கிருஷ்ண கான சபையின் காமகோடி அரங்கத்தில் நடைபெற்ற கணேச சர்மாவின் "தெய்வத்தின் குரலில் ஆதிசங்கரர்' ஆன்மீகச் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்:
""நம்முடைய கலாச்சாரத்தில் தரத்துக்குத்தான் முக்கிய இடம். குருவின் சித்தாந்தம் மட்டுமில்லாமல், அவருடைய ஒழுக்கசீலமும், மக்களைக் கவருவதற்கான முக்கிய அங்கம் வகிக்கிறது. குருவின் நடவடிக்கைகள், அவரின் ஒழுக்கம், பழகும் விதம் என பல நம்பிக்கைக்குரிய விஷயங்களை வைத்தே, மக்கள் கூட்டம் அவரிடம் வருகிறது. எதையும் தெளிவுபடுத்தவும், பக்குவப்படுத்தவும், குருவின் உதவி தேவைப்படுகிறது.
சாத்திரங்கள் மக்களை நெறிப்படுத்தி, நிலை தடுமாறாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே அமைந்துள்ளன. மனித குலத்தைச் சிதறவிடாமல் நல்வழிப்படுத்தவே ரிஷிகள் தோன்றினர். உலகமே வியக்கும்படியான நம் பாரம்பரியத்தில், பெண்களுக்கு மிகச் சிறப்பான இடம் அமைந்துள்ளது. எந்தப் பெண்ணின் கண்களிலிருந்து துயரக் கண்ணீர் வழிகிறதோ, அவர்களின் இல்லத்தில் அமைதி இராது எனச் சொல்கிறது சாத்திரங்கள்.
பாண்டவர்களின் பத்தினி திரெüபதி, போரில் தன்னுடைய பிள்ளைகள் மாண்டு, அஸ்வத்தாமாவைக் கொன்று பழிவாங்க வேண்டும் என்று மற்றெல்லோரும் துடித்தபோது, தான் புத்திர சோகத்தில் வருந்தினாலும், அஸ்வத்தாமாவுடன் பகை என்றபோதும், அவனைக் கொன்றால், அவன் தாய் துன்பப்படுவாள் என்று தடுத்தாள். தான் துயரப்பட்டபோதும், பகைவனுக்குத் துன்பம் தரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கம் கொன்டதாலேயே, கிராமங்களிலெல்லாம் திரெளபதிக்குக் கோயில் கட்டி தெய்வமாய் வழிபடுகிறார்கள். காந்தாரி, கணவனுக்குப் பார்வை இல்லாத போது, தனக்குக் கண்ணெதற்கு எனக் கண்களைக் கட்டி இருளில் அடைந்தாள். பாரதப் பெண்களின் உயர்வான குணங்களுக்கு இவர்களெல்லாம் முன்னோடிகள்.
கடமைகள் மூன்று வகைப்படும். முதலாவது, தினமும் செய்யப்படவேண்டிய கடமைகள். உடல் சுத்திக்கும், ஆத்ம சுத்திக்கும் வழிவகுக்கும் கடமைகள் இவை. இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஆற்றப்படும் கடமைகள். மூன்றாவது, ஒருபலனை உத்தேசித்து உருவாகும் கடமைகள்.
தனக்குப் பின்னும் ஆன்மிகப் பணிகள் தொடர வேண்டுமென, சிருங்கேரியில் சாரதா பீடத்தை நிறுவினார் ஆதிசங்கரர்.
ஒருமுறை ஆதிசங்கரர் கொல்லூருக்கு அருகிலுள்ள ஸ்ரீபலி என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அவரைக் காணவந்த ஒருவர், தன்னோடு, ஊமையாக இருந்த தன் சிறுமகனையும் அழைத்து வந்தார். சிறுவனை உற்றுப் பார்த்த சங்கரர், "நீ யாரப்பா?' என்று கேட்டார். எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக, அந்த ஊமைச் சிறுவன், ""எங்கேயும் பிறக்க, இறக்க முடியாததற்கு பெயர் உண்டா? நான் மனிதனும் இல்லை, தேவனும் இல்லை வெறும் ஆனந்தமயமாக இருக்கிறேன்..'' எனப் பொருள் கொண்ட ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பித்தான். அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் அனைவரும்.
அந்தச் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை, எல்லோரிடமும், குருவின் முன்னால் ஊமையான தன் மகன் உயர்ந்த பொருள் கொண்ட ஸ்லோகங்களை கூறியதைச் சொன்னார். ஆனால் வீட்டுக்கு வந்த சிறுவனோ பழையபடியே ஊமையாய் நின்றான். ஒன்றுமே புரியாத தந்தை மீண்டும் குருவிடம் அழைத்துவர, குருவின் சந்நிதியில் மீண்டும் தத்துவப் பொருளோடு ஸ்லோகங்களைச் சொன்னான். பிரம்ம ஞானம் பெற்ற அந்த சிறுவனை, குருவிடமே விட்டுவிட்டு வந்தார் தந்தை. சிறுவனுக்கு "ஹஸ்தாமலகர்' என்று பெயரிட்டு சீடனாய் ஏற்றுக் கொண்டார் ஆதிசங்கரர்.
