Monday, January 21, 2013

ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு தர பி.எஸ்.என்.எல். திட்டம் !

மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லில் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது பற்றிய திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அந்த அதிகாரி அளித்த தகவலில் தெரிவித்திருப்பது: ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்கள் உபரியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ளனர்.

இப்போது நிறுவனத்தின் வருவாயில் 48 சதவீதம் ஊதியத்துக்கே செலவாகிறது. எனவே அதிகப்படி ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைத் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

விருப்ப ஓய்வுத் திட்டம் ஏற்கப்படுமானால் சம்பள வகையிலான செலவினம் பத்து சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறையும்.

ஊழியர் எண்ணிக்கை அதிகம் என்பதுடன் அவர்களின் வயதும் விருப்ப ஓய்வு பற்றிய ஆலோசனைக்கு ஒரு முக்கிய காரணம். இப்போது நிறுவன ஊழியர்களின் சராசரி வயது 50. மேலும், புதிய சூழலில் தேவைப்படும் புதிய திறன்களின் குறைபாடும் உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

2011-ஆம் ஆண்டு மார்ச் அளவில் இந்நிறுவனத்தில் 2.81 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.

2004-2005-ஆம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். பெற்ற லாபம் ரூ. 10,183 கோடி.
 

ஆனால் 2009-2010 ஆண்டில் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது.
 

2010-2011 ஆண்டில் இழப்பு ரூ.6,384 கோடியாக இருந்தது.
 

3ஜி அலைக்கற்றைக்கும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை உரிமைக்கும் 

செலுத்திய தொகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் அளித்த 

முறையிலும் நஷ்டம் அதிகரித்தது என்று கூறப்பட்டது.

நிறுவனத்திடம் இப்போது இருக்கும் நிலம், தொலைத் தொடர்பு கோபுரங்கள் ஆகிய சொத்துகளின் மூலமாக ரூ. 8,000 கோடி திரட்ட பி.எஸ்.என்.எல். ஒருதிட்டத்தை தயாரித்திருக்கிறது.

நில விற்பனை, கோபுரங்களின் செயல்பாடுகளைத் தனி நிறுவனமாக்குவது, ஆலைகள் மூலம் புதிய வருவாய் ஈட்டுவது, பள்ளிகளுக்குப் பிராட்பேண்ட் வசதி அளிப்பது, சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கும் சேவைகளை நீண்ட கால அளவில் குத்தகைக்கு விடுவதன் மூலம் ரூ.8,000 கோடி திரட்டலாம் என பி.எஸ்.என்.எல்.கருதுகிறது.

நன்றி :- தினமணி, 21-01-2013                                                                                                          

0 comments:

Post a Comment

Kindly post a comment.