Sunday, December 30, 2012

டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரக் கொடுமையின் முழு விபரம் !


டிசம்பர் 16:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் அவர்கள் ஏறினார்கள்.

இரவு 10 மணி:- பஸ்சில் டிரைவர் ராம்சிங்கும் அவனது கூட்டாளிகள் 5 பேரும் இருந்தனர். அவர்கள் மாணவியைக் கிண்டல் செய்தனர். அதை மாணவியின் நண்பர் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் கை- கலப்பு, மோதல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பழைய இரும்புக் கம்பிகளை எடுத்து சாப்ட்வேர் என்ஜினீயரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். இதை மாணவி தடுத்தார்.

மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மாணவி அவர்களைக் கடுமையாகத் திட்டினார். பஸ்சை நிறுத்தும்படிக் கூச்சலிட்டார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள், மாணவியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இதில் மாணவி சுருண்டு விழுந்தார். போதையில் இருந்த வாலிபர்கள் ஈவு இரக்கமின்றி மாணவியைக் கற்பழித்தனர்.

சுமார் 30 நிமிடம் அந்த பஸ் டெல்லி சாலையில் ஓடிய நிலையில், மாணவி சின்னா பின்னமாக்கப்பட்டார். காம இச்சையைத் தீர்த்துக் கொண்ட 6 பேரும் 10.35 மணியளவில் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியையும், அவரது நண்பரையும் சாலையோரத்தில் தள்ளிவிட்டுச் சென்றனர்.

சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

டிசம்பர் 17:- டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அன்று காலை பரபரப்புடன் இணையத்தளங்களில் வெளியானது. மாணவிக்கு மயக்க நிலையில் செயற்கை சுவாசத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள்.

டிசம்பர் 18:- மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளில் முக்கியமானவரான ராம்சிங்கை போலீசார் கைது செய்தனர். அவன் ஓட்டி வந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய உரிமம் இல்லாமல் அந்த பஸ் இயக்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ராம்சிங் கொடுத்த தகவலின் பேரில் அவனது சகோதரன் முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்ற 2 குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விரைந்தனர்.

டிசம்பர் 19:- சப்தர்ஜங் மருத்துவமனையில் மாணவி உடல்நிலை மிக, மிகக் கவலைக்கிடமாக மாறியது. துருப்பிடித்த இரும்புக் கம்பியால் தாக்கியதில் மாணவி குடல் கிழிந்து அழுகி விட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் டாக்டர்கள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து மாணவியின் சிறுகுடலை அகற்றினார்கள். அன்றே அடுத்தடுத்து மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

டிசம்பர் 20:- மாணவி கற்பழித்துக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கும் மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. டெல்லியில் போராட்டம் தீவிரம் அடைந்தது. குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மாணவ- மாணவிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். இது இந்தியாவில் இதுவரை மக்களிடம் ஏற்படாத எழுச்சியாகக் கருதப்பட்டது. இதனால் உலகின் பல நாடுகளிலும் இது பற்றிய செய்திகள் முதன்மை இடம் பெற்றன.

டிசம்பர் 21:- மாணவியைக் கற்பழித்த 5-வது குற்றவாளி அக்ஷய் தாக்குர் உத்தர பிரதேச மாநிலத்தில் பிடிபட்டான். 6-வது குற்றவாளியும் கைதானான். அவன் மைனர் என்பதால் அவன் பெயரைப் போலீசார் வெளியிடவில்லை. இதற்கிடையே சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவி மயக்கம் தெளிந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் விலக்கப்பட்டது. அவரிடம் டெல்லி மாஜிஸ்திரேட் மரணவாக்குமூலம் வாங்கினார்.

அப்போது அந்த மருத்துவ மாணவி, நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். குற்றவாளிகளைத் தப்பவிட்டு விடாதீர்கள் என்றார். இதனால் டெல்லியில் விடிய, விடிய போராட்டம் நடந்தது.

டிசம்பர் 22:- மாணவி உருக்கமாக கேட்டு கொண்டது மக்களிடம் கொந்தளிப்பை அதிகரித்தது. மேலும் மாணவி துணிச்சலாக, நல்ல மன தைரியத்துடன் இருப்பதாக சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் பாராட்டினார்கள். இதையடுத்து இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் தர்ணாவை தீவிரபடுத்தினார்கள்.

அன்றிரவு அவர்கள் சோனியா வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்த சோனியாவும், ராகுலும் குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம். உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றனர். எத்தனை நாட்களுக்குள் தண்டனை பெற்றுக் கொடுப்பீர்கள் என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். அதற்கு சோனியா பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தனர்.

டிசம்பர் 23:- அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டெல்லி இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதனால் போலீசார் திணறினார்கள். இதையடுத்து இந்தியா கேட் பகுதியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடியடி நடத்தியும், தண்ணீர் பீச்சியடித்தும் கலைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீண்டும் இந்தியா கேட் பகுதியில் திரள முடியாதபடி அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.

