Thursday, November 8, 2012

நிச்சயமாக இந்திய ஊடகம் பொறுப்பற்றும் அழுகிப்போயும் இருக்கிறது. -suthaanu guru, 14-11-2011, the sunday indian

 


( தில்லியில் , நியூஸ் பேப்பர் சொசைட்டிக்கு என்று ஓர் கட்டிடம் இருக்கின்றது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னரும், அந்தக் கட்டிடத்தின் நுழைவாயில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில்,
INDIAN EASTERN NEWS PAPER SOCIETY என்ற பெயர்தான் உள்ளது. EASTERN என்ற வார்த்தையை எடுக்கவேண்டும்  என்ற உணர்வு இன்றளவும் யாருக்கும் தோன்றவில்லை. சென்ற செப்டம்பர் 15, 16, தினமணியும் தில்லித் தமிழ்ச்சங்கமும் இணந்து நடத்திய அனைத்திந்திய  தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டிற்குச் சென்ற போது நேரிற் கண்டு வருந்திய ஓர் நிகழ்வு வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது )


சுதானு குரு | நவம்பர் 14, 2011 17:12

இந்த விஷயம் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமற்றதாகவோ புறக்கணிக்கத்தக்கதாகவோ இருந்திருந்தால் நான் வயிறு வலிக்க சிரித்திருப்பேன்..

ஆமாம், இந்திய பத்திரிகைக் கவுன்சிலின் புதிய தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, இந்திய ஊடகம் மீது வைத்த தீவிர விமர்சனம் உருவாக்கிய தீ பற்றித்தான்    நான் பேசுகிறேன். அந்த விமர்சனத்துக்கு இந்திய ஊடகத்தின் சங்கராச்சாரியார்களும், அயதுல்லாக்களும் மற்றும் கார்டினல்களும் சேர்ந்து செய்த மோசமான எதிர்வினையைப் பற்றியும் பேசுகிறேன்.

இதுதொடர்பான விவரங்களுக்குள் சென்று உங்களை அலுப்படைய வைப்பதற்கு முன்பு  ஊடகப்பண்டிதர்களின்  கழுகுக்கண்களில் படாத உலுக்கும் அம்சத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

செய்திகளைப் பொறுப்பற்றும் அபாயகரமான வழியிலும் இந்திய ஊடகங்கள் வெளியிடுகின்றன என்பது நீதிபதி கட்ஜூவின் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று.  நமது ஊடகக் கடவுளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதனால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் பிரதிநிதியான பிஇஏ (செய்தி ஒளிபரப்பு ஆசிரியர்கள் அமைப்பு) நீதிபதி கட்ஜூவை கடுமையாக விமர்சனம் செய்தன. அந்த விமர்சனங்கள் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவத்துடன் வெளியிடவும்பட்டது. ஆனால் அந்தத் தாக்குதல் அறிக்கைக்குள் இருந்த ரத்தினம்தான் என்னை மிகவும் சிரிக்க வைத்தது. செல்லத்தினால் சீரழிந்த பிள்ளை ஒன்று தான் அதிகம் சீரழியவில்லை என்று சொல்வதைப் போல பிஇஏ கூறுவதைப் பாருங்கள். அயோத்யா மற்றும் கோபால்பூர் கலவரங்களை சமநிலை இயல்போடு வெளியிட்டதாக அந்த அமைப்புக் கோருகிறது. அப்படியானால் இதற்கு முன்னால் நடந்த சம்பவங்களை பைத்தியக்காரத்தனமாகவும் சமநிலையற்றும் வெளியிட்டனவா? பொது அறிவு படைத்த யாருக்கும் அவர்கள் சொல்வதில் எத்தனை உண்மை உள்ளது என்று தெரியும்.

நான் இன்னும் ஏராளமான குறிப்புகளைக் கூறி உங்களை அறுக்கப்போகிறேன். அதன்மூலம் நீதிபதி கட்ஜூவின் அதிகார மனநிலையும் இந்திய ஊடகங்களின் சகிப்புத்தன்மையற்ற மனநிலையையும் வெளிப்படுத்தப் போகிறேன்.

ஒன்று பிஇஏ தொடர்பானது.

மற்றொன்று எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பானது.

 “மிகப்பெரிய தாரீமகப் பொறுப்பை சுமந்து வெளியிடப்படும் கோபம் அதன் நோக்கத்தை நிறைவேற்றாது” என்று பத்திரிக்கை ஆசிரியர்கள் அமைப்பு கூறியிருக்கிறது.

