Monday, November 12, 2012

முருகன் பற்றி அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி!

vinoth j s vinothjs329@gmail.com
13:30 (4 hours ago)

to வல்லமை, [தமிழ், mintamil
 
1966, டிச.21ல் சுதேசமித்திரனில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த இதழில், குளோதி என்ற அமெரிக்க இளைஞர் முருகனைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  
 
அந்த செய்தியின் சாராம்சம் இது தான். ""அமெரிக்கப் பாதிரியாரின் மகனாக இந்தியாவில் 1936ல் பிறந்தவர் குளோதி. கொடைக்கானலில் படித்தவர். முருகன் வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகத் தமிழகத்தில் ஒரு ஆண்டு தங்கியிருப்பார்... அமெரிக்காவில் உள்ள இந்திய ஆராய்ச்சிக்கூட்டத்தைச் சேர்ந்த அறிஞர் குளோதி. இவர் தென்னிந்திய சமயவரலாறு பற்றிய ஆராய்ச்சிகளை முடித்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்திற்குரிய தேர்வு எழுத இருக்கிறார். 
 
இவருக்குத் தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் உண்டு. சிகாகோ பல்கலைக்கழக திராவிடவியல் வல்லுநர் டாக்டர் சுமில்சுவலபில், சமய ஆராய்ச்சி வல்லுநர் டாக்டர் எலியாடி, தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர் ஏ.கே.ராமானுஜம் ஆகியோர் குளோதியிடம் தமிழ்ப் பாரம்பரியத்தை ஆய்வு செய்ய ஊக்கப்படுத்தினர்.
 
 குளோதி இது பற்றிக் கூறும்போது,"" வரலாற்றின் உண்மைச் செய்திகளை எழுதி வைக்க வேண்டும் என்று நான் முருகவழிபாடு பற்றிய மரபுகளை ஆராயவில்லை. மனிதனுடைய சமயங்களில் காணப்படும் பல்வேறு கோட்பாடுகளில் சின்னங்களுக்குப் புதுவிளக்கம் கொடுப்பதில் மனித குலத்திற்குத் துணையாக இருப்பதே எனது நோக்கமாகும். 
 
இந்து, கிறிஸ்தவ மதங்கள் இரண்டிலுமே மறைபொருளான சின்னங்கள் உள்ளன. உதாரணமாக கிறிஸ்தவர்களுக்கு ஆட்டுக்குட்டி, சிலுவை, புல்லுருவிச் செடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதுபோல, முருகனின் வாகனங்களாக ஆடு, மயில், யானை ஆகியவை கூறப்பட்டுள்ளன, என்று குறிப்பிடுகிறார். 

வேலவனின் வெற்றிநகர்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன் தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது பொருந்தும்.
 
 தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்துத் தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாகத் தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் என்பதற்கு "புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள். 

செந்தூரில் தீர்த்தமாடும்முறை: திருச்செந்தூர் என்ற சொல்லைக் காதால் கேட்டாலே முக்தி தரும். தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றும் அமையப்பெற்றது. எந்தச் செயலையும் முறையாகச் செய்தால் தான் அதன் பலனை அடைய முடியும். திருச்செந்தூரைப் பொறுத்த வரை தீர்த்தமாடும் முறையில் மிகக் கண்டிப்பான முறையைப் பின்பற்ற வேண்டும்.
 
பொதுவாகப் பக்தர்கள் கடலில் நீராடிய பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த உப்புநீரைக் கழுவ வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில்- கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய வேலுக்கு தோஷம் நீங்கும் பொருட்டு அதனைப் பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது. முருகப்பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது போன்ற தீர்த்தம் கிடையாது. கடலில் நீராடிய பின் நாழிக்கிணற்றில் குளித்தால், செந்தூர் வந்த புண்ணியபலனை அடைய முடியாது. 

அருள்புரிவாய் கருணைக்கடலே: கந்தசஷ்டி நன்னாளில் முருகனருளால் எல்லா நலமும் வளமும் பெருக இந்த அருளுரையை வாசியுங்கள்.