இதற்கிடையே மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து மாணவி கற்பழிப்பு தொடர்பாகப் பாராளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதைக் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் போலீஸ் தடியடிக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தடியடி நடத்த உத்தரவிட்ட டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் மீது டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.

டிசம்பர் 24:- இந்தியா கேட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் திரளாமல் இருக்கப் போலீசார் குவிக்கப்பட்டனர். டெல்லியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 10 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே மாணவி உடல்நிலை சற்றுத் தேறியது. இந்த நிலையில் மாணவியிடம் 21-ந்தேதி வாக்குமூலம் பெற்றபோது போலீசார் குறுக்கீடுகள் இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. எனவே அன்று மாணவியிடம் மீண்டும் 2-வது தடவையாக வாக்குமூலம் பெறப்பட்டது. அதே சமயத்தில் டெல்லி திகார் ஜெயிலில் கற்பழிப்புக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மாணவியின் நண்பர் அணிவகுப்பைப் பார்த்து உண்மையான குற்றவாளிகளை மிகச்சரியாக அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் 7 கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 25:- மாணவி நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை போலீசார் தடியடி நடத்தியபோது மயங்கி விழுந்த போலீஸ்காரர் சுபாஷ் சந்த் தோமர் மரணம் அடைந்தார். மக்கள் தாக்கியதில் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் அது உறுதி செய்யப்படவில்லை.

டிசம்பர் 26:- மருத்துவ மாணவி உடல் நிலை மிகவும் மோசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி டாக்டர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசித்தனர். அதன்பிறகு மாணவியை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மாணவி பெற்றோர், சகோதரர்களுக்கு மத்திய அரசு உடனடியாக பாஸ்போர்ட், விசா வழங்கியது.

புதன்கிழமை இரவு சிறப்பு ஏர்- ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாணவி டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்துக்கு மட்டும் கட்டணமாக 60 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியது. மாணவியுடன் 2 டெல்லி டாக்டர்களும் சிங்கப்பூர் சென்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ராகவன் தலைமையில் அதிகாரிகள் குழு மாணவி சிகிச்சைக்கான எல்லா உதவிகளையும் செய்தது.

டிசம்பர் 27: அதிகாலை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு நவீன சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது மாணவி தலைமையில் காயம் ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மாணவி உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதாக சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவித்தனர்.

டிசம்பர் 28: மாணவி கொண்டு வரப்படும் போது மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியானது. மாணவி உடல் உள்உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல்இழக்கத் தொடங்கின. மாணவி குடல், நுரையீரலில் கிருமி தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டது. மாணவி உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.

டிசம்பர் 29: இன்று அதிகாலை 2.15 மணிக்கு மாணவி மரணம் அடைந்தார். மாணவி மரணத்தை தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று மூடப்பட்டன.

இன்று பிற்பகல் அவர் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டுத் தகனம் செய்யப்படுகிறது. மாணவி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தைரியம் மிக்க அந்த மாணவி இந்தியாவின் உண்மையான ஹீரோ. அவர்தான் இந்திய மகள் என்று ஒட்டு மொத்த இந்தியர்களிடமும் உணர்வு ஏற்பட்டுள்ளது.   

 http://rightnews.in/13039/hang-me-till-death-delhi-gang-rape-accused-tells-court/

 Wednesday, December 19, 2012 at 4:01 PM By Leave a Comment

PROTEST01
புதுடெல்லி: என்னைத் தூக்கில் போடுங்கள் என்று டெல்லி எம்பிபிஎஸ் மாணவி கற்பழிப்பில் கைதானவர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவி ஒருவர்,

முனிர்கா என்ற இடத்தில் இருந்து துவாரகா என்ற இடத்திற்கு அவரது நண்பருடன் பயணித்த போது பஸ்ஸில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை கொடூரமான முறையில் கற்பழித்து பஸ்ஸிலிருந்து தூக்கி வீசினர்.
 
பாதிக்கப்பட்ட எம்பிபிஎஸ் மாணவி தற்போது சப்தர்ஜங் மருத்துனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது.

 இந்த வழக்கில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி 5 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கைதான 5 பேரில் 3 பேரை டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கைதான முகேஷ் சி்ங், பவன்குப்தா, வினய் சர்மா ஆகியோர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராயினர். இதில் வினய் சர்மா என்பவர் கோர்ட்டில் கூறியதாவது: நான் செய்யக்கூடாத பயங்கரமான குற்றத்தைப் புரிந்துவிட்டேன். என்னைத் தூக்கில் போடுங்கள்.

அந்தப் பெண்ணுடன் வந்த மாணவரையும் நான் அடித்து உதைத்தேன். என்னைத் தூக்கில் போடுவதுதான் சரியாக இருக்கும் என்று ஆவேசமாக கூறினார்.
குற்றத்தை பவன்குப்தாவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.நன்றி:- மாலைமலர்.
                                                                                                                    

................................
                                                               
   


நன்றி :- மாலை மலர், 29-12-2012    

0 comments:

Post a Comment

Kindly post a comment.