Saturday, January 26, 2013

குடியரசுக் கொண்டாட்டம்!"நீதியைத்தேடி.."
13:45 (3 hours ago)

to me

New post on நீதியைத்தேடி..

குடியரசுக் கொண்டாட்டம்!

by neethiyaithedi

உலகில் பல குடியரசு நாடுகள் உள்ளன. அவைகளில் பல தாங்களுக்கு தாங்களே மிகப்பெரிய குடியரசு நாடு என சொல்லிக் கொள்கின்றன. நாமும் அப்படித்தாம்.  
2000 ஆம் ஆண்டில் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய போது, நமது நாடு எப்படி உலகிலேயே மிகப்பெரிய குடியரசாக இருக்க முடியும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அதற்கான விடை கிடைக்க சுமார் ஆறு வருடங்களானது.
ஏனெனில், எனக்கு தெரிய குடியரசு என்பதற்கான விளக்கம் என்ன என்பது எந்த சட்டத்திலும், பள்ளிக்கல்வி பாட திட்டத்திலும் கூட இல்லை. இது குடியரசு நாட்டில், குடியரசுக்கு கிடைத்த (அவ)மரியாதையே!
மக்களாட்சி என்று சொல்லப்படும் குடியரசு என்பதற்கு, ‘‘மக்கள் தங்களைத் தாங்களே  ஆள்பதற்காக, தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப்படுவதே’’ என்ற கருத்தே பரவலாக இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல; எல்லா நாட்டிலும் குடிமக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். மாறாக, ஆடு, மாடுகள் அரசை தேர்ந்தெடுப்பது இல்லை.  
தனி மனிதரான நாம், நமக்காக நாமே சில கொள்கைகளை, கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறோம் அல்லவா? அதுபோல, வெள்ளையர்களின் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும், இந்தியக் குடி மக்களாகிய நாம், நமது அடிப்படை உரிமை, சம உரிமை, சமய உரிமை, வழிபாட்டு உரிமை மற்றும் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை உட்பட, பலவற்றை உள்ளடக்கி வரையறை செய்து கொண்ட, ‘‘உறுதிமொழிக் கடப்பாட்டு ஆவணமே இந்திய அரசமைப்பு!’’.
இதனை ஆங்கிலத்தில் Indian Constitution என்கிறோம். இதனைத் தமிழில் மொழி பெயர்க்கும் போது, ‘‘இந்திய அரசியலமைப்பு’’ என்பதே அதிகாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு என்கிறது இந்திய குடியரசு.
இதனைத்தான் நாம் வழக்கத்தில் ஆட்சியாளர்களான அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரித்தான சட்டம் என்பது போல, ‘‘இந்திய அரசியல் சட்டம்’’ என நாம் தவறாகச் சொல்கிறோம். காரணம், சினிமா உட்பட பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவைகளினாலேயே இது அரசியல்வாதிகளின் நல்வாழ்வுக்கான சட்டம் என்கிற தவறான முடிவுக்கும் வந்து விட்டோம்.
உண்மையில் இதில் நமது நாட்டில் என்னென்ன துறைகள் இருக்க வேண்டும், அத்துறைகள் எப்படி எப்படி எல்லாம் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்கான அனைத்து விடயங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இதனை ‘‘இந்திய சாசனம் அல்லது இந்திய உறுதிமொழி ஆவணம்’’ என்று சொல்வதே மிகச் சரியானதாக இருக்கும்.   
இதில் வரையறை செய்யப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு, சாதாரண குடிமக்கள் முதல் குடியரசுத் தலைவர் வரை கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதாவது, இதற்கு உட்பட்டுத்தான், நமது இந்தியத் தாய்த்திருநாட்டை நாம் இயக்க வேண்டும்.
ஆனால், பல விடயங்களில் இயக்கிக் கொண்டிருப்பது இதற்கு புறம்பாகத்தான். இதற்கான காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும், நாம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இல்லாமல் இருப்பதுமே ஆகும்.
