Thursday, November 29, 2012

ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசிய கணக்கு: விசாரிக்க வருமான வரித்துறை முடிவு !




ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளது. ரகசியக் கணக்கில் பணம் வைத்திருந்து வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி அளவுக்கு ஜெனீவா வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கும் குறைவான தொகை வைத்துள்ளவர்கள் மீது அபராதம் விதிப்பதெனவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கியில் ரகசியக் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பிரான்ஸ் அரசு அளித்துள்ளது.

இதன்படி பட்டியலில் ரகசியக் கணக்கு வைத்துள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த ரகசியப் பட்டியலில் உள்ள சிலர் ஆயிரக்கணக்கான ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை இருப்பு வைத்துள்ளனர்.

இவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கொள்கை வகுக்குமாறு நிதி அமைச்சகத்தை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே ஸ்விஸ் வங்கியில் மாற்று பெயர்களில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்களை நிதி அமைச்சகம் மூலமாக வருமான வரித்துறை கேட்டு பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தனி நபர்கள் குறித்து விசாரணையை வருமான வரித்துறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசு மூலம் ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் 700 கணக்குகளின் விவரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ஏறக்குறைய 80 கணக்குகளில், வருமான வரி கணக்கில் காட்டப்படாத ரூ. 438 கோடி தொகையை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் ரூ. 135 கோடி தொகை வரியாப் பெறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக சமூக ஆர்வலர் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் அரசிடமிருந்து சில வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் பெறப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்                                                                                                                               

நன்றி :-தினமணி, 29-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.