Thursday, November 8, 2012

ஹைதராபாத்தில் “ நீலநிற அஜெண்டா “ -ஆர்.எஸ் நாராயணன்

"பச்சை'யைப் புரிந்துகொண்ட மக்கள் "நீலத்தை'ப் புறக்கணித்துவிட்டார்கள்.

 ""நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'' என்று கவிஞர் பாடியதை மறக்க முடியாது.  இக்கடலும் வானும் ஆபத்தில் உள்ளனவே?

 பல்லுயிர்ப் பெருக்கத்தில் நிலத்தின் பங்கைவிட நீரின் பங்கு அதிகம். பல்லுயிர்ப் பெருக்கம்  அல்லது "பயோ-டைவர்சிடி' என்ற பேச்சு வரும்போது மரங்கள், காடுகள், புல்வெளி, நெல் வயல்கள் ஆகியவற்றில் தோன்றும் பசுமை அல்லது பச்சை நிறம் மட்டுமே நினைவுக்கு வரும்.

 ஆழிசூழ் உலகத்தில் கடலின் பங்கு மூன்றில் இரண்டு பாகத்தைவிட அதிகம். மனிதர்களின் சுவாசக் காற்றாகிய ஆக்சிஜன் ஊற்றே கடல்வடிவில் உள்ளது!

 வனங்களைக் கொள்ளையடிப்பது கண்ணுக்குத் தெரிவதுபோல், கடல் கொள்ளை  கண்ணுக்குத் தெரியவில்லை. தேவைக்கு மேல் மீன்களைப் பிடித்து உண்ணும் மனிதர்கள் மீன்களின் இனப்பெருக்கம் பற்றியோ மீன்களின் வாழ்விடங்கள் பற்றியோ கவலைப்படவில்லை. "நீலப்புரட்சி' என்பது மீன் உற்பத்தியை மட்டுமல்ல, கடல் வளத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதை உள்ளடக்கியதாகும்.

 2012-ஆம் ஆண்டு இறுதியில் ஐ.நா.வின் புவி மகாநாடு ஹைதராபாதில் நிகழவுள்ளது. விவாதப்பட்டியல் (அஜண்டாக்கள்) விரிந்தவண்ணம் உள்ளது.

இம் மகாநாட்டின் சிறப்பு, முதல் புவி மகாநாடு 1992-இல் ரியோடி-ஜெனிரோவில் கூட்டப்பட்டதல்லவா? அப்போது, பல்லுயிர்ப்பெருக்கப் பாதுகாப்பு சட்ட அங்கீகாரம் பெற்று 193 நாடுகள் கையொப்பமிட்டிருந்தன.

20 ஆண்டுகள் கழித்து "வளம்குன்றா வளர்ச்சி' மறுவிவாதத்துக்கு விடப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவுக்கு ஹைதராபாத் மகாநாடு விடையளிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.  ஹைதராபாத் மகாநாட்டில் மிக முக்கியமாக கடல், கடற்கரை, மீன்வளம் தொடர்பான வளர்ச்சி - அதாவது நீலப்புரட்சி - விவாதத்துக்கு வருகிறது.

 ஐ.நா. புள்ளிவிவரங்களின்படி உலகில் 50 கோடி மக்களின் வாழ்வாதாரம் கடல்; 500 கோடி மக்கள் தங்களின் புரதத் தேவையை மீன் உணவிலிருந்து பெறுகிறார்கள் என்று தெரிகிறது.

அதே சமயம் மொத்த மீன் வளத்தில் 80 சதவீதம் சுரண்டப்பட்டுவிட்டது; நீலப்புரட்சியின் விளைவால் கடலில் மீன்வளம் வேகமாகக்  குறைந்துவருவதுடன், கடலில் மாசு அதாவது ரசாயனக் கழிவுகள், "செப்டிக் டேங்க்' கழிவுகள், கப்பல் போக்குவரத்து - துறைமுகங்களின் பெட்ரோலியக் கழிவுகள் வழங்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இந்த  மகாநாட்டில் இவை பற்றியும் விவாதிக்கப்படும்.

 இந்த ஆண்டு முடிவில்  நிகழவிருக்கும் ஹைதராபாத் பூமி மகாநாட்டுக்குரிய வரவேற்பாக, 15.10.2012 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சேது சமுத்திர திட்டத்தைக்  கைவிட வேண்டும்' என்று தில்லி உச்ச நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்துள்ளார்; இதன் மூலம் நிலத்தைக் காப்பாற்றும் நற்பணியை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

 உலகப் பல்லுயிர்ப் பெருக்க முக்கியத்துவம் வாய்ந்த பெரிய "பயோ-ரிசர்வு' மன்னார் வளைகுடாவின் நீர்ப்பரப்பு 550 கிலோ மீட்டராகும். இப்படிப்பட்ட அரிய "பயோ-ரிசர்வு' மீன் வள எல்லைகள் - பவளப் பாறைகள், கோடானுகோடி நீர்வாழ்வன, கடல் பாசிகள் ஆகியவற்றைக் காப்பாற்ற முன்வந்த தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள்.

 சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் "கொள்ளை' அடிக்க நினைத்த அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இது கசக்கலாம். தேசபக்தியுள்ளவர்களுக்கு, இயற்கை ஆர்வலர்களுக்கு இது இனிப்பான செய்தி. இதில் ராமர் பாலம் காப்பாற்றப்படுவது முக்கியமான விஷயம் இல்லை.
 கோடானுகோடி நீர்வாழ் உயிரினங்களும், மீன் வளமும், பவழப்பாறைகளும் காப்பாற்றப்படுவதைப் போற்ற வேண்டும். வளர்ச்சியின் "போதை'யில் இந்தியாவைச் "சுத்தம்' செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்குப் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய நுண்ணறிவு வற்றிவிட்டது வருந்தத்தக்கது.

 இந்தியாவின் கடல்வளம் பெரிது. வங்கக் கடல், அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் சூழ்ந்த இந்தியக் கடற்கரையின் நீளம் சுமார் 3,200 கிலோ மீட்டர். இந்தியாவின் "நீலநிறம்' நீளமானது. பலகோடி மக்களின் ஜீவாதாரமாய் விளங்கும் கடலில் கருமை சூழ்ந்து நீல நிறம் மாறிவருகிறது.

 உலகத்தில் மொத்தம் 17 நாடுகள் "மெகா' பல்லுயிர்ப் பெருக்க நாடுகளாகும். அதில்  இந்தியா ஒன்று. உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதமே இருப்பினும் 8 சதவீதம் பல்லுயிர் வகையினங்களைக் கொண்ட நாடு இந்தியா. 45,500 வகையான பயிரினங்களும் 91,000 வகையான விலங்கினங்களும் பல்லாயிரம் வகையான நீர்வாழ் உயிரினங்களும் கொண்ட இந்தியாவின் பல்லுயிர் வளம்தான் நமது நிஜமான செல்வம்.

 1992-இல் நிகழ்ந்த பூமி மகாநாட்டில் முதல்முறையாக பல்லுயிர்ப்பெருக்கங்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் இதைத் தொடர்ந்து பல்லுயிர்ப்பெருக்க சட்டம் இயற்றப்பட்டது.

 இச்சட்டத்தின்படி இந்தியாவின் "பயோ ரிசர்வு'களில் அடங்கிய வகை இனங்கள் எல்லாம் தேசத்தின் சொத்து என்ற அளவுடன் நிற்கிறது.

அதே சமயம் அவற்றை எந்த அளவு காப்பாற்றி வருகிறோம் என்ற கேள்விக்கு விடை இல்லை.

 தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் 2003-இல் சென்னையில் உருவாக்கப்பட்டு 26 மாநில பல்லுயிர்ப் பெருக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து அளவில்கூட பல்லுயிர்ப் பெருக்க நிர்வாகக் குழுக்கள் செயல்படுவதாகச் சொல்லப்பட்டாலும், குழு உறுப்பினர்களுக்குப் பல்லுயிர்ப் பெருக்கம் என்ற வரையறை பற்றியோ, பல்லுயிர் வகையினங்களின் பொருளாதார மதிப்பு பற்றியோ அறியும் வாய்ப்பு இல்லை. பல்லுயிர் வகையினங்கள் அழிந்த வண்ணம் உள்ளன. வளர்ச்சியின் பெயரால் பல்லுயிர்ப் பெருக்க அழிவைச் சட்டத்தால் தடுத்து நிறுத்துவது இயலாத செயலாகிவிட்டது.

  பல்லுயிர்ப் பெருக்கத்தின் பலன்கள், பணமதிப்பு குறித்த நுண்ணறிவு, பல்லுயிர்ப் பெருக்கம் என்பது வளர்ந்து செழிக்கும் செல்வ ஊற்று என்ற உண்மை நிலை ஆகியவை மக்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இவை வெளிப்படையாகத் தெரியவில்லை. காடுகளையும் பிற "பயோ-ரிசர்வு'களையும் பாதுகாப்பதின் மூலம் 307 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மாசுக்கட்டுப்பாடு - ஓசோன் படல சுத்திகரிப்புப் பணி - நிகழ்வதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் ஐ.நா. மகாநாடு ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நிகழ்ந்தது. அதில் பல்லுயிர்ப்பெருக்க உடன்பாடு பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் எந்த அளவில் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்பை நிறைவேற்றியுள்ளன என்பது குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமான அம்சம் கடலும் கடல்சார்ந்த இடங்களின் பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு, முக்கியமாக மீன்வளம். மீன்கள் குஞ்சு பொறிக்கும் பவளப் பாறைகளின் பாதுகாப்பு, கடற்கரைப் பகுதிகளில் மாசுக்கட்டுப்பாடு ஆகியவை விரிவாக விவாதிக்கப்படும்.

