Tuesday, November 20, 2012

நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் தெய்வநாயகம் மறைவு


பிரபல நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் செ.நெ.தெய்வநாயகம் (70) சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 19) காலமானார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் உடல் நலக் குறைவுடன் இருந்தார். மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 1981ம் ஆண்டு நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை ஏற்படுத்திய பெருமை டாக்டர் தெய்வநாயகத்துக்கு உண்டு. லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி., எஃப்.ஆர்.சி.பி. பட்டங்களைப் பெற்றவர்.

சித்த மருத்துவத்துக்கு ஆதரவு: அலோபதி மருத்துவராக இருந்தாலும்கூட, தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் பரப்பியவர் டாக்டர் தெய்வநாயகம்.

சித்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து "ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்' அமைப்பை ஏற்படுத்தி பொது மக்களுக்கு அலோபதி-சித்த மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.

இத்தகைய சிகிச்சை முறை காரணமாக ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகள் பலன் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சக நோய்த் துறையின் தலைவர், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்துள்ளார்.






மருத்துவப் பணியுடன் சேர்த்து டாக்டர் தெய்வநாயகம் கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியின் செயலாளராக இருந்தார்.

லாப நோக்கமின்றி 3 மேல்நிலைப் பள்ளிகள், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, குழந்தைகள் இல்லம் ஆகியவற்றைச் சென்னையிலும், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்திலும் நடத்தி வந்தார்.

இறுதிச் சடங்கு: மறைந்த டாக்டர் தெய்வநாயகத்துக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு தி.நகர் கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் புதன்கிழமை (நவம்பர் 21) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

அவரது உடல் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு தொ.பே. எண்: 24346233.

நன்றி ;- தினமணி, 20-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.