Thursday, November 29, 2012

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film) !

அழுது கொண்டிருக்கிற குழந்தையின் கையில் ஒரு சாக்லேட்டினைக் கொடுத்தாலே போதும், தன்னுடைய அழுகையினை உடனே நிறுத்திவிட்டு முகமலர்ச்சியோடு சிரிக்கத்துவங்கிவிடும். அந்த அளவிற்கு சாக்லேட் என்பது அனைவருக்கும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடித்தமான ஒரு உணவுப்பொருளாகிவிட்டது.

 தெருமுனைப்பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை, சாக்லேட் விற்பனை நடைபெறாத கடைகளே இல்லை எனலாம். ஓராண்டிற்கு உலகம் முழுவதிலும் முப்பது லட்சம் டன் அளவிற்கான சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன... ஐரோப்பாவில் மட்டுமே அதில் பாதியளவிற்கு உண்டு தீர்க்கிறார்கள்.





சாக்லேட்டின் இந்த இமாலய வெற்றிக்குப்பின் பெரும் சோகம் மறைந்திருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தினந்தோறும் விதவிதமான சாக்லேட்டுகளை உண்கிற அதேவேளையில், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் நிலையோ வேறுமாதிரி இருக்கிறது. சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான "கோகோ" உற்பத்தி செய்யும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தபடுவதனை ஒட்டுமொத்த சாக்லேட் தொழில்துறையே செய்துவருகிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். நாம் மகிழ்ந்துண்ணும் இனிப்பான சாக்லேட்டுகளின் தயாரிப்பின் பின்னே, கசப்பான ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவை உலகிலேயே அதிகளவில்
 (42 %) உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவின் "ஐவரி கோஸ்ட்" என்கிற நாடுதான். ஆனால் உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஐவரி கோஸ்டும் ஒன்று என்பதுதான் முரண்.

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film)

சாக்லேட் நிறுவனங்களின் வருடாந்திர கண்காட்சி:

குழந்தைகள் கடத்தல், கட்டாயக் குழந்தைத்தொழிலாளர் முறை போன்றவை உண்மையானதுதானா எனக்கண்டறிய டென்மார்க்கைச் சேர்ந்த "மிக்கி மிஸ்திராதி" என்கிற பத்திரிக்கையாளர் முடிவெடுக்கிறார். அதனை ஒரு ஆவணப்படமாகவும் தயாரித்தார். உண்மை எப்போதும் அபாயகரமானது என்பதால், தன்னுடைய அடையாளங்களை மறைத்தும் சட்டைக்குள் ஓட்டை போட்டு கேமராவினை மறைத்தும் அவர் உருவாக்கிய படத்தின் பெயர்தான் "The Dark side of Chocolate".
ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜெர்மனியிலிருக்கும் கொலோன் என்கிற நகரில் சந்தித்துக்கொள்வார்கள். அச்சந்திப்பில், சாக்லேட் தொழிலை வளர்த்தெடுப்பது மற்றும் விற்பனையைப் பெருக்குவது குறித்து விவாதிப்பார்கள். மிக்கி தன்னுடைய பயணத்தினை இச்சாக்லேட் கண்காட்சியிலிருந்து துவங்குகிறார்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிசர்லாந்தைச்சேர்ந்த "பேரி கேலபாட்" என்கிற நிறுவனம்தான் பெரும்பாலான மற்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு கோகோ பௌடரை விற்று விநியோகம் செய்கிறது.

பேரி கேலபாட்டின் துணைத்தலைவர் பேட்ரிக் ஹாட்பென்னேவை கண்காட்சியில் சந்திக்கிறார் மிக்கி.

இயக்குனர் மிக்கி : "ஐவரி கோஸ்டில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?"

 பேட்ரிக் ஹாட்பென்னே (பேரி கேலபாட்டின் துணைத்தலைவர்) : "எங்களுடைய நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 7400 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் தோராயமாக 1000 பேருக்குமேல் ஐவரி கோஸ்டில் மட்டும் பணிபுரிகிறார்கள்."

 இயக்குனர் மிக்கி : "குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் பணிபுரிவதாக வதந்திகள் இருக்கின்றனவே. அது குறித்து?"

