Saturday, January 26, 2013

மெல்லக் கொல்லும் "மின்குப்பை'...-டாக்டர் கு. கணேசன்



இந்தியாவில்,

உணவுக் கழிவுகள்,

சந்தைக் கழிவுகள்,

பிளாஸ்டிக் கழிவுகள்,

பாலிதீன் கழிவுகள்,

மருத்துவமனைக் கழிவுகள்

போன்றவற்றின் மூலம், சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய

நகரங்களில் மட்டும், வருடத்துக்கு 5 கோடி டன் குப்பை சேர்கிறது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தக் குப்பைகளை வெளியேற்றுவதற்கு, சரியான வழிமுறைகளை உருவாக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், இதுவரைக்கும், இந்தியாவில், எந்த மாநிலமும், திருப்திகரமான ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை.
இந்த நிலைமையில், குப்பை என்று நமக்குத் தோன்றாமலேயே, ஒரு பிரம்மாண்டமான குப்பை, இந்தியாவில் உருவாகிவருகிறது. அதுதான் எலெக்ட்ரானிக் குப்பை. அதாவது மின்குப்பை. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் எலெக்ட்ரானிக் கருவிகளின் வருகையால், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் மக்களை அச்சுறுத்துகின்ற புதிய குப்பை இது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் டன் மின்குப்பைதான் சேர்ந்தது. இது வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே வந்து, இந்த ஆண்டு முடிவில் சுமார் 8 லட்சம் டன் மின்குப்பை சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டும், ஒரு வருடத்தில், சுமார் 40 ஆயிரம் டன் மின்குப்பை சேர்கிறது. இந்தியாவில், மின்குப்பையை உருவாக்குவதில், மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.

வீட்டில் நாம் பயன்படுத்தும் டி.வி. பெட்டி,

குளிர்சாதனப் பெட்டி,

வாஷிங்மெஷின்,

கம்ப்யூட்டர்,

லேப்-டாப்,

செல்போன்,

மிக்ஸி,

மைக்ரோ-ஓவன்,

ஏர்-கண்டிஷனர்,

ஸ்டீரியோ,

டி.வி.டி.

மியூசிக் பிளேயர்,

கேமரா தொடங்கி,

கையில் கட்டப்படும் டிஜிட்டல் கடிகாரம்,

சுவரில் மாட்டப்படும் பேட்டரி சுவர் கடிகாரம்

வரை எல்லாமே அவற்றின் பயன்பாடு முடிந்ததும் மின்குப்பையாகின்றன. இவற்றைக் குப்பையில் போட்டால் மக்குவதில்லை. எரித்தால் நச்சு வாயுவை வெளிப்படுத்தும். ஆகவே இவற்றை மறுசுழற்சி செய்வதே நல்லது.

ஆனால் இந்தியாவில் உருவாகும் மின்குப்பையில் சுமார் 5 சதவீதம் மட்டுமே முறையான மறுசுழற்சிக்குச் செல்கிறது. மீதி எல்லாமே இதர குப்பைகளுடன் சேர்ந்து மண்ணுக்குச் செல்கிறது அல்லது எரிக்கப்படுகிறது. இதில்தான் ஆபத்து உருவாகிறது என்று எச்சரித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை.

எலெக்ட்ரானிக் கருவிகளைத் தயாரிப்பதற்கு உதவுகின்ற உதிரி பாகங்களில், கடுமையான நச்சுத்தன்மை உள்ள வேதிப்பொருள்கள் குறைந்தது ஆயிரம் இருக்கும். இக்கருவிகளை முறைப்படி அழிக்காவிட்டால் இவற்றில் உள்ள நச்சுகள் காற்றில் கலந்தும், மண்ணில் கலந்தும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த நச்சுகள் கலந்த காற்றை, மனிதன் சுவாசிக்கும்போது, உடல் நலன் கெடும்; மண்ணில் கலக்கும்போது மண்ணும் நஞ்சாகி, நிலத்தடி நீரும் நஞ்சாகி விடுவதால் தாவரங்கள் அழியும், விவசாயம் பாதிக்கப்படும். இந்த நச்சுள்ள தாவரங்களை உண்ணும் விலங்குகளும் மடியும்.

