Sunday, December 30, 2012

120 கோடி பிரதிகள் விற்ற ஆங்கில நூல் !


ஓரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்பதே கடினம் என்று தமிழ்ப் பதிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு புத்தகம் 120 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. நீங்கள் புருவம் உயர்த்திய படி மேலே படிப்பது தெரிகிறது.

சத்தியமாய் அது தமிழ் நூல் இல்லை.

ஆங்கில எழுத்தாளர் ஜே.டி.சாலின்ஜர் எழுதிய நூல்.

பார்க்க ஒடிசலான பையனாக வலம் வந்தவர் ஜே.டி.சாலின்ஜர். ஜூனியர் காலேஜ் என்கிற பள்ளிப் படிப்பை பெனிசில்வேனியாவின் Valley Forge Military Academy- ல் முடித்து விட்டு ஐரோப்பா செல்லு முன் ஒரு வருடம் நியூயார்க்கில் பெற்றோருடன் தங்க வந்தார். கையில் தந்தை கொடுத்த சொற்ப பணத்தோடு தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருக்க, ஏதாவது வேற்று மொழி கற்கலாம் என்று தான் போனார்.

ஐந்து மாதம் வியன்னாவில் மொழி கற்கப் போனவரின் கவனம் முழுக்க மொழியின் மீது மட்டுமே இருந்தது. வீடு திரும்பியவர் பெனிசில்வேனியாவில் ஒரு கல்லூரியில் சேர்ந்தார். இவர் கொலம்பியா கல்லூரியில் பயின்ற போது, "க்ரியா யோகம்' எனப்படும் மனப் பயிற்சிக் கலையை பயின்றார். தினமும் இருமுறை என தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்தது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியா யூனிவர்சிடியில் இருந்தபோது தான் வாழ்க்கை அவரை எழுத்துப் பணியின் பக்கம் தள்ளியது. அங்குதான் அவர் பேராசிரியர்
விட் பர்னட்டைச் சந்தித்தார். அவர் பேராசிரியர் மட்டுமல்ல, சிறுகதைகளை மட்டும் வெளியிடும் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரும் கூட. இவரின் எழுத்துத் திறனை முதலில் அறிந்தவர் அவர்தான்.

அவர் அந்தப் பத்திரிகையில் சிறுகதை ஒன்றை எழுதியதோடு பிரபலப் பத்திரிகையான "சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' - இலும் எழுதினார்.

மற்ற அமெரிக்க இளைஞர்களுக்கு நேர்ந்த அதே விஷயம் அவருக்கும் ஏற்பட்டது. இரண்டாவது உலகப் போர் அவர் வாழ்க்கையையும் தொட்டது. இராணுவத்தில் பணியாற்ற வேண்டியதாகிப் போனது. போர் நேரப் பணியை ஃப்ரான்ஸில் கழித்த அவரின் அந்த வாழ்க்கைதான் அவருடைய சரித்திரப் புகழ் பெற்ற புத்தகத்திற்கு வித்திட்டது.

வாழ்க்கையில் திருப்தியடையாத இளைஞனான ஹோல்டன் காஃபில்ட் (Holden Caulfield) என்கிற மூலப் பாத்திரத்தினை வைத்து அத்தியாயங்களைக் கோத்தார்.

நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுப் போருக்கு பின்னும் அந்த உபாதை அவருக்குத் தொடர்ந்தது. மருத்துவமனையில் சேர்ந்தார். அதன் பின் எங்கு போனார்? யாருடன் இருந்தார்? என்பன போன்றவையெல்லாம் சரிவர கிடைக்கவில்லை.

ஆனால் சில்வியா என்கிற பெண்மணியின் அரவணைப்பில் இருந்தார் என்பது மட்டும் நிஜத் தகவலாக இருந்தது. ஜெர்மனியை சேர்ந்த அந்தப் பெண்மணி நாசியாக (Nazi) கூட இருக்கலாம் என்று பின்னர் செய்திகள் வந்தன. அந்தப் பெண்மணியையே மணந்து கொண்டார், அவர்களது திருமணப் பந்தம் எட்டு மாதமே நீடித்தது. பின் அவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்ப் பெற்ற விமர்சகர் ராபர்ட் லாங்டன் டக்ளஸ் என்பவரின் மகளான கிளாரே டக்ளûஸ மணந்தார். அவர்களுக்கு இரண்டு வாரிசுகள்.                   

