Thursday, January 17, 2013

இதயங்கனிந்த எம்.ஜி.ஆர். -இரா.செழியன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 96-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வேதனைகளும் சோதனைகளும், அவற்றை மீறி அவர் அடைந்த வெற்றிகளும், காட்டிய வற்றாத வள்ளல் தன்மையும் பற்றிக் குறிப்பிட அவருடைய வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் நினைவு கூர்கிறேன்.

எம்ஜிஆரை நான் நேரடியாகச் சந்தித்தது 1953 ஆகஸ்டு மாதத்தில். அப்பொழுது தி.மு.கழகம் மும்முனைப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. மூன்று வகையான போராட்டங்கள் ஜூலை 14 முதல் நடைபெறுமென தி.மு.கழகச் செயற்குழு ஜூலை 13 முடிவெடுத்தது.

(1) அப்பொழுதையக் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தியக் "குலக் கல்வி' திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் இல்லத்தின்முன் அறப்போர்.

(2) டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி என்று பெயர் மாற்றிடப் போராட்டம்.

(3) தமிழ்நாட்டில் கழகம் எடுத்த போராட்டங்களை "நான்சென்ஸ்' - முட்டாள்தனமானது என்று பிரதமர் நேரு கூறியதைக் கண்டித்து ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகியவையே அந்த மும்முனைப் போராட்டம்.

கழகச் செயற்குழு 1953 ஜூலை 13 கூடி இந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாகவே போராட்ட காலத்தில் முக்கியமானவர்களுக்கு பொறுப்புகள் பிரித்துத் தரப்பட்டன. வட சென்னைச் சூரியநாராயணச் செட்டித்தெருவில் "அறிவாலயம்' இடத்திலிருந்து வெளிவந்த கழக "நம் நாடு' நாளேட்டை நடத்திடும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. ஆயினும் செயற்குழு கூடிய ஜூலை 13 இரவே அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், மதியழகன், என்.வி. நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

சென்னை, டால்மியாபுரம் இவைகளை மையமாகக் கொண்ட போராட்டங்கள் மீது போலீஸாரின் கடுமையான அடக்குமுறை தாண்டவமாடியது. அத்துடன், தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தோழர்கள் தடியடி தர்பாருக்கு ஆளான செய்திகள் வந்தபடி இருந்தன. இரவு பகலாக "நம் நாடு' அச்சகத்திலேயே நான் தங்கிவிட்டேன், வரும் விவரங்களுக்குப் பதில் தரவும், செய்திகளை வரிசைப்படுத்தி வெளியிடவும். சென்னை மத்திய சிறைச்சாலையில் அண்ணாவிடம் நாள்தோறும் சென்று விவரங்களைச் சொல்லி, மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனை பெறுவதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது.

ஒரு நாள் காலை 11 மணி அளவில் எம்.ஜி.ஆர். கீழே வந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். தமிழ்ப் படவுலகில் அவர் வேகமாகத் தலையெடுத்துவரும் காலம். அவருக்கு முன்னதாக நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி ஆகியோர் கழகத்தில் தீவிரப் பங்கு வகித்தனர். ஆனால் அவர்கள் யாரும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அண்ணா கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம், நடிகர்களுக்குப் பலவகைகளில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் பொறுப்பும் இருக்கும். போராட்டத்தில் இறங்கினால் அவை பாதிக்கப்படும்.

ஆயினும் எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரி குமாரி' என்ற திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். அந்தப் படம் 1950-இல் வெற்றிகரமாக ஓடியது. அது முதல் கழகத்துடன் எம்.ஜி.ஆருடைய தொடர்பு ஆரம்பித்தது எனலாம். அதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடுடையவராக இருந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் பேச்சிலும் எழுத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டு 1952-இல் கழக உறுப்பினராகவும் ஆனார். திரையுலகில் மிகவும் சிறப்பான எதிர்காலம் அவருக்கு இருப்பதை அண்ணா உணர்ந்துகொண்டார்.

எம்.ஜி.ஆரும் அண்ணாவிடம் தனிப்பட்ட மரியாதையுடன். கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், கழகத்தின் தீர்மானங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றிலும் மிகவும் உறுதியான ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

"நம் நாடு' அலுவலகத்தில் கீழ்ப்பகுதியில் அச்சடிக்கும் வேலை நடைபெற்றது. மேல் தளத்தில் ஒரு நீண்ட அறையும், கீற்றுக் கொட்டகையும் இருந்தன. பெரும்பாலும், எழுதும் வேலைகள் மேல் தள அறையில் நடைபெறும். எம்ஜிஆர் வந்ததும் என்னருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, "மத்திய சிறையில் இருக்கும் அண்ணாவை நான் பார்க்கலாமா? அண்ணாவை ஒரு வாரத்துக்கு முன்பு பார்த்தபொழுது பேசிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது அவர், ஏதாவது முக்கியமானதாக இருந்தால் - அநேகமாக நாங்கள் சிறையில் இருந்தாலும் - செழியன் வெளியில்தான் இருப்பார். அவரைக் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதனால்தான் உங்களிடம் வந்தேன்' என்றார்.