உதாரணமாக, உலகம் முழுவதிலும் உற்பத்திசெய்யப்படும் பாதரசத்தில், சுமார் 25 சதவீதம், எலெக்ட்ரானிக் கருவிகளின் தயாரிப்புக்காகப் பயன்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டி.வி. பிக்சர் டியூபுகள், ஒளி தரும் விளக்குகள், செல்போன்கள், சென்சார்கள், தெர்மோஸ்டேட் எனப்படும் வெப்பக்கட்டுப்பாட்டு மின்கருவிகள், பேட்டரிகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கருவிகள், மண்ணில் புதைக்கப்படும்போது, பாதரசம், நிலத்தடி நீரில் கலந்து கிணற்றுநீர் மூலம் குடிநீராக வீட்டுக்கு வந்துசேரும். இதை மனிதர்கள் குடிக்க நேர்ந்தால் பாதரசம் மனித ரத்தத்தில் சிறுகச் சிறுகச் சேரும்; சில வருடங்களில், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

அடுத்ததாக காரீயம். இது கம்ப்யூட்டர் சர்க்யூட் போர்டிலும் பிரிண்டரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிப்பதுடன் சிறுநீரகம் மற்றும் இனப் பெருக்க உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. இதன் விளைவால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும். தந்தை ஆக முடியாது. அப்படியே குழந்தை பிறந்தாலும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும் வலிப்புநோய்கள் ரத்தநோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

கம்ப்யூட்டர் டிஸ்குகளிலும், டேட்டா டேப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்ற "குரோமியம் 6' எனும் வேதிப்பொருள், மரபுப் பண்புகளை நிர்ணயிக்கின்ற டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக, பிறவி ஊனமுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
கம்ப்யூட்டர் மதர்-போர்டுகள், டோனர், பிரிண்டர் முதலியவற்றில் இருக்கும் பெரிலியம், நுரையீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. பேரியம், இதயத்தையும், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளையும் மெல்ல மெல்ல சேதமடையச் செய்யும். புற ஊதாக் கதிர்வீச்சு உள்ள கருவிகளில் காட்மியம் பயன்படுத்தப்படுகிறது. இது, தொடக்கத்தில், தலைவலி, தசைவலியை உண்டாக்கும். பின்பு, சிறுநீரகத்தைப் பாதித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஒரு கம்ப்யூட்டரைத் தயாரிக்க சுமார் 7 கிலோ பிளாஸ்டிக் பயன்படுகிறது. பிளாஸ்டிக், மனித குலத்தின் எதிரி என்பது எல்லோருக்கும் தெரியும். இதை எரிக்கும்போது டயாக்சின் எனும் நச்சு வாயு வெளியேறுகிறது. இதை சுவாசித்தால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் தீவிரமடைந்துவிடும்.

அடுத்ததாக, இதையும் சொல்லியாக வேண்டும்.

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் கோலோச்சும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், தங்களிடம் பழுதான நிலையில் உள்ள அல்லது காலாவதியான மின்சாதனப் பொருள்களையும் மென்சாதனப் பொருள்களையும் மொத்தமாக ஏலத்தில் விற்றுவிடுகின்றன.

இவற்றை வாங்கும் சிறு வியாபாரிகள் இந்த மின்சாதனங்களில் உள்ள உதிரி பாகங்களை சந்தைக்குக் கொண்டுவந்து, குறைந்த விலையில் விற்கின்றனர். சில்லரை வியாபாரிகள் இந்த உதிரி பாகங்களை வாங்கி, குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கின்றனர். பழுதான, பாதுகாப்பில்லாத இந்த மின் மற்றும் மென்சாதன பாகங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தையின் உடல்நலனைக் கெடுத்துவிடும் ஆபத்து நிறைந்தது.

மின்குப்பையால், இத்தனைப் பிரச்னைகள் ஏற்படுவதை, இந்திய மக்கள் இன்னமும் முழுவதுமாக உணரவில்லை என்பதுதான் சோகம். மின்குப்பை உற்பத்தியில், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்திலும், இதே நிலைமைதான். தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், தொலைக்காட்சி ஊடகங்கள், அரசியல் சாரா இயக்கங்கள் எல்லாமே, இந்தப் பிரச்னையில் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் கவலைக்குரிய விஷயம்.

