Wednesday, January 2, 2013

ஆபாசமும், மதுவும்தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம்: ஞானதேசிகன் குற்றச்சாட்டு !


ஆபாசமும், மதுவும்தான் பாலியல் குற்றங்களுக்குக் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:-

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள விதிகளை நான் முழுமையாகப் படிக்கவில்லை.

ஆனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் பெண் நீதிபதி, பெண் அரசு வழக்கறிஞர்கள், பெண் காவலர்கள் மூலம் விசாரிக்கவும், டி.ஐ.ஜி., எஸ்.பி. அளவிலான போலீஸ் அதிகாரிகள் மூலம் விசாரணையைக் கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அறிகிறேன். இது வரவேற்கத்தக்கது.

திரைப்படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளும், பெண்களை மையப்படுத்தி வரும் ஆபாச விளம்பரங்களும், மது ஆகியவைதான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் காரணம்.

எனவே ஆபாசங்களைத் தடுக்கவும், மதுக்கடைகளை மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா தனித்துப் போட்டியிடுவதா என்பதை முடிவு செய்ய அந்தந்தக் கட்சிகளுக்கு உரிமை உள்ளது.

எனவே, ஜெயலலிதாவின் முடிவு குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை.

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துவதாக அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது. இதற்குப் பலமுறை நான் பதில் சொல்லிவிட்டேன்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது என்றார் ஞானதேசிகன்.

புத்தாண்டை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், ஞானதேசிகன் ஆகியோரைக் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சுப்பிரமணி தலைமையில் ஏராளமான நரிக்குறவர்கள் ஞானதேசிகனுக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.                                                                                                             
நன்ரி :-தினமணி, 02-01-2013                                                                                                      




0 comments:

Post a Comment

Kindly post a comment.