"சிறையிலிருக்கும் அண்ணாவைப் பார்க்கச் செல்வது சற்று சிக்கலான பிரச்னை; அண்ணா குடும்பத்தினரும் நெருங்கிய கழகத்தினரும் பார்ப்பதற்கே மிகவும் நெருக்கடி இருக்கும். உடனடியாக என்னால் அதை நிர்ணயிக்க முடியாது. அண்ணாவுடன் இதுபற்றிப் பேசிவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன். ஆனாலும் நீங்கள் மீண்டும் இங்கு வரவேண்டாம். அண்ணாவின் பதிலை நான் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்' என்றேன்.

என் மனதில் முதலில் உண்டான தயக்கம், கழகப் போராட்டத்தில் எம்ஜிஆரும் பங்கு பெறுவதாகப் போலீஸார் நினைத்துவிடக்கூடாது என்பதுதான். சிறிது நேரமே அவர் பேசிக்கொண்டிருந்தாலும், அவரிடம் ஒருவகைப் பெருந்தன்மையும் பொறுமையும் இருந்தன. எம்ஜிஆர் வந்ததை இரண்டு நாள்களில் அண்ணாவிடம் தெரிவித்துவிட்டேன். அண்ணா, "நீ நினைப்பதுதான் சரியானது; போலீஸ் நடவடிக்கைகள் நம்மீது பாய்வதை விட அவர்மீதும் கடுமையாகப் பாயும். அதை நாம் தவிர்க்க வேண்டும். அதனால்தான் கழகத்தில் உள்ள நடிகர்களை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முன்னதாகவே நான் சொன்னேன்' என்றார்.

அண்ணா கூறியதை என் நண்பர் ஒருவர் மூலம் எம்ஜிஆருக்குத் தெரிவித்தேன். அண்ணா விடுதலையானதும் அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர். அடிக்கடி வருவார். அப்பொழுதெல்லாம் என்னிடமும் பேசுவார்.

திரைப்பாடல்களிலும் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகளிலும் அண்ணா பற்றிய குறிப்புகள் இருக்கும், அண்ணாவின் படமும் அவருக்கு அருகில் நேரடியாகத் தெரியும். "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்று திரையில் அவர் பாடினால், கொட்டகை அதிரும்; அந்த வரி அண்ணா, திமுக ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது என்று கழகத்தினர் ஆரவாரம் செய்வார்கள்.

1962 மக்கள் சபைக்கான பொதுத்தேர்தலில் அண்ணா திருச்சி பெரம்பலூர் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்டார். தேர்தலில் - அதுவும் நாடாளுமன்றத்துக்கு - போட்டியிட வேண்டிய அளவுக்கு நான் தயாராக இல்லை. அந்தத் தொகுதியில் எனக்கு அதற்கு முன் எத்தகைய தொடர்பும் பழக்கமும் கிடையாது.

ஆயினும் தேர்தல் துவக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எம்ஜிஆரைச் சந்தித்தபொழுது. அவர் மிக உற்சாகத்துடன் என்னிடம் பேசினார். "உங்கள் தொகுதியில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நாள்களில் நான் அங்கு வந்து விடுகிறேன். அப்பொழுது கூட்டங்களை மண்டபங்களில் வைத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5 என்று கட்டணம் போட்டு கழகத்துக்கான நிதிகளைச் சேர்ப்போம்' என்றார்.

அந்த வகையில் அவர் வந்ததும் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ரூ.1,000 அல்லது 1,200 கிடைத்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. கிடைத்த பணத்தை அந்தந்தத் தொகுதி சட்டசபை வேட்பாளரிடம் தந்துவிட்டேன். எம்ஜிஆர் வந்ததால் நல்ல பிரசாரமும் பண உதவியும் கிட்டின. மக்களிடமும் கழகச் செயலாளர்களிடமும் பெருத்த வரவேற்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கின.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகத்திலிருந்து எனக்குத் தரப்பட்ட பணம் ரூ.2,500 தான். அது ஒரு வாடகைக் காரை நாளொன்றுக்கு ரூ. 30-க்கு அமர்த்தவும் அதற்கான பெட்ரோல் செலவுக்கும் பயன்பட்டது. மற்ற வகைகளில் கூட்டங்கள் போடுவதையும் சைக்கிள் ஊர்வலம் வைப்பதையும் கழகத்தினரே செய்தனர். காங்கிரஸ் சார்பில், அங்கு இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் போட்டியிட்டார், அதற்கு உட்பட்ட ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்தாம் 1957 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை போதாதென்று டால்மியா சிமென்ட் தொழிற்சாலை முதலாளியின் பணமும் செல்வாக்கும் காங்கிரஸுக்குப் பெரும் உதவியாக இருந்தன.