 2012 ஹைதராபாத் மகாநாட்டில் மகா முக்கியத்துவத்தைப் பெறப்போவது நீளமான "நீலநிற அஜன்டா' - கடலுடன் இணைந்த நெய்தல் நிலப் பல்லுயிர்ப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகளே ஆகும். மீன்வளப் பாதுகாப்புக்குரிய கடல் பகுதியில் ஆழ்கடல்வரை நோண்டக்கூடிய "சோனார்' பொருத்தப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறைக்குத் தடை விதிக்கக் கோருவது.

இப்படிப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தும்போது, மேல்மட்டத்தில் வரும் மீன்களைப் பிடிக்கும் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புறுவதுடன், "சோனார்' மீன்பிடிப்பு முறையில் - வளரவேண்டிய மீன் குஞ்சுகள், மீன் இனப்பெருக்கக் காப்பகங்கள் எல்லாவற்றையுமே அள்ளிக்கொண்டு வருவதால் "சோனார்' மீன் கப்பலுக்குத் தடை கோருதல்.

 ஆழம் குறைவான கடல் பகுதிகளில் குறிப்பாக மன்னார் வளைகுடா, ராமேஸ்வரம்,  வேதாரண்யம், முத்துப்பேட்டை, பூம்புகார், தொண்டி சார்ந்த கடல் பகுதிகளில் பவளப் பாறைகள் மிகுந்துள்ளன. "மாங்குரோவ்' என்று சொல்லப்படும் அலையாத்திக் காடுகளும் உண்டு. இவை காப்பாற்றப்படுமானால் காலம்காலமாக மீன்பிடிப்புத் தொழிலும் மீன் உற்பத்தியும் தொடரும்.

கடல் ஆழமில்லாமல் உள்ளதன் காரணம் அலைகள் கொண்டுவரும் பீச்சு மணல்களாகும். ஆழமற்ற கடலில் சேதுசமுத்திரக் கால்வாய் அல்லது புதிய துறைமுகங்கள் ஆகியவற்றை அமைக்கும்போது கடற்கரைகளுக்கு வரவேண்டிய மணல்வரத்து நின்றுவிடுகிறது.

 கடற்கரைகளுக்கு மணல் வராவிட்டால் நெய்தல் நில நன்னீர் உவராகும். கடல்நீர் நன்னீர் ஊற்றுகளில் புகுந்துவிடும். விவசாய நிலம் பாழாகும். கடற்கரைச் சூழல்வளம் கெட்டுப்போகும். ஆழமற்ற கடலில் ஆழம் தோண்டத்தோண்ட மணல் மூடியவண்ணம் இருக்கும். சேது சமுத்திரத் திட்டப்பணி நின்றதன் காரணம் "டிரெட்ஜர்' (மண்வாரி இயந்திரம்) இயங்க மறுத்ததும் "டிரெட்ஜர்' கத்தி உடைந்ததும் என்பது நினைவிருக்கலாம்.

 கடலில் இவ்வாறு மணலை அள்ளி அள்ளிக் கொட்டுவதால் எங்கோ செல்ல வேண்டிய கடற்கரை மணல் கடலுக்கு வெளியே ஒரே இடத்தில் குவிவதுடன் பவளப் பாறைகள், மீன் இனப்பெருக்கம் ஆகியவற்றையும் சேதப்படுத்தும். அப்படியே தேவைக்கு மேல் அருகருகே துறைமுகம் கட்டுவதும் நெய்தல் உயிர்ச் சூழலுக்கும் பீச் மணல் சேகரத்துக்கும் கேடுவிளைவிக்கும். மீன் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

 கடலும் கடல்சார்ந்த நெய்தல் நில உயிர்ச் சூழலையும் மீனவர்களின் வாழ்நிலையையும் பாதிக்கக்கூடிய கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்கள் பற்றியும் ஹைதராபாத் மகாநாடு விவாதிக்கும்.

 ஐ.நா. அமைப்பு வழங்கும் தகவல்களின்படி, நிலங்களில் உள்ள உயிர்ச் சூழல் பாதுகாப்பு 15% எட்டப்பட்டாலும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு 1% கூட எட்டப்படவில்லை என்பதால் எதிர்காலத்தில் மீன் உணவுக்குப் பெரும் நெருக்கடி ஏற்படும்; இதனாலேயே வளர்ச்சி என்ற போர்வையில் தேவைக்குமேல் கடல்வளம் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கடலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மீனவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ஹைதராபாத் மகாநாடு உரத்த குரலில் வலியுறுத்தும்.

 நீளமான கடற்கரைகளின் நீடித்த நீலப்புரட்சி நிலைபெற வேண்டும். வாழ்க பாரதம்.                                                                                                                                           

நன்றி ;_ தினமணி, 08-11-2012






0 comments:

Post a Comment

Kindly post a comment.