 பேட்ரிக் ஹாட்பென்னே : "உண்மையாகவே இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்காவது ஒன்றிரண்டு அபூர்வமாக நடக்கலாம். அப்படியொன்று நடந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்..."                              

அக்கண்காட்சியில் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் குழந்தைத்தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து வாய்திறக்கவில்லை.

2001 லேயே குழந்தைத்தொழிலாளர்களை சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது என்று சாக்லேட் தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றின. இவற்றையெல்லாம் உலகுக்கு அறிவித்தவர்களே, இதனைச் செய்வார்களா? என்ற கேள்வியுடன் இயக்குனர் மிக்கி ஆப்பிரிக்காவிற்கே சென்று ஆய்வினை நடத்த முடிவெடுக்கிறார்.    

 குழந்தைக்கடத்தலில் உலகின் முதன்மை நாடு - மாலி :

மாலி என்கிற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகச் செய்தி நிலவுகிறது. எனவே தன்னுடைய பயணத்தை உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியிலிருந்து துவங்குகிறார் இயக்குனர்.

ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு மேற்கே இருக்கிற நாடுதான் மாலி. மாலி மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் குழந்தைகளை "சிகாசோ" என்கிற பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குதான் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து புறப்படுகிற பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு "செகுவா" என்கிற இடம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலி-ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கிடையிலான எல்லையினை குறுக்குப்பாதைகளில் கடந்து குழந்தைகளை ஐவரி கோஸ்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்கிற உண்மையினை மாலி நாட்டிலிருக்கும் ஒரு சமூகநல ஊழியர் மூலம் அறிந்துகொள்கிறார் இயக்குனர் மிக்கி.
இட்ரிகாசா கண்டே (சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்) : "குழந்தைகளைக் கடத்துவதென்பது எப்போதுமே இருந்து வருகிறது. எல்லாப் பேருந்துகளிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஐவரி கோஸ்டிற்கு செல்லும் குழந்தைகளின் வயது பொதுவாக 12 இலிருந்து 14 வரை இருக்கும். இதிலே பெண்குழந்தைகளும் உண்டு."
அவரால் இயன்ற அளவிற்கு, பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்படுகிற குழந்தைகளை மீட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தான் மீட்கிற குழந்தைகளின் பெயர், முகவரி போன்றவற்றை ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதியும் வருகிறார். 2006 இல் மட்டும் அவர் மீட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132 (35 பெண் குழந்தைகள் உட்பட). 2007 இல் அவ்வெண்ணிக்கை 140 (41 பெண் குழந்தைகள்). புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்கள்தான் அக்குழந்தைகள்.
ஒரு பேருந்து முதலாளி : "கிராமப்புறக் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழந்தைகளை பேருந்தில் கடத்துவார்கள். பேருந்தில் மாலி நாட்டின் எல்லை வரை குழந்தைகளைக் கொண்டுசெல்வார்கள். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் நாட்டு எல்லையினைக்கடந்து ஐவரி கோஸ்ட் நாட்டிலிருக்கும் கொரோகோ என்கிற இடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கோகோ தோட்ட முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள்."

பேருந்து முதலாளியிடம் பேசிவிட்டு வெளியே வருகிறபோது, அருகினில் நிற்கும் பேருந்தொன்றினில் ஒரு சிறுமி அங்குமிங்கும் முழித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். இயக்குனர் அவளருகினில் சென்றதும், அச்சிறுமியைக் கடத்திவந்த கடத்தல்காரப்பெண் தப்பித்து ஓடிவிடுகிறாள். அச்சிறுமியை விசாரித்துப்பார்த்தால், அவள் கொண்டுவரப்பட்டிருக்கிற பேருந்து நிலையத்திலிருந்து 450 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செகு என்கிற கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது.

அச்சிறுமியிடம், சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளரான இட்ரிகாசா கண்டே,
"உன்னை நான் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறேன். மீண்டும் இதுபோல் வந்துவிடாதே... நீ அங்கே சென்று காசெல்லாம் எதுவும் சம்பாதிக்க முடியாது. அங்கே போனால் வீணாகத்தான் போவாய்"
என அச்சிறுமியை எச்சரித்துவிட்டு அவளது வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். வாழ்க்கை முழுவதும் இதே போன்ற நிலைமையினைத் தினந்தோறும் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டே அழுகிறார் இட்ரிகாசா கண்டே.