* ஆனைமுகக் கணபதியின் அன்புத் தம்பியே! ஞானப்பண்டிதனே! ஆறுமுகப்பெருமானே! மயில்வாகனனே! சிக்கல் சிங்கார வேலவனே! திருப்பரங்குன்றத்தில் உறையும் பரம்பொருளே! வள்ளிக்கு வாய்த்தவனே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரனே! செந்தூரில் வீற்றிருக்கும் வெற்றி வேலனே! எப்போதும் என் உள்ளத்தாமரையில் வீற்றிருந்து அருள்புரிய வேண்டும். 

* ஆறுபடை வீடுகளில் ஆட்சி நடத்துபவனே! ஆதிசிவனின் அருமைப்பிள்ளையே! சரவணப்பொய்கையில் அவதரித்தவனே! காங்கேயனே! திருமாலின் மருமகனே! வேதமந்திரங்களின் உட்பொருளாகத் திகழ்பவனே! தெய்வானை மணவாளனே! தண்டாயுதபாணியே! சோலைமலை சுந்தரனே! குழந்தைக் கடவுளே! குன்றுதோறும் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! உனது அருளால் எங்கள் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

* பிறவிக்கடலைக் கடக்க வைக்கும் தோணியே! மலையேறி வருபவர்களை அவர்களது வாழ்விலும் உயரச் செய்பவனே! அசுரனுக்கும் பெருவாழ்வு தந்த இரக்க குணமுள்ள ஈசனே! தவஞானியர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் உத்தமனே! வேடராஜன் நம்பியின் மகளான வள்ளியின் அன்பனே! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளலே! திருத்தணி வாழ் பெருமானே! உன்னை எப்போதும் சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
 
 
* தந்தைக்கு பாடம் சொன்ன சுப்பையனே! சந்திரனைப் போல குளிர்ச்சி மிக்க ஆறுமுகங்களைக் கொண்டவனே! சரவணனே! சண்முகனே! வெற்றிவேலாயுதனே! சிவகுமாரனே! தேவசேனாபதியே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! தாரகாசுரனை வதம் செய்தவனே! பிள்ளைக் கனியமுதே! அருள்புரியும் கருணைக்கடலே! பழநிமலை பாலகனே! உன் திருவடிகளைச் சரணடைந்து விட்டேன். நீயே என்னை பிறவிக்கடலில் இருந்து மீட்டு உன் திருவடியில் சேர்க்க வேண்டும்.

* வீரம், அன்பு, அருள், ஞானம், இன்பம், கருணை ஆகிய ஆறுகுணங்களின் இருப்பிடமே! வைதாரையும் வாழவைக்கும் தெய்வமே! கேட்டதை அருளும் கற்பகத் தருவே! கற்றவர் போற்றும் கனியே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! திருப்புகழ் போற்றும் திருமுருகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! சுவாமிமலை குருநாதனே! குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெறச் செய்வாயாக. 
 

* சிவபார்வதி மைந்தனே! பரங்குன்றத்து பவித்ரமே ! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபத்மனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வள்ளிமணாளனே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வாழ்வில் குறுக்கிடும் தடைகளைப் போக்கி வெற்றியைத் தந்தருள்வாயாக. 

*பார்போற்றும் தெய்வமே! நவவீரர்கள் போற்றும் நாயகனே! புண்ணிய மூர்த்தியே! குருவாய் வந்தருளும் குகப்பெருமானே! எட்டுக்குடி வேலவனே! விராலிமலைவாழ் விமலனே! குமரகுருபரர் பாடிய திருச்செந்தூர் கந்தா! உன் திருவடியில் அடைக்கலம் கொடு.
 
 
* பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! முத்தமிழ் வித்தகனே! தும்பிக்கையான் தம்பியே! அருணகிரியை ஆட்கொண்டவனே! குமரகுருவே! வயலூரில் வாழ்பவனே! கந்தகோட்டத்தில் உறைந்திருக்கும் கந்தசுவாமியே! குமரக்கோட்டத்துக் குருபரனே! உன்னருளால் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகட்டும். 

* தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கொண்டவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறு தலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தவனே! கலியுகவரதனே! முத்துக்குமார சுவாமியே! கண்கண்ட தெய்வமே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி செய்யும் செந்திலாண்டவனே! எல்லோரும் இன்புற்றிருக்க உன் அருள்மழையை எப்போதும் பொழிவாயாக.
 
நன்றி,

0 comments:

Post a Comment

Kindly post a comment.