Wednesday, January 23, 2013

மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களித்த பின் அத்தாட்சி சீட்டு !

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாக வாக்களித்த பின் ஒவ்வொரு வாக்குக்கும் அத்தாட்சி சீட்டு கிடைக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் வாக்களர்களுக்கு அத்தாட்சி சீட்டு கிடைக்கும் வசதியை இயந்திரத்தில் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இத்தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அசோக் தேசாய் கூறியது: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம், அனைத்து வாக்காளர்களுக்கும் அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை இப்போது பரிசோதனையில் உள்ளது.

நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்த பின்னர், முதலில் இடைத் தேர்தல், பின்னர் மாநில பேரவைத் தேர்தல், பின்னர் மக்களவை தேர்தல் என படிப்படியாக இது நடைமுறைப்படுத்தப்படும். சில மாதங்களில் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

பயன்பாட்டுக்கு எளிதாகவும், துல்லியம், நம்பகத்தன்மை உடையதாகவும் அத்தாட்சி சீட்டு வழங்கும் முறை இருக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் மிகக் கவனமாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்தும் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். வாக்குச் சீட்டு முறையிலேயே மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட மின்னணு வாக்குப் பதிவுக்குச் சென்று விட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியதையும், இந்த எந்திரங்களை தனியார் நிறுவனங்கள் தயாரிப்பதால் அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.                               
நன்றி;- தினமணி, 23-01-2013                             

0 comments:

Post a Comment

Kindly post a comment.