Sunday, January 20, 2013

478 ஆண்டுகள் பழைமையான அன்னை மரியாள் படம்!


நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில், அதுவும் மலைமாவட்டமான நீலகிரியில் உதகையிலுள்ள புனித மோட்சராக்கினி மாதா தேவாலயத்தில் குவாதலூப் மரியன்னையின் திருவுருவுப் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குவாதலூப் மரியன்னை தொடர்பான ஒரு வரலாற்று சுருக்கம்:

""கி.பி.1531-ம் ஆண்டில் மெக்சிகோ நாடு ஸ்பெயின் நாட்டிற்குக் காலனி நாடாக இருந்த காலக்கட்டமாகும். யுவான் டியேகோ என்ற எளியவருக்கு அன்னை காட்சி தருகிறார். மெல்லிய தெய்வீக இன்னிசை டியேகோவின் காதுகளில் ஒலித்துள்ளது. தன்னை யாரோ மலை உச்சிக்கு அழைப்பதையும் உணர்ந்துள்ளார். அங்கிருந்த மலை உச்சியை அடைந்ததும் இளம் சூரிய ஒளியில் தங்க நிறத்தில் ஒளி வெள்ளம் பீறிட ஓர் இளம் அழகிய பெண் நிற்பதைக் கண்டு, தெய்வீக நிகழ்வு நடக்கப் போவதையும் உணர்ந்து அந்த பெண்ணின் முன்னர் மண்டியிட்டுத் தலைகுனிந்து வணங்கியுள்ளார்.

அப்போது அந்த பெண், ""மகனே இறைவனின் தாயாகிய கன்னி மரியே நான்'' என்று தெரிவித்ததோடு, தனக்கு அங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டுமெனவும், இந்தத் தகவலை அப்பகுதியின் ஆயரிடம் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். அதன் பேரில் டியேகோவும் ஆயரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை ஆயர் நம்பவில்லை. அந்தப் பெண்மணியைச் சந்தித்ததற்கான அடையாளத்துடன் தன்னை வந்து சந்திக்குமாறு தெரிவித்து  டியேகோவை அனுப்பிவிட்டாராம். மீண்டும் டியேகோ மலை உச்சிக்கு சென்றபோது அங்கு மீண்டும் காட்சி தந்த அன்னை, டியேகோவிடம் பல வகையான பூக்களைக் கொடுத்து, அவற்றை ஆயரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தவாறே அந்த பூக்களை ஆயரிடம் டியேகோ கொடுத்துள்ளார். அப்போது அந்த அறை முழுதும் பூக்களின் நறுமணம் பரவியதோடு, பூக்கள் தரையிலும் கொட்டியுள்ளன. அப்போது டியேகோவின் மேலாடையில் அன்னை மரியாளின் அற்புத உருவம் பதிந்திருப்பதைக் கண்டு அனைவரும் வணங்கினர்.

கள்ளிச் செடியினாலான அந்த ஆடை 20 ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய தன்மை கொண்டதாகும். ஆனால், அந்த ஆடை 400 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் அப்படியே உள்ளது. கடந்த 478 ஆண்டுகளாக இந்த ஆடை எவ்விதமான சேதமுமின்றி தேப்யாக்குன்று தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த ஆடையில் பதிவான அன்னையின் உருவம் தற்போது புகைப்படமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உதகையிலுள்ள மோட்சராக்கினி மாதா தேவாலயத்தில் இந்தத் திருவுருவப் படம் உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜின் முயற்சியால் திறந்து  வைக்கப்பட்டுள்ளது.

வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் காணப்பட்டார். அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களை தலை மீது அணிந்திருந்தார் என திருவெளிப்பாட்டில் கூறப்பட்டிருந்ததை நினைவுகூறும் வகையில் உலகெங்கிலும் குவாதலூப் அன்னையை தரிசித்து வருகின்றனர்     

நன்றி:- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 23-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.