Saturday, January 19, 2013

பொது இடங்களில் தலைவர்களுக்குச் சிலை வைக்கத் தடை! * மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு



போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலும், பொது இடங்களிலும், சிலைகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடாது என, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

கேரளாவில், தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில், சிலை ஒன்றை நிறுவுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுநலனே மிகவும் முக்கியம். சாலைகள் எந்த ஒரு நபரின் சொத்தும் அல்ல; சாலைகளில் இடையூறு இல்லாமல், சுதந்திரமாகச் செல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது. அதனால், சாலைகளில், சிலைகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் அமைத்து, குடிமக்களின் உரிமையை பறிக்கக் கூடாது. இது போன்ற நடைமுறைகள் ஓரங்கட்டப்பட வேண்டும்.

சிலரைப் பெருமைப்படுத்துவதற்காக நிதியைச் செலவிடுவதற்குப் பதிலாக, அந்த நிதியை, ஏழைகளின் மேம்பாட்டிற்காக, அரசுகள் செலவிட வேண்டும். கேரளாவில், தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பிட்ட பகுதியில், தலைவர் ஒருவரின் சிலையை அமைக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்போதைய நிலை தொடர அனுமதிக்கப்படுகிறது.

ஆனாலும், இனிமேல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் சிலைகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்க, கேரள மாநில அரசு அனுமதி வழங்கக் கூடாது. இந்த உத்தரவு, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில், சாலைகளில்போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில், தெரு விளக்குகள் அமைப்பது போன்றவற்றிற்கு, எவ்வித தடையும் இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது போன்ற மனு ஒன்று, இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் உட்பட, அங்கீகாரமற்ற கட்டடங்கள் அனைத்தையும், மாநில அரசுகள் நீக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்                                                                                                           

நன்றி :-யாஹூ தமிழ் நியூஸ், 19-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.