Sunday, January 13, 2013

குடும்பச் சொத்துகளை விற்று அணை கட்டிய பென்னிகுவிக் !

ஆங்கிலேயே அரசு நிதி ஒதுக்காத நிலையில் தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணையைப் பொறியாளர் பென்னிகுவிக் கட்டி முடித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக பென்னிகுவிக் இந்தியாவுக்கு வந்தார். அப்போது சென்னை மாகாணத்தில் வைகை வடிநிலப் பரப்பில் பல முறை பருவமழை பொய்த்து மிகுந்த உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்ட பென்னிகுவிக் மிகுந்த வருத்தம் அடைந்தார். உணவுப் பஞ்சத்தைத் தடுக்கத் தீவிரமாக ஆலோசித்தார். அப்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் முல்லை, பெரியாறு ஆகியவை மேற்குப் புறமாகக் கேரளத்தில் பாய்ந்து அரபிக் கடலில் வீணாகக் கலப்பதைப் பார்த்தார். இதனைக் கிழக்குப் புறமாகத் திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதினார். இதற்காக பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டார். இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்த்தேக்கத்தை உருவாக்கித் தண்ணீரைக் கிழக்கு முகமாகத் திருப்பி அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றுக்கு திருப்பிவிட திட்டமிட்டார். இதற்கான திட்டத்தினை பென்னிகுவிக் தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு கன்னிமாரா முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளைப் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் உருவாகி கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக் கட்டங்களில் கிடைக்கவில்லை. இதனால் இங்கிலாந்து சென்ற பென்னிகுவிக், தனது குடும்பச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை 1895 அக்டோபரில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக்கால் திறந்து வைக்கப்பட்டது. பென்னிகுவிக் உருவாக்கிய முல்லைப் பெரியாறு அணையால் தென் தமிழக மாவட்டங்கள் பெரும் பயன் பெறுகின்றன. அணை மூலம் இப் பகுதிப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. குடிநீர்த்தேவையும் நிறைவேறுகிறது. நன்றி :- தினமணி, 13-01-2013

1 comments:

Kindly post a comment.