முதலில் எம்ஜிஆர் ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் செய்த பிரசாரமும் பிறகு அண்ணாவின் பிரசாரமும் தொகுதியில் வேகமாகப் பரவின. கழகத் தோழர்களும், பொதுமக்களும், படித்த இளைஞர்களும் மிகவும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் தொகுதியில் எங்கும் தேர்தல் பணிகளைச் செம்மைப்படச் செய்தார்கள்.

1962 தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் தெரிந்ததே. நான் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி அடைந்தனர். ஆயினும் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோற்றுவிட்டது எங்களுக்குப் பேரிடியாக இருந்தது.

தேர்தலுக்குப் பிறகு அண்ணாவைச் சந்தித்தபொழுது என்னால் பேசமுடியவில்லை. என் துயரம் கண்களிலிருந்து நீராகச் சொரிந்தது. அண்ணா என்னைத் தட்டிக் கொடுத்து, "நீ பெற்ற வெற்றியை நான் பெற்ற வெற்றியாக நினைக்கிறேன். கவலைப்படாதே' என்றார். 1962 சட்டசபைத் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்தாலும் அது ஒருவகையில் நன்மையையே தந்தது; அவரை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தது. அங்கு அவருடைய வெளிப்படையான பேச்சு பிறரைக் கவர்ந்தது மட்டுமல்ல, அவர் ஐந்தாண்டு காலம் நான் இருந்த இல்லத்திலேயே தங்கியிருந்தார், அவருடைய நெருங்கிய உறவும் வாழ்வும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எனக்கு ஒரு முதல்தரமான வழிகாட்டியாக இருந்தன.

1967 தேர்தல் காலத்தில் எம்ஜிஆர் குண்டடிபட்டு சென்னை மருத்துவமனையில் படுத்திருந்தார். சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற கழக மாநாட்டில் - அங்குதான் ராஜாஜி, காயிதே மில்லத், பி. ராமமூர்த்தி ஆகியவர்களை வைத்து அண்ணாவினால் காங்கிரஸ் எதிர்ப்பு அணியை தமிழ்நாட்டில் உண்டாக்க முடிந்தது - கலந்துகொண்ட ராஜாஜி சொன்னார்: "படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். படுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இந்தத் தடவை ஜெயிக்கமுடியாது' என்று அவருக்குரிய அமைதியுடன் கூறியது மாநாட்டில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. அந்தத் தேர்தல் போட்டியில் "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' எம்ஜிஆர்தாம்.

"திரையுலகின் சிங்கம் எம்ஜிஆர்' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மலர் 1997- இல் வெளியிடப்பட்டது. அதை அண்மையில் கண்ணுற்றேன். அதில் எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அந்த மலரில் தரப்பட்டுள்ள அண்ணாவின் ஒரு கருத்து, " எம்ஜிஆர் கழகத்தின் கண்மணி, கலை உலகத்தின் நன்மணி; குணத்தில் தங்கம், கொதித்தெழுந்தால் சிங்கம்' என்பதாகும்.

சிங்கம் பீடு நடையுடன் வந்த வழியை திரும்பிப் பார்க்குமாம் - அதை அரிமா நோக்கு என்பார்கள். அதைப்போல் எம்ஜிஆர் திரையுலகில் புரிந்த சாதனைகளை சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் நடித்த படங்கள் 138. அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 117. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 17. என் தங்கை படம் 350 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.

எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:

1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.

1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.

1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.

1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.

1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.

1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.

1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.

கெüரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.

கெüரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.

1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.

மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.

நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

1969-இல் நம்மை விட்டு மறைவதற்கு முன்னதாகவே அவருக்குப் பின் கழகத்தில் பிளவு ஏற்படக்கூடும் என்பதை அண்ணா ஓரளவு யூகித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

அண்ணா வழியில் எம்ஜிஆர் - எம்ஜிஆர் வழியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா - என்று தொடரும் அரசியல் பாரம்பரியம் நாட்டுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் தனி முத்திரை அமையும் விதத்தில் வெற்றி பெறவேண்டும்    

நன்றி :-தினமணி, 17=01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.