சற்று நிதானித்து யோசித்துப் பார்க்கலாம். இந்தியாவின் தொலைக்காட்சி செய்தியாளர்களின் தொனி, அழுத்தம் மற்றும் அணுகுமுறையை எப்படி விவரிக்க முடியும்.  2 ஜி விவகாரம், ராடியா விவகாரம், சீன ராணுவ அச்சுறுத்தல் ஆகிய செய்திகளை அவர்கள் எப்படி விவரித்தார்கள்?

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து இராமாயணம் குறித்த பாடத்தை எடுத்தபோது இந்திய மதச்சார்பின்மையே அழிந்ததென்று கூறினார்களே? அப்போது இந்தக் கோபத்தின் இயல்பு பற்றி யாருக்கும் புத்தி இல்லையா?

அடுத்து எடிட்டர்ஸ் கில்டின் இரண்டாவது குறிப்பைப் பற்றி பார்ப்போம். இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் புதிய தலைவர் மோசமான வகையில் மேம்போக்காக, போதுமான தகவல்கள் இன்றி ஊடகங்கள் மீதும் ஊடகப்பணியாளர் மீதும் குற்றம்சாட்டுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடந்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தைச் சுற்றி எழுப்பப்பட்ட பரபரப்பையும் அதற்கு முன்பு ஏப்ரல் மாதம் நடந்த சந்தடிகளையும் நினைவுகூறுங்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு அரசிய்லவாதியும் ஊழல்திருடன் என்று முத்திரை குத்தப்பட்டது மோசமானதோ மேம்போக்கானதோ விவரம் அற்றதும் இல்லையா?

இதற்கு இன்னொரு உதாரணத்தை நான் சொல்லவேண்டும். லிபியாவின் கடாபி கொல்லப்பட்ட விஷயத்தில் இந்திய ஊடகம் என்ன செய்கிறது? மேற்கத்திய ஊடகங்கள் சொல்வதையே கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்கிறது.

ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்யும்போது அமெரிக்கா கூறிய பொய்களை நமது இந்திய ஊடகத்தின் சிறந்த அறிவாளர்கள் அறியாதவர்களா? இன்று ஊடக வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற வகையில் செய்திகள் வருகின்றன. அதற்கு இணையத்தளங்களுக்கு தான் நாம் நன்றி கூறவேண்டும்.

இதைக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். ஆனால் நடுநிலையுள்ள, நியாயமான, விருப்புவெறுப்புகள் அற்றதாக ஊடகம் இருக்கவேண்டும் என்ற கற்பிதமே முட்டாள்தனமானது.

ஊடகங்கள் கருத்தியலைச் சுமப்பவை. ஒரு கருத்தியலை சும்பபவராக நீங்கள் இருந்தால் எம்.எப்.ஹூசைன் வேட்டையாடப்பட்டு இந்தியாவை விட்டு  வெளியேற்றப்பட்டதை கவனிப்பீர்கள்.

மற்றொரு கருத்தியலைச் சும்பபவராக இருந்தால் தஸ்லிமா நஸ்ரீன் தன் நாட்டை விட்டு இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட  வெட்கக்கேட்டைக் கவனிப்பீர்கள்.

வாசகர்களோ பார்வையாளர்களோ அடிமுட்டாள்கள் அல்ல. உங்களது கருத்தியல் சார்புகளை திறந்து நேர்மையாக காட்டும்போது அவர்கள் பாராட்டுவார்கள். ஆனால் உங்களைப் புனிதமானவர் என்று கருதிக்கொண்டு மோசமான முறையிலும், மேம்போக்காகவும் விவரமற்றும் வெளிப்படாதீர்கள்.

ஊடகங்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து பணம்பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுவது குறித்து இந்திய ஊடக வாடிக்கையாளர்களுக்கு தெரியும். இதைக்கூட ஊடகங்கள் வெளியிடவில்லை. இணையத்தளங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்திய ஊடகங்கள் ஒன்று சேர்ந்த கூட்டமைப்பு போல ஒருங்கிணைந்து வெட்கமற்று உறுதியாக நிற்பது போல தோற்றம் கொடுத்தாலும் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளின் நாற்றம் அத்தனை சீக்கிரம் நீங்கிவிடாது.

பணம் கொடுத்துச் செய்தி வெளியிடும் முறைகேடுகளைக் குறைக்க இந்திய ஊடகங்கள் உறுதியாக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை வாசகர்களும் பார்வையாளர்களும் நன்கு அறிவார்கள்.

