Wednesday, November 14, 2012

தமிழாசிரியர் உ.வே.சாமிநாதையர், தமிழ்த் தாத்தா ஆன வரலாறு !


கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சாமிநாத ஐயர் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். அதுசமயம் அரியலூரிலிருந்து சேலம் இராமசாமி முதலியார், கும்பகோணத்திற்கு முன்சீப்பாக உத்தியோக மாற்றம் பெற்று வந்தார். இவர்தான் தமிழாசிரியராக இருந்த  உ.வே.சாமிநாதய்யரைத் தமிழ்த் தாத்தாவாக மாற்றியவர்.

சேலம் இராமசாமி முதலியாருக்கு தமிழ், சங்கீதம் மற்றும் வடமொழியில் நன்கு பழக்கமிருந்ததால், இளமையிலேயே பேரறிவு பெற்று விளங்கினார். இந்தச் சந்திப்பை உருவாக்கித் தந்தவர், உ.வே.சா. பெரிதும் மதித்துவந்த திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர்தான்.

ஒருமுறை சேலம் இராமசாமி முதலியார் வீட்டுக்கு உ.வே.சா. சென்றார். தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரும் அவர் பாராமுகமாக இருந்தார்.

”நீங்கள் யாரிடம் பாடம் கற்றீர்கள் ?” என அவர் கேட்க, ‘மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் பயின்றேன்” என்றார் உ.வே.சா.

“நீங்கள் என்ன பாடம் கற்றிருக்கின்றீர்கள் ?” என்று மீண்டும் கேட்க, உ.வே.சா. தாம் இதுவரை படித்த அனைத்துப் பாடங்களையுமே ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார். இருப்பினும் முதலியார் முகத்தில் கடுகளவு வியப்பு கூடத் தோன்றவில்லை. மாறாக, அவரிடமிருந்து ஒரு கணை புறப்பட்டது.

’இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம் ?’ என்ற அந்த கேள்விக்கணை உ.வே.சாவை நிலைகுலைய வைத்தது.இருப்பினும் மனம் தளராமல், தாம் கற்றதாகச் சொன்ன பாட வரிசைகளில் விடுபற்றவற்றைத் தொடர்ந்து சொல்லி முடித்தார்.                                                                                                                            
'சரி அவ்வளவுதானே ?’ என்றார் முதலியார். உ.வே.சா.வுக்கோ மிகுந்த மன வருத்தம். ‘ கம்ப ராமாயணத்தில் கூடவா இவ்வளவு பாராமுகம், இவ்வளவு அசட்டை !’ என்று நினைத்தார்.

’பிற்காலத்துப் புத்தகங்களை எல்லாம் படித்தது இருக்கட்டும்.பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா ?’

உ.வே.சா. சற்று ஆச்சரியத்துடன், ‘நான் கூறியவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே’ என்றார்.

இவற்றுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?’ அவர் கேட்டபோதுதான் உ.வே.சா.வுக்கு, இவரிடம் விஷயம் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியது. ‘தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்களென்று தெரியவில்லையே’ என்றார்.

‘சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா ?, மணிமேகலை படித்திருக்கிறீர்களா?, சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா ?’

உ.வே.சா.வுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில், இராமசாமி முதலியார் சொன்ன நூல்களை அவர் படித்திருக்கவில்லை. கிடைத்தால் அவற்றையும் படிக்கும் ஆர்வமுண்டு’ என கம்பீரமாகச் சொன்னார்.

‘நான் புத்தகம் தருகிறேன்; தந்தால் அவற்றைப் படித்து அதிலிருந்து எனக்கும் பாடம் சொல்வீர்களா?’ என்று கேட்க, இவர் ஒப்புக்கொண்டார்.

அடுத்த சந்திப்பில் உ.வே.சா.வை அன்போடு வரவேற்று, சீவக சிந்தாமணி சுவடிப் பிரதியைக் கொடுத்து, ‘இது மிகச் சிறந்த புத்தகம். கம்பராமாயணத்தின் சிறப்பிற்கு இந்தக் காவியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் புரிந்து கொண்டு எனக்குப் பாடம் சொல்வீர்களானால், எனக்கு இன்பம் உண்டாகும்’ என்று கூற, உ.வே.சாவும், ‘அப்படியே செய்யலாம்’ என்று சொல்லி அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார்..

முதலில் சீவக சிந்தாமணி சுவடிப் பிரதியைப் படித்து, இராமசாமி முதலியாருக்கும் பாடம் சொல்லத் தொடங்கினார். தமக்கு விளங்காத விஷயங்ளை விளங்கவில்லை என்றே முதலியாரிடம் உ.வே.சா. சொன்னதால், முதலியார் மிகவும் மகிழ்ந்தார்.

சீவக சிந்தாமணி ஒரு ஜைன நூல். எனவே, அதிலுள்ள ஜைன சம்பிரதாயங்களை கும்பகோணத்திலிருந்த ஜைனர்களிடமே சென்று உ.வே.சா. கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் சீவக சிந்தாமணியைப் படிக்க ஆரம்பித்தார். முன்னர் படித்தபோது விளங்காத பல செய்திகள் இப்போது நன்றாக விளங்கின. பல ஏட்டுப் பிரதிகளையும் பார்த்துத் திருத்திக் கொண்டார். இவ்விதம் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கையிலேயே இதைப் பதிப்பித்து வெளியிட ஏண்டும் என்ற எண்னமும் அவருக்குத் தோன்றியது.

சிந்தாமணி நூல் வெளிவரப் பலரும் உதவினார்கள். சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரியார், ‘பிழை திருத்தி உதவ, தானும் ‘பிழை’ பார்த்து சிந்தாமணிப் பதிப்பை முதலில் 500 பிரதிகளாக வெளியிட்டார். உ.வே.சா. சீவக சிந்தாமணி பதிப்பு வெளியான பிறகு, தமிழ் நாட்டில் ஒரு மறுமலர்ச்சியே உருவானது.                                                                                                              

நன்றி :- அமுதசுரபி தீபவளி மலர், 2012.

கட்டுரை ஆக்கம்:- சைதை முரளி.

0 comments:

Post a Comment

Kindly post a comment.