Tuesday, November 20, 2012

தராக்கி- ஒரு பத்திரிகையாளரின் பயணம் !


By ரவிக்குமார்

First Published : 04 May 2012 04:34 AM IST   புகைப்படங்கள் நன்றி :- தினமணி

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை, கோடம்பாக்கத்திலிருக்கும் எம்.எம். திரையரங்கில் "தராக்கி' என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. "தராக்கி' என்னும் புனைபெயரில் ஈழம் தொடர்பான போர்க் கட்டுரைகளை பத்திரிகைகளிலும் இணையத்தின் வழியாகவும் உலகறியச் செய்தவர் பத்திரிகையாளர் சிவராம்.

 கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று கடத்தி சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் உடல் 29-ம் தேதி இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் கண்டெடுக்கப்படுகிறது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் கழித்து சிவராம் குறித்த இந்த ஆவணப்படத்தை, சிவராமின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஏப்ரல் 29-ந் தேதி திரையிட்டிருக்கிறார், ஆவணப்படத்தின் இயக்குநர் சோமீதரன். இவர், ஏற்கனவே யாழ்ப்பாண நூலகம் எரிப்பு தொடர்பாகவும், முல்லைத் தீவு சாகா போன்ற ஆவணப்படங்களை எடுத்திருப்பவர்.

ஆவணப்படத்தில் சிவராம், பத்திரிகையாளர் நடேசனைச் சுட்டுக் கொலை செய்ததற்கு இலங்கை அரசைக் கண்டித்துப் பேசுகிறார். அந்தப் பேச்சிலேயே அவருடைய நாட்களும் எண்ணப்படுகின்றது என்னும் கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவு நடந்த சில மாதங்களிலேயே சிவராம் கொல்லப்படுகிறார்.

சிவராமின் மரணம் குறித்து தங்களின் கண்டனங்களை எழுப்பியிருக்கும் திசநாயகம், லசந்த விக்கிரம துங்க ஆகியோரும் அடுத்தடுத்து ஈழத்தில் கொல்லப்பட்டிருப்பதும், சண்தவராஜா, சுனந்த தேசப்ரிய, ஜெயானந்த மூர்த்தி ஆகியோர் இன்றைக்கு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பதும் இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

""திசநாயகத்துடனும், சிவராமுடனும் நான் "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்ட்' பத்திரிகையில் சில காலம் பணியாற்றியிருக்கிறேன். அவர்களுடனான அந்த நட்பும், ஈழத்தில் பத்திரிகை சுதந்திரமும், பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் அவலமும்தான் நான் இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்குக் காரணம்'' என்கிறார் சோமீதரன்.

""ஆவணப்படுத்துவதில் தமிழர்கள் எப்போதுமே பின்தங்கியவர்கள். ஈழத்தின் முக்கியமான நிகழ்வுகளை தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் சோமீதரனுக்கு முதலில் எங்களின் பராட்டுகள், நன்றி.

 இந்த ஆவணப்படத்தில் சிவராம் எதனால் கொல்லப்பட்டார் என்ற செய்தியையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். தொடக்கத்தில் ஆயுதப் போராளியாக இருந்து பின் ஒரு பத்திரிகையாளராக ஈழப் போர் செய்திகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதிவந்த சிவராம், ஒருகட்டத்தில் விடுதலைப் புலிகளை எதிர்த்தார்,

அவரின் கடைசிக்காலத்தில் ஆதரிக்கவும் செய்தார். அவரின் இந்த மாற்றங்களை அவரின் எழுத்துக்களின் வழியாக அறியலாம். அவருடைய எழுத்துக்களையும் கூட இந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கலாம்'' என்றார் "நிழல்' திருநாவுக்கரசு.

""யாருக்கு எப்போது வேண்டுமானாலும் துர்மரணம் நடக்கலாம் என்று இருக்கும் நாட்டில் எங்களுடைய தந்தையின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை

 துப்பாக்கி முனையில் நாம் நின்றிருந்தாலும் போராடித்தான் ஆகவேண்டும்' என்பார் எங்களின் தந்தை. அந்தத் தைரியம்தான் எங்களுக்கு இன்றைக்குத் துணையாக இருக்கிறது..'' என்று ஆவணப்படத்தில் பேசியிருக்கும் சிவராமின் மகள்களின் பேச்சு, பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.