குழந்தைக்கடத்தல் நடைபெறுகிற பாதையில் செகுவாவை நோக்கி இயக்குனர் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஒரு கிராமத்தில் நின்று, அங்கிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
பக்கரி (கிராமத்தலைவர்) : "500 வீடுகள் இருக்கிற எங்கள் கிராமத்திலிருந்து, இதுவரை 12 -15 வயதுள்ள 130 குழந்தைகள் காணவில்லை. கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுடைய கிராம சந்தைக்கு வருவார்கள். அங்கே அவர்கள் பார்க்கிற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் (தெரிவிக்காமல்) கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள்."

மேலும் பயணித்து, செகுவாவை வந்தடைந்து அங்கிருக்கும் உணவகமொன்றின் உரிமையாளர் மூலமாக குழந்தைகளைக் கடத்த உதவுகிற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது.
கடத்தலில் ஈடுபடுபவர் : "குழந்தைகளை எல்லைதாண்டி கடத்தும் வேலையினை ஒருவரே செய்வதில்லை. ஒருவர் மாலி நாட்டின் எல்லைவரை குழந்தையைக் கொண்டு செல்வார். இரண்டாமவர், யாருக்கும் தெரியாமல், நாட்டு எல்லையினைத்தாண்டிக் கொண்டுசெல்வார். மூன்றாமவர் ஐவரி கோஸ்ட் நாட்டினில் குழந்தையினைப் பெற்றுக்கொண்டு கோகோ தோட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பார். ஆக ஒரு கடத்தலை தனிப்பட்ட ஒருவர் மட்டும் செய்வதில்லை. அதே போன்று எல்லையோரம் வாழ்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் குழந்தைகளின் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதனை யாரேனும் மறுத்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகளை எல்லை தாண்டி கொண்டு விடுவதற்கு, கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுக்கு பணம் தருகிறார்கள். நானே பல பேரை கொண்டு சென்றிருக்கிறேன்."
செகுவாவிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைய, புறவழியொன்றின் வழியாகக் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறிந்துகொண்ட இயக்குனர் மிக்கியும் அதே புறவழி மண்சாலைவழியே சென்று பார்க்கிறார். 
 
சிகாசோவிலிருந்து வருகிற பேருந்துகளிலிருந்து குழந்தைகள் இறக்கப்படுவதும், உடனே அங்கே தயார் நிலையில் இருக்கும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலை வழியாக நேராக ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. 
 
இயக்குனரும் அதே வழியில் சற்று அதிக இடைவெளிவிட்டுப் பின்தொடர்கிறார். போகிற வழியில் சாலையோரத்தில் ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவன் தனியாக அழுதுகொண்டிருக்கிறான். கடத்தல்காரர்கள் யாரையாவது பார்த்துப் பயந்து, அச்சிறுவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். அச்சிறுவன் அவ்விடத்திற்கு எப்படி வந்தான் என்று சொல்லக்கூட முடியாதநிலையிலிருந்தான்.

குழந்தைத்தொழிலாளர்களே இல்லையாம் - முதலாளிகளும் ஆட்சியாளர்களும் 

இயக்குனரும் சில ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்களும் இணைந்து ஐவரி கோஸ்டின் பொருளாதாரத்தலைநகரான "அபிட்ஜானுக்கு"ச் செல்கிறார்கள். நெஸ்லே, கார்கில், ஏ.டி.எம்., பேரி கேலபாட், சாப் கோகோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அபிட்ஜானில் இருக்கின்றன. உலகின் 42 % கோகோ, ஐவரி கோஸ்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்நிறுவனங்கள்தான் ஐவரி கோஸ்டிலிருந்து ஒட்டுமொத்த கோகோ ஏற்றுமதியையும் செய்கின்றன.

