Friday, November 23, 2012

ஒரு ஊர்... ஒரு மனிதர்... ஒரு வரலாறுT

எங்க கம்பனியில குழாய்த்தண்ணி வரும்; ஆனா பக்கத்துலயே மணல் பள்ளத்துலயே பால் மாதிரி நல்ல தண்ணி வரும் போது, உப்புத் தண்ணியில கை, கால் கழுவணும்ன்னு தலையெழுத்தா என்ன? அதனால, நாங்க அந்த பள்ளத்து தண்ணியிலதான் கை, கால் கழுவுவோம்,''


உழைத்துக் களைத்த தொழிலாளர்கள் பலரும் இப்படிச் சிலாகித்தது ஒரு காலம். இன்றைக்கு...மலை அன்னையின் மார்பில் இருந்து வழியும் தாய்ப்பாலாய் பெருக்கெடுக்கும் தண்ணீர், வெள்ளமாய் ஓடுவதற்குப் பெயர்தான் பள்ளம். அந்த மணல் பள்ளம் எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ள, அ.கி.நாயுடு என்று அழைக்கப்பட்ட அ.கிருஷ்ணசாமி நாயுடுவின் பூளைமேடு வரலாறு புத்தகத்துக்குள் நீங்கள் நுழைய வேண்டும்.


1963ல் வெளியான இந்த புத்தகத்தின் அப்போதைய விலை, வெறும் ஒரு ரூபாய். பீளமேடு உருவானதன் பின்னணி, அவ்வூரின் சமூக அமைப்பு, வீடுகளின் அமைப்பு, அங்கு வாழ்ந்த முக்கியஸ்தர்கள் என பல விதமான தகவல்களின் பொக்கிஷமாக இந்த நூல் இருக்கிறது.


தங்களது வரலாற்றையும் வாழ்வியல் கூறுகளையும் உலகெங்கிலுமுள்ள பல்வேறு சமூகங்களும் அக்கறையுடன் தேடத் துவங்கியுள்ள இந்த காலக்கட்டத்தில், கோவைக்குப் புகழ் சேர்த்த பூளைமேட்டின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய உதவுகிறது இந்நூல். பீளமேடு குறித்து எழுதும் பலரும், அ.கி நாயுடுவின் நூலைத்தான் ஆதார நூலாக பயன்படுத்துகின்றனர்.


ஓர் ஊரின் வரலாற்றை முதல் முதலாக சொன்ன புத்தகம் "பூளைமேடு வரலாறு'தான் என்கிறார் சூலூர் வரலாறு புத்தகத்தை எழுதிய செந்தலை கவுதமன். ஊர் தோறும் துவக்கப்பள்ளியும், வட்டம் தோறும் ஜில்லா போர்டு பள்ளியும் அமைக்க வேண்டும் என்று சுயராஜ்ய போராட்ட காலத்திலேயே முழங்கியவர் அ.கி.நாயுடு என்று புகழ்ந்துள்ளார் கல்வியாளர் எஸ்.எஸ்.ஆர் .


தீவிர சுயராஜ்ய பிரசாரத்தில் ஈடுபட்ட அ.கி.நாயுடு, 1924ல் துவக்கப்பட்ட சர்வஜனா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்த, 1948 வரை பணியாற்றியவர். அவரது மகன் முப்பால் மணி, அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
"ஒரு மரம் செழித்து வளர்ந்து, பழுத்து பட்டுப் போவதைப் போல் என் தந்தை மறைந்தார்'' என்று அ.கி.நாயுடுவைப் பற்றிய நினைவுகளில் நெகிழ்கிறார் முப்பால்மணி.


"எனது தந்தை 1888ல் பிறந்து 92 வயது வரை வாழ்ந்தார். அவரின் தாய்வழித் தாத்தாவும், மாமாவும் பதிப்பாளர்களாக இருந்ததால், அவருக்குள் எழுத்து தாகம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. "பூளைமேடு வரலாறு' உள்ளிட்ட 6 புத்தகங்கள் எழுதியது, அதன் வெளிப்பாடுதான். எனக்குத் தெரிந்து சித்திர வடிவில் எழுதப்படும் "ரத பந்தம்' என்னும் செய்யுள் வடிவத்தை அவரைத் தவிர வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை,'' என்றார்

அவர்.அ.கி.நாயுடு சொன்ன மணல் பள்ளம் எது என்ற கேள்விக்கு விடை தெரியாதவர்களுக்காக...குருடிமலைத் தொடர்களில் குட்டி குட்டியாய் உருவாகும் ஓடைகளில் வரும் வெள்ளத்தால் சங்கனூரில் உருவான பள்ளம்தான், சங்கனூர் பள்ளம். அந்த பள்ளத்தில் வெள்ளத்தோடு சேர்ந்து வந்த மணல், பீளமேடு மக்களுக்கு வீடு கட்ட பயன்பட்டதால், அதுவே மணல் பள்ளம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது; அன்று மணல் பள்ளமாக இருந்த சங்கனூர் பள்ளம்தான், இன்று ஊரையே "மணக்க' வைக்கும் சாக்கடைப் பள்ளமாக மாறியிருக்கிறது.                                                                                    

புதிதாய் மலரும் பீளமேடு வரலாறு!: அ.கி.நாயுடு எழுதிய "பூளைமேடு வரலாறு' என்ற நூல், இப்போது இருப்பது ஒன்றிரண்டு மட்டுமே; சந்ததிகளைத் தாண்டி சரித்திரம் சொல்லும், அந்த நூலைப் புதுப்பித்து, வரும் தலைமுறைக்கும் நம் வரலாற்றைக் கடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம், நமக்கு இருக்கிறது. அந்த மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வந்திருக்கிறது, "ராக்' அமைப்பு.                                       

"ராக்' செயலர் ரவீந்திரன் கூறுகையில், ""பூளைமேடு வரலாற்று நூலை புதிய பதிப்பாகக் கொண்டு வர "ராக்' முடிவு செய்துள்ளது. அதன் கருத்துக்கள், பதிவுகள் சற்றும் பிறழாத வகையில், இன்றைய தலைமுறைக்குப் புரியும் மொழியில், பூளைமேட்டின் இன்றைய வளர்ச்சி குறித்த தகவல்களையும் சேர்த்து, புதிய மலராக விரைவில் மலரும் பூளைமேடு வரலாறு,'' என்றார்.      


நன்றி :- தினமலர் நவம்பர் 12,2011,08:52 IS

0 comments:

Post a Comment

Kindly post a comment.