந்திய ராணுவம் உணர்ந்துள்ளது. அந்தக் குடும்பங்களும், எங்கள் குடும்பம் தான்' என்றார்.

இதையடுத்து, இராணுவத் தளபதி பிக்ரம் சிங் தனது மனைவி சுர்ஜித் கவுருடன் மதுரா அருகே உள்ள கெய்ரார் கிராமத்திற்கு இன்று சென்றார். ஹேம்ராஜின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ராணுவ மரபுகளின்படி ஹேம்ராஜின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் இராணுவம் செய்யும்என்றுகூறினார்.                                                                                                                
நன்றி :- மாலைமலர், 16-01-2013                                                                                                          

0 comments:

Post a Comment

Kindly post a comment.