1946-ல் நியூயார்க் நகரத்திற்கு திரும்பிவிட்ட அவர் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். பிரபல பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளியாக ஆரம்பித்தது. 1951-இல் அவருடைய அந்த பிரபல நாவல் பதிப்பிக்கப்பட்டது. அதிக பாராட்டுகளைப் பெற்றாலும் சில விமர்சகர்கள் அதை நேர்மையற்ற நாவல் என்றே வருணித்தார்கள்.

1980ம் வருடம் பிரபல ஆங்கிலப் பாடலாசிரியர், பாடகர் ஜான் லெனனை
( வயது 40) கொன்ற மார்க் டேவிட் சாப்மானை போலீஸார் கைது செய்த போது அவன் கையில் 120 கோடி விற்றுத் தீர்ந்துள்ள அந்தப் புத்தகத்தின் ஒரு படி இருந்தது. "ஏன் கொன்றாய்?' என்று போலீஸ் கேட்டபோது, சாப்மான், ""இந்தப் புத்தகத்தில் அதற்கான காரணம் இருக்கிறது'' என்றான். அவ்வளவு தான் புத்தகத்தின் விற்பனை இன்னமும் பிய்த்துக் கொண்டது. அமெரிக்கப் பள்ளிகளின் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத புத்தகமாக மாறிப் போன அந்த நாவல் வந்த இரண்டு வருடத்தில் தனது நியூயார்க் நகரச் சொத்துகள், இருப்புகள் அனைத்தையும் மாற்றி நியூ ஹேமிசிபியரில், கார்னிஸ் என்கிற இடத்தில் 90 ஏக்கர் பண்ணை வீட்டில் செட்டில் ஆகிவிட்டார் அவர். வெளியுலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட அவர் அதன் பின் இரண்டு புத்தகங்களை எழுதினார்.

1965ல் ஒரு சிறுகதையோடு அவர் தன் எழுத்தை நிறுத்தி விட்டார்.

மனைவி வழக்குத் தொடர்ந்து பிரிந்தார். அதன் பின் ஜாய்ஸ் மெர்னாட் என்கிற பெண்ணோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

நியூயார்க் டைம்ஸில் "வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பதினெட்டு வயது' என்கிற சிறுகதையை எழுதியவர்தான் ஜாய்ஸ். எட்டு மாதம் அவரோடு இருந்தாள் ஜாய்ஸ். எழுத்தாளரே அந்தப் பெண்மணியை விரட்டி விட்டார்.

வெளியேற்றப்பட்ட அந்த பெண் எழுத்தாளர் தனக்கு எழுதிய கடிதங்களை ஏலம் விட்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து ஐந்நூறு டாலர் சம்பாதித்தது வேறு கதை. அதன்பின் எலன் ஜாய்ஸ் என்ற நடிகையுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பழகினார்கள்.

அதிகம் தனிமையை விரும்பிய அவர் வெளியில் வரும் போதும் யாருடனும் பேசியது இல்லை. ஒரு முறை பண்ணை வீட்டிலிருந்து பஜார் பக்கம் வந்த அவர் ஒரு காபி ஷாப்பில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஓர் இளைஞன் தயங்கி தயங்கி அவரிடம், "" அந்தப் பிரபல புத்தக ஆசிரியர் தானே?'' என்று கேட்க, அவர் அவன் எதிர்பார்ப்பை மீறி சகஜமாக பேசி அவனுக்கும் காபி வாங்கி கொடுத்து அவனை தன் வீட்டிற்க்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பினார். அவர் தனிமையில் இருந்த போது அவரைச் சந்தித்த ஓரே ஆசாமி அந்த இளைஞன் தான்.

கடைசிக் காலத்தில் ஒரு நர்ஸýடன் காதலில் வாழ்ந்த அவர் ஜனவரி மாதம், 2010-ல் தனது வீட்டில் மரணம் அடைந்தார். இது நாள் வரை அந்தப் புத்தகத்தின் விற்பனையை முறியடிக்க எந்த நாவலாலும் முடியவில்லை.

அந்த நாவலின் பெயர் "தி கேட்சர் இன் த ரை' (The Catcher in the Rye).

விடலைப் பையன் தன்னைப் பற்றி சொல்லும் அந்த நாவலுக்குப் பின் அவர்

எழுதிய மூன்று முக்கிய நூல்கள், Franny and Zooey, Raise High the Roof Beam, Carpenters.

நன்றி :- சுப்ரஜா ஸ்ரீதரன், தினமணி கதிர், 30=12-2012







0 comments:

Post a Comment

Kindly post a comment.