Tuesday, January 22, 2013

குடிப்பதைத் தடுப்போம்- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
















    குடிப்பதைத் தடுப்பதே
     கோடி கோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்து நாம்
     அன்புகொண்டு வெல்லுவோம்     (குடி)                        
    
      மக்களை வதைத்திடும்
     மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
     தொலைப்பதே துரைத்தனம்     (குடி)

பித்தராகி ஏழைகள்
     பேய்பிடித்த கோலமாய்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
     போனதிந்தக் கள்ளினால்     (குடி)
     
பாடுபட்ட கூலியைப்
     பறிக்குமிந்தக் கள்ளினை
வீடு விட்டு நாடு விட்டு
     வெளியிலே விரட்டுவோம்     (குடி)
     
கஞ்சியின்றி மனைவிமக்கள்
     காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
     வழிபறிக்கும் கள்ளினை     (குடி)
     
மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
     போனதிந்தக் கள்ளினால்
கைநடுக்கம் கால்நடுக்கம்
     கண்டதிந்தக் கள்ளினால்     (குடி)
     
தேசமெங்கும் தீமைகள்
     மலிந்ததிந்தக் கள்ளினால்
நாசமுற்று நாட்டினர்
     நலிந்ததிந்தக் கள்ளினால்     (குடி)
     
குற்றமற்ற பேர்களும்
     கொலைஞராவர் கள்ளினால்
கத்திகுத்துச் சண்டைவேண
     கள்ளினால் விளைந்ததே     (குடி)
     
குற்றமென்று யாருமே
     கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
     விதைப்பதென்ன விந்தையே!     (குடி)                                                                               

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=181&pno=107

0 comments:

Post a Comment

Kindly post a comment.