Monday, November 19, 2012

ஒரு நடிகை.... மனித வெடிகுண்டாக மாறிய கதை!



மாஸ்கோ: ரஷியாவில் பெண்கள் மனிதவெடிகுண்டாக மாறி மதவாதிகளைப் பலியெடுப்பது தொடர் கதையாகி வருகிறது.. அண்மையில் டெஜஸ்தான் (Dagestan) மாகாணத்தில் 7 பேரைப் பலிகொண்ட மனித வெடிகுண்டுப் பெண்ணின் கதை சற்றே வித்தியாசமானது.....

அமினத் குர்பனோவா... ரஷியாவின் டெஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் கிறிஸ்துவர்... நாடகக் கல்லூரியில் படித்த போது மராத் என்பவருடன் காதல் மலருகிறது... 2003-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு மாலிகா என்ற பெண் குழந்தை பிறக்கிறது.

2006-ம் ஆண்டில் அமினத்தின் கணவன் மராத்தின் சகோதரர் ருஷ்டம், இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறார். இவரைத் தொடர்ந்து அமினத்தும் மதம் மாறுகிறார்.

இந்நிலையில் டெஜஸ்தான் மாகாணத்தில் இஸ்லாமின் சூஃபி மற்றும் சஃலாபி பிரிவினர் இடையேயான மோதல் உக்கிரமடைகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக சொல்லப்படுகிற சஃலாபி பிரிவின் போராளிக் குழுவில் அமினத்தின் கணவரின் சகோதர் உறுப்பினராக இருந்தார். அவர் 2008-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து அமினத்தின் கணவர் மராத், வீட்டைவிட்டு வெளியேறி போராளிக் குழுவில் இணைகிறார். ஓராண்டுக்குப் பிறகு மராத்தும் போலீசாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந் நிலையில் கணவர் மராத்தின் மற்றொரு சகோதரரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

இந் நிலையில் இந்தக் கொலைகளுக்குப் பழி வாங்க எண்ணி, தீவிரவாத பயிற்சியை எடுக்கிறார் அமினத் குர்பனோவா.

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி... டெஜஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் சையத் அஃபான்டி என்ற 74 வயது சூஃபி மத குருவின் வீட்டுக்கு சென்றார்.. அங்கு செல்வதற்கு முன்பு தனது அருமை மகளை ஆரத்தழுவி முத்தமிட்டுவிட்டுச் செல்கிறார்...

உள்ளே சென்ற அமினாத் தாம் கட்டியிருந்த வெடிகுண்டை அழுத்தி வெடித்துச் சிதற அந்த மத குரு, ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துவிட்டனர். சையத் அஃபாண்டியின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அவரது இறுதி ஊர்வலகத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு நடிகையாக ஆசைபட்டு, உறவுகளால் ஈர்க்கப்பட்டு, கடைசியாக மனித வெடிகுண்டாகச் சிதறிப் போன அமினத்தின் காதுகளுக்கு மகள் மாலிகாவின், ஏக்கமான அழுகுரல் கேட்கவா போகிறது?                                                                         

நன்றி :-ஒன் இந்தியா, 19-11-2012                                                               





0 comments:

Post a Comment

Kindly post a comment.