Sunday, December 30, 2012

டாஸ்மாக் செல்வோர் படிக்கவேண்டியது :- உடற்கூற்று வண்ணம் -பட்டினத்தார்


தனதன தான தனதன தான
        தந்தனந்தன தந்தனந்த
தனனதனந்த தனனதனந்த
             தானன தானன தானன தந்த
தந்தனதான தனதானனா

ஒருமடமாது மொருவனுமாகி யின்பசுகந்தரு
மன்புபொருந்தி யுணர்வுகலங்க யொழுகியவிந்து
         வூறுசுரோணித மீதுகலந்து -

பனியிலோர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்துபு
குந்திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று
     பார்வைமெய்வாய்செவி கால்கைகளென்ற -


உருவமுமாகி உயிர்வளர்மாத மொன்பதுமொன்று
நிறைந்துமடந்தை யுதரமகன்று புவியில்விழுந்து
           யோகமும்வாரமு நாளுமறிந்து -

மகளிர்கள்சேனை தரவணையாடை மண்படவுந்தியு
தைந்தகவிழ்ந்து மடமயில்கொங்கை யமுதமருந்தி
           யோரறிவீரறி வாகி வளர்ந்து -

ஒளிநகையூற விதழ்மடவாரு முவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியிலிருந்து மழலைமொழிந்து
         வாவிருபோவென நாமம்விளம்ப -

உடைமணியாடை யரைவடமாட வுண்பவர்தின்பவர்
தங்களொடுண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து
         தேடியபாலரொ டோடிநடந்து -
                   அஞ்சுவயதாகி விளையாடியே.

உயர்தருஞான குருவுபதேச முத்தமிழின்கலை
யுங்கரைகண்டு வளர்பிறையென்று பலரும்விளம்ப
            வாழ்பதினாறுபி ராயமும்வந்து -

மயிர்முடிகோதி யறுபதநீல வண்டிமிர் தண்டொடை
கொண்டைபுனைந்து மணிபொனிலங்கு பணிகளணிந்து
           மாகதர்போகதர் கூடிவணங்க -

மதனசொரூப நிவனெனமோக மங்கையர்கண்டும
ருண்டுதிரண்டு வரிவிழிகொண்டு கழியவெறிந்து
           மாமயில்போலவர் போவதுகண்டு -

மனதுபொறாம லவர்பிறகோடி மங்கலசெங்கல
சந்திகழ்கொங்கை மருவமயங்கி யிதழமுதுண்டு
         தேடியமாமுதல் சேரவழங்கி -

ஒருமுதலாகி முதுபொருளாயி ருந்தனங்களும்
வம்பிழந்து மதனசுகந்த விதனமிதென்று
       வாலிபகோலமும் வேறுபிரிந்து -

வளமயுமாறி யிளமையுமாறி வன்பல்விழுந்திரு
கண்களிருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
         வாதவிரோதகு ரோதமடைந்து -
               செங்கையினிலோர்த டியுமாகி -

வருவதுபோவ தொருமுதுகூனு மந்தியெனும்படி
குந்திநடந்து மதியுமழிந்து செவிதிமிர்வந்து
          வாயறியாமல்வி டாமன்மொழிந்து -

துயில்வருநேர மிருமல்பொறாது தொண்டையுனெஞ்சுமு
லர்ந்துவறண்டு துகிலுமிழந்து கணையுமழிந்து
         தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு -

கலியுகமீதி லிவர்மரியாதை கண்டிடுமென்பவர்
சஞ்சலமிஞ்ச கலகலவென்று மலசலம்வந்து
           கால்வழிமேல்வழி சாரநடந்து -

தெளிவுமிராம லுரைதடுமாறி சிந்தையுநெஞ்சமு
லந்துமருண்டு திடமுலந்து மிகவுமலைந்து
       தேறிநலாதர வேதனநொந்து -

மறையவன்வேத நெழுதியவாறு வந்ததுகண்டமு
மென்றுதெளிந்து இனியெனகண்ட மினியெனதொந்த
        மேதினிவாழ்வுநி லாதிமிநின்ற -

கடன்முறைபேசு மெனவுரைநாவு றங்கிவிழுந்துகை
கொண்டுமொழிந்து கடைவழிக்கஞ்சி யொழுகிடவந்து
             பூதமுநாலுசுவாச முநின்று
                     நெஞ்சுதடுமாறி வருநேரமே.

வளர்பிறைபோல வெயிறுமுரோம முஞ்சடையுஞ்சிறு
குஞ்சியும்விஞ்ச மனதுமிருண்ட வடிவுமிலங்க
            மாமலைபோல்யம தூதர்கள் வந்து -

வலைகொடுவீசி யுயிர்கொடுபோக மைந்தரும்வந்துருகு
னிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவியும்புலம்ப
         மாழ்கினரேயிவர் காலமறிந்து - 

பழையவர்காணு மெனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர்பந்த ரிடுமெனவந்து பறையிடமுந்த
          வேபிணம்வேக விசாரியுமென்று -

பலரையுமேவி முதியவர்தாமி ருந்தசவங்கழு
வுஞ்சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து
               பாவகமேசெய்து நாறுமுடம்பை -

வரிசைகெடாம லெடுமெனவோடி வந்திளமைந்தர்கு
நிந்துசுமந்து கடுகிநடந்து சுடலையடைந்து
         மானிடவாழ்வென வாழ்வெனநொந்து -

விறகிடமூடி யழல்கொடுபோட வெந்துவிழுந்துமு
நிந்துநிணங்க ளுருகியெலும்பு கருகியடங்கி
           யோர்பிடிநீறுமி லாதவுடம்பை -
                    நம்புமடியேனை யினியாளுமே.


                                                          -பட்டினத்துப் பிள்ளையார் என்கிற பட்டினத்தார்.


“பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் -
ஆருந் துறக்கை யரிது “ - ஸ்ரீ தாயுமானவசுவாமிகள் 

பட்டினத்தார் பாடல்கள் 
( பத்திரகிரியார் பாடல்கள் உள்பட )
     ( விருத்தி உரை )                         
 தி.ரு.வி.க.

பழனியப்பா பிரதர்ஸ், 
25, பீட்டர்ஸ் சாலை,  
சென்னை-14 
முதற்பதிப்பு-2001
விலை.ரு.110/-


 
      
  


           







       

0 comments:

Post a Comment

Kindly post a comment.