Monday, November 19, 2012

12 ஆண்டுகளுக்கு முன் பாதுகாத்து வைத்த கருமுட்டை மூலம் இரட்டைக் குழந்தை பெற்ற பெண் !


வெளிநாட்டுப் பெண்களில் பலர், இளம் பருவத்தில் மகப்பேற்றினைத் தவிர்த்து வருகின்றனர். வாலிபப் பருவத்தில் உழைத்துப் பணத்தைச் சேமிக்கவே அவர்கள் விரும்புகின்றனர். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த பின்னர், பிள்ளைகளைப் பெற்று, வளர்த்தால் போதும் என பல பெண்கள் தீர்மானிக்கின்றனர்.

ஆனால், வியாதியும், வயோதிகமும் சில பெண்களின் கற்பனைகளுக்குத் தடைக் கல்லாக அமைந்து வருகின்றது. அர்ஜெண்டினா நாட்டின் புனோஸ் எய்ரீஸ் நகரை சேர்ந்த ஒரு இளம் தம்பதியரும், இளமைப் பருவத்தில் பணம் சேர்க்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்தனர். மோனிகா-உசாக் என்ற அந்தத் தம்பதியர் வாழ்வின் பிற்பகுதி அவ்வளவு இனிமையாக அமையவில்லை. மோனிகாவிற்கு 40 வயது ஆனபோது புற்று நோய் அவரைத் தாக்கியது.

இதனால், தாயாகும் பாக்கியத்தை மோனிகா இழந்தார். ஒரு வாரிசு இல்லாமலேயே நாம் மறைந்து விடுவோமோ என்று கவலைப்பட்ட அவருக்கு, ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. மோனிகா, தனது 32வது வயதில் தன் கருமுட்டையை, சேமிப்பு வங்கியில் பிரீஸரில் சேமித்து வைத்திருந்தார். அதை வெளியே எடுத்து ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டால் என்ன? என்று தோன்றியது.

எனவே 12 ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாத்து வைத்த கருமுட்டையின் மூலம் தனது 44வது வயதில், ஒரே பிரசவத்தில் 2 குழந்தைகளை பெற்றெடுத்து, இரட்டை குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் மோனிகா.

7 ஆண்டுகளுக்கு முன்னர் உறைநிலையில் வைக்கப்பட்ட கருமுட்டையின் மூலம், கருத்தரித்து, பிரசவித்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. 12 ஆண்டுகளுக்கு முந்தைய கருமுட்டையின் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று, அந்த சாதனையை மோனிகா முறியடித்துள்ளார்.

நன்றி :- மாலை மலர், 19-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.