தமிழக அரசு, 2010-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து மின்குப்பை கொள்கையை ஏற்படுத்தியது. இது, 1989-இல், ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட, இடர் தரும் திடக்கழிவு மேலாண்மைச் சட்டத்தின் மறுவடிவமாகவே, இருந்தது. தமிழக மக்களிடம், மின்குப்பை குறித்து, போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது, இந்தத் திட்ட அம்சங்களில் ஒன்று. என்றாலும், பொதுமக்களிடம், இவையெல்லாம், பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

ஆனால், மனித இனத்தை, மெல்ல மெல்லக் கொல்லும், மின்குப்பையின் ஆபத்து குறித்து, மேல் நாட்டினர் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற பெரிய நாடுகள் மட்டுமன்றி, செüதி அரேபியா, மலேசியா போன்ற சிறு நாடுகள்கூட அங்கு உருவாகும் மின்குப்பையை அவர்கள் நாட்டில் அழிப்பதில்லை. அப்படிச் செய்தால் அவர்கள் நாட்டின் சுற்றுச்சூழல் கெட்டுவிடும் என்று அஞ்சி சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மறுசுழற்சிக்காக, அனுப்பிவிடுகின்றன. இங்குதான், அவை குறைந்த செலவில், மறுசுழற்சி செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. வெளிநாடுகளிலிருந்து வரும் மின்குப்பை முழுவதையும், முறைப்படி உரிமம் பெற்று, மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள், இந்தியாவில் மிகக் குறைவு. பணத்துக்கு ஆசைப்பட்டு, தகுந்த உரிமம் பெறாத, போலி நிறுவனங்கள்தான் மறுசுழற்சி செய்கின்றன. அப்படிச் செய்யும்போது, அதன் நச்சுகளால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, இந்த நிறுவனங்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதனால், காற்று மாசடைந்து, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பலியாகிறார்கள்.

நகரங்களில், மின்குப்பையைத் தரம் பிரித்துச் சேகரிப்பதற்குத் தனியார் முகமைகளை நியமிக்கும்போது அவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும். இதில் தவறு ஏற்படும்போது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்கக் கூடாது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மின்குப்பைகளை மக்கள் எரிப்பதையும் புதைப்பதையும் தடுக்க சரியான திட்டங்களும் சட்ட வழிகாட்டுதல்களும் தேவை. அதேநேரத்தில், மின்குப்பையை தாராளமாக மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கும் அதை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு, அரசு மானியம் தருவது உள்ளிட்ட சலுகைகளை அளித்து அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்னையில், அரசு இயந்திரம் பழுதின்றி செயல்படும்போது, பொதுமக்களும், அரசின் ஆக்கப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். உபயோகித்து முடித்த செல்போனையோ, டி.வி.யையோ, கம்ப்யூட்டரையோ, பேட்டரிகளையோ, தெருக்குப்பையில் எறிந்துவிடக்கூடாது. பதிலாக, மக்காத குப்பை என்று தரம் பிரித்து, குப்பைகளைச் சுத்தப்படுத்தும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

எந்த ஒரு எலெக்ட்ரானிக் கருவி என்றாலும், அது பயன்பாட்டில் இல்லை என்றால், திரும்பவும் அதன் தயாரிப்பாளரிடமே குறைந்த விலைக்குக் கொடுத்துவிடலாம்.

தமிழக அரசு, சென்னையில் மட்டும், 21 மின்குப்பை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு உரிமம் தந்துள்ளது. அவற்றுக்கு நம் மின்குப்பைகளைத் தந்துவிடலாம்.

நல்ல பயன்பாட்டில் உள்ள, கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன் போன்றவற்றைத் தரம் உயர்த்துவதற்கு வேண்டுமானால் மாற்றலாம். மாறாக, அழகுக்காகவும், புதிய வடிவத்துக்காகவும், இவற்றை அடிக்கடி மாற்றும் பழக்கத்தைத் தவிர்த்தால், மின்குப்பை சேர்வதைக் குறைக்கலாம்.

இவ்வாறு, நாம் ஒவ்வொருவரும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான், மின்குப்பையால் ஏற்படும் அழிவையும், ஆபத்தையும் ஓரளவுக்காவது தடுக்க முடியும்.

நன்றி :-தினமணி, 26-01-2013                                                                                             





0 comments:

Post a Comment

Kindly post a comment.