இதில் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள முக்கியமான இரண்டு வித்தியாசங்கள் பலருக்கும் புரிவதில்லை. எனக்கும் கூட சட்ட ஆராய்ச்சியில் இறங்கிய பின்னரே தெரிய வந்தது. இதில், ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலை பெற்ற நாளைத்தாம், சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிகிறது.
ஆனால், நாம் இந்திய சாசனம் என்கிற இந்திய அரசமைப்பு செயலுக்கு வந்த நாளைத்தாம், ‘‘நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை’’.
மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகளின் சார்பாக, டில்லி செங்கோட்டையில் அல்லது அந்தந்த மாநிலச் சட்ட மன்றங்களில் யார் தேசியக்கொடியை ஏற்றுகிறார்கள் என்பதில் பலருக்கும் தெரிவதில்லை.
சுதந்திர தினத்தன்று முறையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தலைவரான பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களாலும், குடியரசுத் தினத்தன்று மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பெற்றவர்களான குடியரத்தலைவர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களே தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்பது கூட நமக்கு தெரிவிக்கப்படாமலும், தெரியாமலும், தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அறவே இல்லாமலும் இருக்கிறோம்.  
26-01-2013 ஆன இன்று, நமது 64-வது மூத்தக் குடியரசைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வரிய தருணத்திலாவது, இந்திய அரசமைப்பைப் பற்றி தெள்ளத்தெளிவாக தெ(ளி)(ரி)ந்து கொள்வோம்.
இந்த அரசமைப்பில், குறிப்பிட்ட காலம் நாட்டை ஆட்சி செய்யத் தேவையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் என்ற கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றவர்களை குடியரசாக ஆள பொறுப்பேற்கச் செய்வது, முதல் கடமை!
இப்படி, குடிமக்களால், மக்களால், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பவதையே முறையே குடியரசு, மக்களாட்சி, ஜனநாயகம் என, பல்வேறு பெயர்களில் சொல்கிறோம்!
இந்த அரசின் மூலம் மக்களின் உரிமைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் சட்ட திட்டங்களை வகுத்து, அதனைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஊழியர்களை நியமிப்பது, சட்ட திட்டங்களை குடிமக்கள் மீறும் போது அல்லது ஊழியர்கள் செயல்படுத்தாத போது ஏற்படும் உரிமை மீறல் அல்லது கடமை தவறுதல் ஆகிய குற்றங்கள் மேன்மேலும், நடை பெறாத வண்ணம் தடுத்து நிறுத்தி, நியாயத்தை நிலைநாட்ட தேவையான நீதித்துறை என்ற கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவைகள் அரசின் பிரதான கடமைகள்.
சகோதரத்துவம், சமத்துவம், சமநீதி ஆகியவற்றை காக்க, உண்மையைக் கக்க வைக்க வேண்டியதும், கண்டறிய வேண்டியதும் நீதித்துறையின் பிரதாண கடமையாகும்.
இவைகள் எல்லாம் சரியாக நடக்க தேவையான சட்டங்களை அமல்படுத்தி,  கண்காணித்து, கலந்து ஆலோசித்து, சூழ்நிலைக்கு ஏற்ப, தேவையான முடிவை எடுக்க வேண்டிய பிரதான கடமை குடியரசுத் தலைவருடையது. தேவைப்பட்டால் நெருக்கடி நிலையைக் கூட அமல்படுத்தும் அதிகாரமும் இவருக்கு இருக்கிறது.
எனவேதான், அவர் குடியரசின் முதல் குடிமகன்(ள்) என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தவிர மற்றவர்கள் எவருக்குமே தாங்கள் எத்தனையாவது குடிமகன்கள் அல்லது குடிமகள்கள் என யாருக்கும் எதுவும் தெரியாது. இனியும் தெரிய வாய்ப்பில்லை.
மொத்தத்தில், எவரும் தனது அதிகாரத்தை, துஷ்பிரயோகம் செய்ய முடியாத வகையிலும், அப்படியே செய்தாலும் அதனை மற்றவர்கள் சரி செய்து விடும் நிலையிலேயே பின்னிப் பிணைத்து இந்திய அரசமைப்பில் அதிகாரங்கள் பகரப்பட்டுள்ளன.