கோகோ ஏற்றுமதி நிறுவனமான சாப் கோகோவின் (SAF Cocoa )
 முதலாளி அலி லகிசை சந்தித்து, குழந்தைகள் கடத்தல் குறித்தும், குழந்தைத்தொழிலாளர் குறித்தும் கேட்கிறார் இயக்குனர் மிக்கி.
அலி லகிஸ் : "நான் ஒரு கோகோ தொழில் குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோகோ தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்ததே இல்லை. கோகோ தோட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் முறையே இல்லை. ஐவரி கோஸ்டில் ஒரு குழந்தைத்தொழிலாளர்கூட கோகோ தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்பதனை ஒட்டு மொத்த உலகத்திற்கே சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பல குழுக்கள் வந்து முறையாக விசாரித்துவிட்டு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. எந்தவொரு அறிக்கையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்படவே இல்லை. நாட்டின் எல்லைகளில் கூட இது நடக்கவில்லை."
இயக்குனர் மிக்கி : "மாலியிலிருந்தும் புர்க்கினா பாசோவிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்டின் கோகோ தோட்டங்களில் வேலை செய்யவைக்கப்படவே இல்லை என்கிறீர்களா?"
அலி லகிஸ் : "இல்லை இல்லை இல்லவே இல்லை... எங்களது நிறுவனம்தான் ஐவரி கோஸ்டிலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். சும்மா எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு போகாதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்பதை நீங்களே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்கிறார் உலகின் மிகப்பெரிய கோகோ ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் அலி லகிஸ். அவருடைய நிறுவனம்தான் அதிக அளவில் நெஸ்லே நிறுவனத்திற்கு கோகோ விற்பனை செய்கிறது.
இயக்குனர் மிக்கியின் ஆவணப்பட முயற்சி குறித்து கேள்விப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் தொழிலாளர் துறையின் தலைமைச்செயலர்  "டோஹே ஆடம் மாலிக்", மிக்கியை அழைத்து பேச விரும்புகிறார்.
இயக்குனர் மிக்கி : "மாலி நாட்டின் செகுவா என்ற இடத்திலிருந்து குழந்தைகளை கடத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் புறவழிச்சாலை வழியாக ஐவரி கோஸ்டிற்கு வருகிறார்கள். இதனை நானே பார்த்தேன்"
டோஹே ஆடம் மாலிக் : "வருடா வருடம் கோகோ விளைச்சலானது அக்டோபரில் துவங்கி மார்ச்சில் முடியும். நீங்கள் ஜூலையில் மக்கள் வருகையினைப் பார்த்தீர்களானால், அவர்கள் கோகோவிற்காக வரவில்லை. அந்த நேரத்தில் கோகோ எங்குமே இருக்காது. அதனால் கோகோ தோட்டங்களில் வேலையும் இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்கள் எல்லாம் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். ஒரு பேருந்தில் 20 குழந்தைகள் இருந்தால் உடனே குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஐவரி கோஸ்டின் அழகைக் காண சுற்றுலா வருகிறார்கள்"
இயக்குனர் மிக்கி : "ஆனால் நான் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்"
டோஹே ஆடம் மாலிக் : "அதற்கு எங்களிடம் சட்டமெல்லாம் இருக்கிறது."
சொல்லிவைத்தாற்போல் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் ஒரே மாதிரி குழந்தைக்கடத்தலும் குழந்தைத்தொழிலாளர் முறையும் இல்லவே இல்லை என்று அடித்துச்சொல்கின்றனர்.
ஆதாரங்கள்:

ஆதாரம் ஒன்று:

கோகோ ஏற்றுமதி நிறுவன முதலாளி அலி லகிஸ் மற்றும் ஐவரி கோஸ்டின் தொழிலாளர் துறை முதன்மைச்செயலர் ஆகியோர் சொல்வது உண்மைதானா என்பதனை அறிய, ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியினை நாடுகிறார் இயக்குனர். மேற்குலக நாட்டவரை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மறைமுக கேமராக்களை கொடுத்து கோகோ தோட்டங்களை வீடியோ எடுக்க சொல்கிறார் இயக்குனர். அவர்கள் எடுத்து வந்த வீடியோவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தால், கோகோ தோட்டங்களில் முழுவதுமாக குழந்தைகள்தான் எல்லா வேலைகளையுமே செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஆதாரம் இரண்டு:

வீடியோவை பார்த்ததும், இயக்குனரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மீண்டுமொருமுறை கோகோ தோட்டங்களுக்கு செல்கிறார். அங்கே கைகளில் கத்தியும் உடலினில் வேர்வையுமாக கோகோ தோட்டங்களில் வேலை செய்கிற அச்சிறுவர்கள் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வந்தவர்களல்ல, தங்கள் மீதமுள்ள வாழ்க்கையையே கோகோ தோட்டங்களில் தொலைக்க வந்தவர்கள்.