"ஹஸ்தாம்லகம்' என்பதற்கு "உள்ளங்கை நெல்லிக்கனி' என்று பொருள். நெல்லிக்கனியின் முழு ரூபமும் உள்ளங்கையில் வைத்தால் தெரியும். மற்ற பொருட்கள் உள்ளங்கையில் வைத்தால் சிறிது மறையும். ஹஸ்தாமலகர் இயற்றிய ஸ்லோகங்கள் உபநிஷத்துகளின் சாரங்கள். உயர்ந்த உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதிய ஆதிசங்கரர், தன் சீடரான ஹஸ்தாமலகர் எழுதிய கிரந்தத்திற்கு விளக்கவுரை எழுதி, உலகில் சீடரின் நூலுக்கு உரையெழுதிய ஒரே குரு எனப் பெயர் பெற்றார். இதனால் சங்கரரின் எளிமையும் உயர்வும் உலகுக்குப் புரிந்தது.
மற்றொரு சீடர் ஆனந்தகிரி. கற்றலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாத அவர், குருவுக்குத் தேவையான பணிவிடைகள் அனைத்தையும் செய்வார். மற்ற சீடர்களெல்லாம் ஆனந்த கிரியை "மக்கு' என்றும் "முட்டாள்' என்றும் கேலி செய்வர். ஒருநாள் சீடர்கள் அமர்ந்திருக்க, ஆதிசங்கரர் பாடம் நடத்த ஆரம்பிக்காமல், ஆனந்தகிரி வரவில்லையேயென்று காத்திருந்தார். மற்ற சீடர்களெல்லாம், கிரி வந்து சாதிக்கப் போவதொன்றுமில்லை, அவனுக்காக எதற்கு காத்திருக்கிறார் குரு, என்று வேடிக்கையாகப் பேசிக் கொண்டனர்.
கிரியின் தன்னலமற்ற சேவையால் அவன் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த சங்கரர், மற்றவர்களின் கேலிப் பேச்சைக் கேட்டு வருந்தினார். அப்போது, அங்கு வந்து கொண்டிருந்த ஆனந்த கிரி, எதைப் பற்றியும் கவலையில்லாமல், சமஸ்கிருத மொழியில் மிகக் கடினமான "தோடகாஷ்டகம்' ஸ்லோகங்களைப் பாடியவாறே, குதித்து குதித்து ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அருகே வந்ததும் சங்கரர், ""கிரி, என்ன சொல்லிக் கொண்டு வந்தாய்?'' என்று கேட்டார்.
கிரி, ""ஏதோ எனக்கு வாயில் வந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டுவந்தேன்...'' என்றான்.
குரு கேட்டுக் கொண்டதற்கிணங்க, தோடகாஷ்டகம் முழுவதுமாக கிரி சொல்ல, அதன் உயர்ந்த கருத்துக்களும் சிறப்பான அமைப்பும் மற்ற சீடர்களுக்கும் புரிய, எல்லோரும் தங்களின் தவறை உணர்ந்து, கிரியின் காலில் விழுந்து பணிந்தனர். சங்கரர், கிரியின் ஞானத்தை மெச்சி "தோடகாச்சாரியார்' என்று பெயர் சூட்டினார். இன்றுவரை குருவைப் போற்றும் ஸ்லோகங்களில் முதல் இடம் தோடகாஷ்டகத்துக்கு மட்டுமே உண்டு.
தானத்தில் உயர்ந்தது அன்னதானம். மற்ற தானங்களைப் பெறுபவர்களுக்கு பூரணத் திருப்தி என்பதே அமையாது. ஆனால் பசியோடிருக்கும் எவருக்கும் உணவு படைத்தால், வயிறு நிரம்பியதும், அவரின் வாய் வாழ்த்த வில்லையென்றாலும், வயிறு வாழ்த்தும் என்பார் பெரியோர்.
எந்தத் துன்பம் வந்தாலும், சுகம் வந்தாலும் நிர்மலமான பக்தியுடன் இருத்தல் வேண்டும். பக்தியில் ஆதிசங்கரருக்கு ஈடு இணையேயில்லை. அத்தனை தெய்வங்களையும் ஸ்லோகங்களில் போற்றியிருக்கிறார் அவர். பாரத தேசத்தை முழுவதுமாய் மூன்று முறை யாத்திரை செய்து வலம் வந்துள்ளார் என "சங்கர விஜயம்' பதிவு செய்கிறது.
தன்னுடைய யாத்திரையில் திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, கொல்லூர் ஆகிய தலங்களின் ஆலயங்களில் எந்திரங்கள் பிரதிஷ்டை செய்துள்ளார் சங்கரர். அவரின் அத்வைத தத்துவம் சத்தியமானது என திருவிடைமருதூரில் ஈசனே கையைத் தூக்கிக் காட்டி உலகுக்கு உணர்த்தியுள்ளார். கைலாயத்தில் பரமேஸ்வரன் தன் கையால் கொடுத்த ஐந்து லிங்கங்களையும் வெவ்வேறு தலங்களில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
யாத்திரைகளின் முடிவில் சீடர்களின் விருப்பத்துக்காக "உபதேச பஞ்சகம்' என்ற ஐந்து ஸ்லோகங்களை அருளினார். தன் 32-வது வயதில் சித்தி அடைந்த ஆதிசங்கரர், உலகம் போற்றும் ஓர் அவதார புருஷர்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.