இதனை ரத்தினச்சுருக்கமாக ‘‘பரவலாக்கப்பட்ட அதிகாரம்’’ எனலாம்.
அதாவது சட்டமானது தனது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து வைக்காமல் நிர்வாகம், செயல், நீதி மற்றும் மக்கள் என நாலாபுறமும் பிரித்துக் கொடுத்துள்ளது.
இதில் அதிகாரத்தில் இல்லாத குடிமக்களின் பங்கு மிகவும் அலாதியானது என்றே சொல்வேன். ஏனெனில், மற்ற முத்துறைகளிலும் உள்ளவர்கள் அவ்வவ்துறைகளில் மட்டுமே கடமையை ஆற்ற முடியும். மீறினால், குறுக்கீடு இருக்கிறது என்ற குற்றச்சாற்று எழும். அப்படி எழுந்தால் நியாயமான குறுக்கீடு கூட, அடங்கிப் போகும்.
ஆனால், மக்களாகிய நாம் அப்படியல்ல. நமது தகுதியை, திறமையைப் பொறுத்து முத்துறையையுமோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டில் நமக்கான கடமையை அதிகாரமாக செலுத்தி, முத்துறையையும் முறைப்படுத்த முடியும்.  
இப்படிப்பட்ட நாட்டின் கட்டமைப்பை நாம் புரிந்து கொள்வதென்பது மிக மிக எளிது.
நாட்டில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு அம்மா என்ற பெயரை வழங்குவது அப்பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையே! அம்மாதான் அக்குழந்தைக்குத் தந்தை யார் என்பதை அடையாளம் காட்டுகிறாள். இதுதான் குடும்பத்தின் கட்டமைப்பு. இதுபோலவேதான், நாட்டின் கட்டமைப்பும்.
மக்கள் அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசு தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற பல்வேறு அதிகார பீடங்களை ஏற்படுத்துகிறது. அரசிடம் வேலைபார்ப்பவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர். அதிகார பீடங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அரசின் அதிகாரம் பெற்ற ஊழியர்கள் ஆவர்.
பொதுவாக இவ்விரண்டு வகையான ஊழியர்களையும்தாம், ‘‘பொது ஊழியர்கள்’’ என்கிறோம். குடிமக்களின் வரிப்பணத்தில் இருந்து கூலி பெறும் கடைநிலை ஊழியர்களான தோட்டிகள் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவருமே மக்களுக்கான, பொது ஊழியர்கள்தாம். ஊழியர்கள் என்றால் கேவலமானவர்கள் அல்ல. எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஊழியர்கள்தாம்.
ஆனால், அயோக்கிய ஆங்கிலேயர்கள் தங்களுக்கு தாங்களே பில்டப் கொடுத்துக் கொண்டது போல, நமது பொது ஊழியர்களும் தங்களுக்கு தாங்களே பெருமை தேடிக் கொள்ளும் விதமாக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து வந்த அதிகாரி, அலுவலர், ஆளுநர், நீதிபதி, நீதியரசர், குடியரசுத் தலைவர் போன்ற பல்வேறு பெயர்களைக் கௌரவமாகச் சூட்டிக் கொண்டுள்ளனர்.
இது போதாதென்று, அவர்களாகவே மாண்புமிகு வேறு போட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கு மாண்பு என்பது, தங்களது பண்பான நடத்தைகளுக்காக மற்றவர்கள் தரும் மரியாதையே அன்றி, தாங்களே போட்டுக் கொள்வதல்ல என்கிற இங்கிதம் தெரியாதவர்கள். இவைகளினாலேயே இவர்களையெல்லாம், ‘‘தான் என்கின்ற அகங்காரம் குடிகொள்கிறது’’.  
இதனாலேயே, யோக்கியர்கள் இதுபோன்ற ஊழியங்களுக்குப் போட்டி போடுவதுமில்லை; போவதுமில்லை; அப்படியே போட்டி போட்டுப் போனாலும் கூட போட்டுக் கொள்வதில்லை.  மாறாக, மக்களைப் போட வைக்கிறார்கள். இவர்களே உண்மையான பொது ஊழியர்கள்.
ஆங்கிலேயர் அடிமை ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த இவ்வகங்காரப் பழக்க வழக்கம் குடியரசு நாட்டிலும் நீடித்துக் கொண்டுதான் இருப்பதும், அதற்கு நாம் காரியம் சாதிக்க வேண்டும் என்பதற்காக துணை நிற்பதும் கொடுமையிலும் கொடுமை.