ஒரு கோகோ தோட்டத்திலிருப்பவரைச் சந்தித்து (மறைமுகக் கேமராவை வைத்துக்கொண்டு), தங்களுடைய தோட்டத்திற்கும் குழந்தைத்தொழிலாளர்கள் வேண்டுமென்றும், எவ்வாறு பெறுவது என்றும், எவ்வளவு செலவாகுமென்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகக் கேள்வி கேட்கப்படுகிறது.
கோகோ தோட்ட முதலாளி : "எங்க பெரியண்ணன் இருக்கார். அவரிடம் எத்தனை குழந்தைகள் வேண்டுமென்று சொன்னால், ஏற்பாடு செய்வார். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் ஆகும்"
15,000 ரூபாய் கொடுத்தால், ஆயுள் முழுவதும் உழைப்பதற்கு சம்பளமே இல்லாத குழந்தை என்கிற பொருள் கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆதாரம் மூன்று:

கோகோ தோட்டங்களிலிருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லையென்றாலும், மிக அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகள் கோகோ தோட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

அவ்வாறு தப்பித்த இரு சிறுவர்கள்,
யாயா கொனாட்டே : "கடத்தல்காரர்கள் எங்களை எப்படியோ ஏமாற்றித்தான் அழைத்துச்சென்றார்கள். அங்கே நிறைய சிறுவர்-சிறுமிகள் இருந்தனர். நாங்கள் எல்லோரும் தப்பிக்க முயற்சி செய்தோம். தோட்ட முதலாளிகள் எங்களைத் துரத்தினார்கள். இரவெல்லாம் இருளினில் ஒளிந்து மறைந்திருந்தோம். மறுநாள், எங்களை பார்த்த வெளியாள் ஒருவர்தான் உதவி செய்து எங்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்."
சங்கா த்ரோரே : "கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ, கடுமையாக அடிப்பார்கள்."


ஆதாரம் நான்கு:

சர்வதேசக் காவல்துறையினர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்ததாகவும் 50 குழந்தைகளை மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. இயக்குனர் மிக்கி சர்வதேசக் காவல்துறை உயரதிகாரியை சந்திக்கப்புறப்படுகிறார்.
ஹென்றி ப்ளேமின் (சர்வதேச காவல்துறை தலைமை அதிகாரி) :
 "சாலைகள், சந்தைகள், கோகோ தோட்டங்கள் போன்ற இடங்களில் இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, அதன்பின் மேற்கொண்ட சோதனையில் 65 குழந்தைகள் வரை எங்களால் மீட்க முடிந்தது. எங்களது நடவடிக்கைகளை சற்று முன்கூடியே அவர்கள் அறிந்தமையால், பல குழந்தைகளை வீடுகளில் ஒளித்துக்கொண்டார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் அனைவரும், புர்க்கினா பாசோ, மாலி, டோகோ, நைஜர், நைஜீரியா, பெனின் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
இயக்குனர் மிக்கி : "கோகோ தோட்டங்களில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அளவிற்கு புதிய செய்தியாக இருந்ததா உங்களுக்கு?"
ஹென்றி ப்ளேமின் : "நிச்சயமாக இல்லை"
குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்முறை போன்றவை மிகச்சாதாரணமாக நடப்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏனோ சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாமல் (தெரிந்தும் ஒப்புக்கொள்ளாமல்) இருப்பது ஆச்சர்யம்தான்.

முதலாளித்துவத்தின் அடிப்படையே மனிதநேயத்திற்கு எதிரானதுதான்:


எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு சாப் கோகோவின் முதலாளி அலி லகிசை சந்திக்கிறார் இயக்குனர் மிக்கி.
இயக்குனர் மிக்கி : "சென்ற முறை உங்களை சந்தித்தபோது, ஐவரி கோஸ்டில் குழந்தைத்தொழிலாளர்களே இல்லை என்றீர்கள். ஆனால் சர்வதேச காவல்துறைகூட பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்."
அலி லகிஸ் : "ஐவரி கோஸ்டிற்கே இது மிக வருத்தமான செய்திதான். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் நானும் பார்த்தேன். இதெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிறது. அரசாங்கமும் இதனை எதிர்த்து போராடிவருகிறது."
என்கிற மிகப் பொறுப்பான(?!?) பதிலை உதிர்க்கிறார் அலி லகிஸ்.

ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஐ.நா. சபையின் ஒரு அங்கமான "சர்வதேச தொழிலாளர் ஆணையத்திற்கு" செல்கிறார் இயக்குனர் மிக்கி. உலகம் முழுவதிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பினையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டியுங்கும் அமைப்பிது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இதே அமைப்புடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒப்பந்தமொன்றினை கையெழுத்திட்டது.

சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் பிரான்க் ஹேகமன், மிக்கி காண்பித்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தபின்னர்,
பிரான்க் ஹேகமன் : "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகக் கடந்த 13 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஆனால் இது போன்ற வீடியோ காட்சிகளை பார்க்கிறபோதெல்லாம், அதிர்ச்சியாகவே இருக்கிறது. இது போன்ற ஆதாரங்களெல்லாம் நம்முடைய இயலாமையினைத்தான் காட்டுகிறது."
இயக்குனர் மிக்கி : "சாக்லேட் நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது?"
பிரான்க் ஹேகமன் : "பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. சில வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையான மாற்றம் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கோகோ தோட்டங்களில் இன்றையநிலவரப்படி எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டால், என்னால் சொல்லமுடியாத நிலைதான்"
சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய ஆவணப்படத்தை திரையிட்டுக்காட்டவும், அவர்களின் உண்மையான அக்கறை குறித்து சில கேள்விகளைக் கேட்கவும் அனுமதி கேட்டுப்பார்த்தார் இயக்குனர் மிக்கி. ஆனால் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் அவருடைய படத்தைப் பார்க்கவோ, அவரிடம் பேசவோ மறுத்தவிட்டன. ஆனால் திடீரென ஒரு நாள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை மட்டும் வெளியிட்டன. அதில், 
"பெரும்பாலான கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால் அங்கிருக்கும் எந்தவொரு மோசமான நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பாகமுடியாது"
என்றொரு வரி எழுதப்பட்டிருந்தது.
 
ஆதாரங்களை காண்பித்தவுடன், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தட்டிக்கழிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அக்குழந்தைகள் மீது அக்கறை இருக்கிறதா என்கிற சந்தேகம்தான் நம் அனைவருக்கும் எழும்.

ஒவ்வொரு சாக்லேட் நிறுவனங்களின் வாசலிலும் பெரிய திரையொன்றினை அமைத்து, தான் தயாரித்த ஆவணப்படத்தை திரையிடத்திட்டமிடுகிறார் இயக்குனர் மிக்கி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐவரி கோஸ்டில் அலுவலகம் அமைத்து சுரண்டலைச் செய்துவரும் நெஸ்லேயின் தலைமையகம் முன்பு திரையமைத்து தன்னுடைய ஆவணப்படத் திரையிடலைத் துவங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிகளை செய்திருக்கின்றன. 
 
ஆனால், நெஸ்லே என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டில்மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. 
 
அவர்களுடைய மேற்பாவையில்தான் அனைத்து கொத்தடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன. 
இலாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், ஐ.நா.வில் சட்டம் போடுவதும், குழந்தைதொழிலாளர் முறையினை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று வருடாவருடம் அறிக்கைகள் விடுவதும், உதவித்தொகை என்கிற பெயரில் மிகச்சிறிய தொகையினை வீசியெறிவதும், யாரை ஏமாற்றுவதற்காக?
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்காதீர்கள், சிரியாவிடம் சிரித்துப் பேசாதீர்கள், க்யூபாவை கண்டுகொள்ளாதீர்கள் என்று உலகிற்கே ஒரே நாளில் உத்தரவு போட்டு நிறைவேற்றுகிற ஐ.நா., அமெரிக்கா மற்றும் இன்ன பிற மேற்குலக நாடுகள் எல்லாம், இத்தனை ஆண்டுகளாகக் கொடூரமாக சுரண்டப்படும் ஆப்பிரிக்ககி குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன?  

 ஒருபுறம் மனிதநேயத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள்போல பேசிக்கொண்டே, மறுபுறம் மக்களைக் கொன்றாவது இலாபம் பார்க்கத்துடிக்கிற அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.
                                                              


நன்றி :-http://www.maattru.com/2012/07/ivory-coast-film.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.