Sunday, January 20, 2013

ஏகல் ஏற்றிவைத்த அகல் !





சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க நாஸா விஞ்ஞானி ராகேஷ் பேரிபள்ளி ஜார்கண்டுக்கு வந்தார். மாவோயிஸ்ட்டுகளும், நக்ஸலைட்டுகளும் அதிகரித்துவிட்டதால், அங்கே உள்ள கிராமத்தினரின் குழந்தைகளுக்குக் கல்வி வசதிகளைச் செய்துகொடுக்க ஏதாவது செய்ய முடியுமா? என்பதுதான் அவர் மனத்தில் உறுத்திக்கொண்டு இருந்தது.

பழங்குடியினரின் நண்பர்கள் என்ற அமைப்பு அங்கே ஏற்கெனவே இருப்பதை அறிந்த ராகேஷ், அவர்களை ஆதரிக்க முன்வந்தார். இங்கே எழுத்தறிவே கிடையாது என்கிறபோது, உயர் கல்வியைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை. சில வகுப்புகள் வேண்டுமானால் நடத்தலாம் என்றனர். கிராமத்தினர் ஒரு குழுவை அமைத்தார்கள். நீங்கள் பயிற்சி பெற்ற சிறந்த ஆசிரியர்களைத் தாருங்கள். பணமும் தாருங்கள். மாலையில் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடத்துகிறோம் என்றனர். இப்படித் தொடங்கப்பட்டதுதான் "ஏகல்' என்ற தொண்டார்வ அமைப்பு.

அறுபது மாதிரிக் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. எல்லாவற்றிலும் ஓர் ஆசிரியர் -பள்ளி. ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஓர் இளைஞரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ஆசிரியர் பணியில் பயிற்சி அளிக்கத் தொடங்கியது "ஏகல்'. அங்கே பேசப்படும் மொழி, அங்கே கையாளப்படும் பழக்க வழக்கங்கள், உள்ளூர்க் கலாசாரம் எல்லாவற்றையும் அவர்கள் மொழியிலேயே கற்றுத் தரச் செய்தார்கள். ஆரம்பக் கல்வியைக் கற்றுக்கொடுப்பதுதான் நோக்கம். அதுதான் ஆதாரக் கல்வியும்கூட.

தொடக்கத்திலிருந்தே எந்த வெளியுலக அனுபவமும் பெற்றிராத அவர்களிடம், முதல் பத்து வருடங்களில் நல்ல முடிவுகள் தெரியத் தொடங்கின. அவர்களுக்குக் கேள்விகள் கேட்கத் தெரிந்தது. அது போதும். கேள்வி கேட்கத் தெரிந்தாலே நல்ல ஆட்சி அமைய வாய்ப்புகள் உருவாகும். பாடத்திட்டப்படிப் பாடங்கள் படிப்பது இரண்டாவது பட்சம்தான்.

இவ்வாறு அறுபது கிராமங்களில் தொடங்கப்பட்ட பள்ளிகள், இப்போது 40,000 கிராமங்களில் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1500 கிராமங்களில் "ஏகல்' பள்ளிகள் இருக்கின்றன. கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், பழநி, தேனி, கொடைக்கானல், சேலம், நாமக்கல், கொல்லிமலை, ஏற்காடு, ஊட்டி, கோபிசெட்டிப்பாளையம், தாளவாடி , கடம்பூர் என்று மொத்தம் எட்டு மாவட்டங்களில் இந்த ஏகல் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

இத்தனை தகவல்களைத் தந்த ஏகல் அமைப்பின் செயலர்களில் ஒருவரான நாராயணன் மாதவனிடம்,

இவர்களுக்குக் கிடைக்கும் கல்வி எத்தகையது என்று கேட்டோம் ?

 ""அடிப்படைக் கல்விதான். ஆதார விஞ்ஞானம், கணிதம், இந்தியக் கலாசாரம், புராணங்கள்- இதிகாசங்கள், சுலோகங்கள், பஜன்கள், எல்லாம் உண்டு. கூடுதலாக, ஆரோக்கியம் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம். ரத்தசோகை வராமல் பாதுகாக்கச் சொல்கிறோம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு. இது தவிர டெவலப்மென்ட் எஜுகேஷன் என்ற பிரிவில், எப்படி சம்பாதிக்கலாம் என்றும் கற்றுக்கொடுக்கிறோம். வெர்மி கம்போஸ்ட் உரம் தயாரிப்பது, கிச்சன் கார்டன் போடுவது, ஆர்கானிக் உரங்கள் போட்டுக் காய்களையும், கீரைகளையும் பயிர் செய்வது பற்றிச் சொல்கிறோம்.