இதனைத் தகர்க்கும் முயற்சியாக நான் இவர்களில் எவருக்காவது கடிதம் எழுத வேண்டியிருந்தால், மரியாதைக்குரிய பொது ஊழியரே என்றுதான் எழுதுகிறேன். நீங்களும் எழுதிப் (பழகு) (பாரு)ங்கள். 
இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 21 இன்படி, நமக்கான ஊழியர்களை எல்லாம் பொது ஊழியர்கள் என்றே சொல்ல வேண்டும் என்பதால், இப்படி எழுதுவதில் சட்டப்படியே எந்தத் தவறும் இல்லை என்பதை நீங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டால், நமக்கான பொது ஊழியர்களைப் பார்த்து நாம் பயப்படவோ, அவர்களின் ஆங்கிலேய அகங்காரத்திற்கு அடிபணியவோ வேண்டியதில்லை.  
மாறாக, அவர்கள் உங்களின் சட்ட அறிவைக் கண்டு கடமையைச் செவ்வனே செய்வார்கள்; செய்யவில்லை என்றாலும் செய்ய வைக்க முடியும். செய்வீர்களா என்பதே எனது கேள்வி?.
சரி, உலகிலேயே நாமே மிகப்பெரிய குடியரசு என்கிற விசயத்திற்கு வருவோம்!
நான் இந்தியன் என்பதற்காக நமது சட்டங்களைப் புகழ்ந்து பேசுபவன் அல்ல. மாறாக, நியாயத்துக்குப் புறம்பான சட்டங்களை சாடுவதும் உண்டு. எனது 13 வருட சட்ட ஆராய்ச்சியில், ''உலகில் நாமே மிகப்பெரிய குடியரசு'' என்கிற முடிவுக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டேன்.
ஏனெனில், உரிமையைப் பொறுத்த வரையில், ஒருவர் எந்த நாட்டை, மதத்தை, இனத்தை, மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு அவர்களின் தாய்த்திரு நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ, அவைகளை, உலகில் உள்ள பல குடியரசு நாடுகளில், அப்படியே வழங்கும் ஒரேநாடு, நமது இந்தியா மட்டுமேதாம்!
சரி! உரிமையில் அவரவர்களது அதே உரிமை என்றால், தண்டனையில் அவரவர்களது தண்டனையா என்றால் இல்லை. மாறாக, யாவருக்கும் பொதுவான தண்டனையே என்பது மிகப்பெரிய குடியரசுக்கு மேலும் கூடுதல் வலுசேர்க்கிறது.  
இது குறித்த அடிப்படையான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத ஒரே காரணத்தினாலேயே, நாம் நமது மாபெரும் குடியரசின் மகிமையை உணராமல் இருக்கிறோம்.
குடியரசை இன்றொரு நாள் மட்டும், தங்களைத் தாங்களே மாண்பானவர்களாகக் கருதும் மாண்புமிகுக்கள் உலக சம்பிரதாயத்திற்காக கொண்டாடுவது, குடியரசுக் கொண்டாட்டமல்ல.  
மாறாக, நாம் இன்று அவர்களுக்கு ஊழியத்தின் பேரில் கொடுத்திருக்கும் நல்வாய்ப்பே!
நமக்கு, இந்திய சாசனம் அறிவுறுத்தியுள்ள சட்டப்படியான (ச/சு)மூக கடமை உணர்வோடும், உரிமை உணர்வோடும் ஒவ்வொரு நாளும் உறவாடுவதே, உலகின் மாபெரும் குடியரசில் உங்களுக்கான உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்.
இந்திய குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும், குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

neethiyaithedi | January 26, 2013 at 1:43 pm | Tags: அதிகாரி, அலுவலர், ஆளுநர், இந்திய அரசமைப்பு, குடியரசு தினத்திற்கும், குடியரசு நாடுகள், குடியரசுத் தலைவர், சகோதரத்துவம், சம உரிமை, சமத்துவம், சமநீதி, சமய உரிமை, சுதந்திர தினத்திற்கும், செயல், ஜனநாயகம், நமது அடிப்படை உரிமை, நிர்வாகம், நீதி மற்றும் மக்கள், நீதிபதி, நீதியரசர், பொது ஊழியர்கள், மக்களாட்சி, மாண்புமிகு, வழிபாட்டு உரிமை | Categories: Uncategorized | URL: http://wp.me/p2Nvmx-9b
Comment    See all comments
Unsubscribe or change your email settings at Manage Subscriptions.
Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://www.neethiyaithedy.org/?p=569

0 comments:

Post a Comment

Kindly post a comment.