Thursday, November 8, 2012

விஸ்வரூபம்: மதத்தைப் பற்றியதல்ல; மனிதர்களைப் பற்றிய படம்: கமல்ஹாசன் !



"விஸ்வரூபம்' படம், மதத்தைப் பற்றியதல்ல; மனிதர்களைப் பற்றியது என்றார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் "விஸ்வரூபம்'. இந்தப் படம் ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் ஆசியாவில் வெளியாகும் முதல் படம் இதுவாகும்.

"விஸ்வரூபம்' படத்தின் ஆரோ 3டி டிரெய்லர், கமல்ஹாசனின் பிறந்த நாளான புதன்கிழமை (நவம்பர் 7) வெளியிடப்பட்டது.

இதற்காகப் பிரத்யேகமான தொழில்நுட்பத்துடன் சென்னை சத்யம் திரையரங்கு உருவாக்கப்பட்டிருந்தது. டிரெய்லரை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:

என்னுடைய பிறந்த நாளில் மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் "விஸ்வரூபம்' படத்தின் பாடல்களை வெளியிட்டு நலத் திட்ட உதவிகள் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஒரே நாளில் மூன்று நகரங்களில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலமாக எனது பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் இந்த டிரெய்லரை வெளியிடுகிறோம் என்றார் கமல்ஹாசன்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் ஆப்கன் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சிறுபான்மையினரைப் புண்படுத்துவதுபோல் அமையாதா எனக் கேட்டபோது...

நம் ஊரில்தான் மற்ற மதத்தினர் சிறுபான்மையினர். ஆனால் உலகம் முழுமைக்கும் என்று பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையினர்தான்.

இது மதத்தைப் பற்றிய படம் அல்ல; மனிதர்களைப் பற்றிய படம். என்னைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் கலைஞர்கள்தான் சிறுபான்மையினர் என்று பதிலளித்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாவதால் பிரிண்டுகள் போடும் பணி நிறைவடைந்தவுடன் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதாக கமல்ஹாசன் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.