இதற்கு அடுத்தபடியாக, எம்பவர்மென்ட் எஜுகேஷன். அதாவது மக்களுக்கு அதிகாரம் தரும் கல்வி. தகவல் பெறும் உரிமையைப் பற்றியும், அந்த வகையில் எப்படி தேவையான தகவல் அறியலாம் என்பதையும் விளக்குகிறோம். பென்ஷன் பணத்தைப் பெறுவது எப்படி? ரேஷன் கார்டு பெற்றுக்கொள்வது எப்படி? என்று சொல்லிக் கொடுக்கிறோம். கொல்லிமலைப் பகுதி கிராமத்தில் ரேஷன் கார்டே வரவில்லை என்று கூறினார்கள். கடிதம் போட்டதும் உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. குடிப்பழக்கம் குறைந்திருக்கிறது. அப்பா - அம்மா காலில் விழுகிறபோது அவர்கள் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் 1500 கிராமங்களில் இந்தியா பற்றி எடுத்துச் சொல்கிறார்கள். தேசபக்தி பாடல்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்திய சரித்திரம் கற்பிக்கிறார்கள். அதனால் அந்தப் பகுதி மாணவர்கள், மாணவிகளின் மனப்பான்மை மாறியிருக்கிறது'' என்றார் மாதவன்.

பழங்குடியினரின் நண்பர்கள் அமைப்புக்கு, வங்கி மூலம் "ஏகல்' பணத்தை அளித்துவிடுவதால், அது சரியான கைகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

வருடத்துக்கு ஒரு பள்ளிக்கூடத்துக்கு எத்தனை ரூபாய் கொடுப்பீர்கள்.?

 ""வருடத்துக்கு 16,000 ரூபாய். இது ஆறுவகை செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 1. ஆசிரியருக்கும், ஊழியர்களுக்கும் சன்மானத் தொகை 2. போக்குவரத்துச் செலவு. 3. பயிற்சி 4. அலுவலகம். 5. சாதனங்கள். 6. கல்வி கற்பிக்க உதவும் உபகரணங்கள். ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே செலவழிக்கலாம். 90 சதவிகிதம் பயனாளிகளுக்குப் போய்ச் சேர வேண்டும். அரசின் நன்கொடைகளோ, உதவிப் பணமோ எதுவும் பெறுவது கிடையாது. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் உதவுகிறார்கள். அளிக்கப்படும் பணம் முறையான வகையில்தான் வருகிறது.

இவர்கள் அளிக்கும் நிதிக்கு நூறு சதவிகித விலக்கு உண்டு. பழங்குடியினரின் நண்பர்கள் அமைப்பு (ப்ரண்ட்ஸ் ஆப் டிரைபல்ஸ் சொசைடி)க்கு 35-அஇ பிரிவின் கீழ் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை வருடங்கள் ஒரு கிராமத்துக்குச் செலவழிப்பீர்கள்?
ஐந்து முதல் ஏழு வருடங்கள் ஒரு கிராமத்தில் உழைப்போம். பிறகு அடுத்த கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். சுய கௌரவம், கல்வி, தகுதி, சம்பாதிக்கும் திறன் எல்லாம் இந்த ஐந்து முதல் ஏழு வருடங்களுக்குள் முடித்தாக வேண்டும். "ஏகல்' வித்தியாஷ்ரம் பதிவு செய்யப்பட்ட கல்வி அமைப்பு. சொசைடி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒரு தொண்டார்வ நிறுவனம். நாங்கள் எந்தத் தொண்டார்வு அமைப்புடனும் இணைந்து செயல்படத் தயாராய் இருக்கிறோம். இது ஒரு மக்கள் இயக்கம்.

ஒரு குடும்பம், ஒரு கிராமம் திட்டத்தில் பங்கு கொள்ள, மாதவனை கைபேசி எண் 92821 50575-ல் தொடர்பு கொள்ளலாம். www.ekai.org என்ற வலைத்தளத்தையும் பார்க்கலாம்.                                                                                          

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 20-01-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.