நீதிபதி கட்ஜூவை மட்டும் ஏன் தாக்கவேண்டும்? பொது அறிவுள்ள இந்தியர்கள் இந்திய ஊடகங்களைப் பற்றி பேசும்போது எரிச்சலுடன் ஏமாற்றமாகவே உணர்கின்றனர். அரசியல் ஊழல் பற்றி பேசும்போது இத்தனை விமர்சனத்தொனியுடன் பேசும் நீங்கள் ஊடக ஊழல்பற்றி ஏன் முகம் திருப்புகிறீர்கள்?

ஸ்வாமி அக்னிவேஷ், பிக் பாஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறப்போவதை இந்திய ஊடகங்கள் எப்படி வெளியிட்டன?

ஐஸ்வர்யாராய் பச்சனின் குழந்தை பிறப்பைப் பற்றிய செய்திகளை வெளியிட தொலைக்காட்சிச் செய்தி ஆசிரியர்கள் எப்படித் தமக்குத்தாமே விதிமுறைகளை வகுத்துக்கொண்டனர்! இவையெல்லாம் சிரிப்பிற்கிடமானவை.

 இந்தி மற்றும் பிராந்தியத் செய்தி தொலைக்காட்சிகளை மட்டும் விமர்சிப்பது எளிது. ஆனால் எல்லாருமே பரபரப்பாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றனர். மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவர்கள் கூறலாம்.

ஸ்வாமி அக்னிவேஸ் பிக்பாசில் இடம்பெறும் செய்தியை விட நீலப்படத்தைக் காண்பித்தால் கூடுதலான பார்வையாளர்கள் கிடைப்பார்களே என்ற கேள்வியே எனக்கு எழுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்ற அனுகூலத்தையும் சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு சந்தை சக்திகளின் பேச்சையும் கேட்டு மக்கள் விரும்புவதையும் எப்படி உங்களால் செய்யமுடிகிறது?

பெரும்பாலான மக்கள் தேர்தலில் வாக்களிக்க இலவச மதுவும் பணமும் கேட்கின்றனர். அவர்கள் விரும்புவதை அரசியல்வாதிகள் கொடுப்பதில் என்ன தவறு? அவர்களும் சந்தை எதைக் கேட்கிறதோ அதைத்தானே தருகின்றனர்.

இப்போது நான் பேசியதெல்லாவற்றையும் விட இந்திய ஊடகங்களின் தோல்வியைத் தெள்ளத்தெளிவாக காட்டுவது தேர்தல் முடிவுகளுக்கு முன்பு மக்களின் மனநிலையை அறிவதில் ஊடகங்களின் தோல்வியைத்தான்.

1980 களில் இளம் பத்திரிக்கையாளனாக நான் இருந்தபோது காங்கிரஸ் ஆதரவுத் செய்தித்தாள்கள் அக்கட்சி, ஹரியானாவில் பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்து கூறின. அங்கே காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது.

சமீபத்தில் கூடத் தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கடும்போட்டி இருக்கும் என்று ஊடகங்கள் கணித்தன. திமுக மண்ணைக் கவ்வியது. இதுபோல பல உதாரணங்களை நான் கூறிக்கொண்டே செல்ல முடியும். முடிவு தெள்ளத்தெளிவாக தெரியும் நிலையில் உங்களால் எப்படி தேர்தல்களைத் தவறாகக் கணிக்க முடிகிறது? ஒரு குழந்தை கூட தெரிந்துகொள்வதை உங்களால் எப்படி அறியமுடியாமல் போகிறது?

நீதிபதி கட்ஜூ, தான் சர்வ அதிகாரமும் பொருந்திய நீதிபதியாக, தண்டனை கொடுப்பவராக ஆக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதை புத்தியுள்ள எந்த நபரும் சம்மதிக்க மாட்டார்.

ஆனால் அன்னா ஹசாரே இதையே கோரியபோது ஊடகங்கள் மகிழ்ந்து கூத்தாடின. சரி முடிவுக்கு வருவோம்.

இந்தியாவில் அனைத்துத் துறைகளையும் போல இந்திய ஊடகமும் படிப்படியாகச் சீரழிந்துள்ளது. ஊடக சுதந்திரம் என்ற வெற்றுகோஷத்தின் பின்னால் இருந்துகொண்டு அதையே கேலிக்கூத்தாக்கும் செயல்களில் ஈடுபடுவது அந்தச் சுதந்திரத்திற்கு நிச்சயம் ஆபத்தையே விளைவிக்கும். 

(Disclaimer: The views expressed in the blog are that of the author and does not necessarily reflect the editorial policy of The Sunday Indian)                                                                                               

நன்றி :- த சன்டே இந்தியன்.

ஒரு வலைப்பதிவர்  ஓராண்டுக்கு முன்னர் எழுதியது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.