Monday, November 12, 2012

தினமணி தலையங்கத்திற்கு மறுப்பெழுதிய, பாடம் ஆசிரியர் அ,நாராயணனுக்கு ஓர் கேள்வி ! காந்தியவாதி, அம்பெத்காரிஸ்ட், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று எல்லாமுமாக ஒரு மனிதர் இருக்க முடியுமா ?

From: Paadam Pm <paadam.pm@gmail.com>
Date: 2012/11/12
Subject: தருமபுரி சாதி வன்முறைக்கு பலியானவர்கள் மீதே குற்றப்பத்திரிக்கை எழுதுவது அறமா?
To: Dinamani <dinamanimds@dinamani.com>


ஆசிரியர் 
தினமணி,சென்னை.

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, 

வன்முறைக்குப் பலியானவர்கள் மீதே குற்றப்பத்திரிக்கை எழுதுவது அறமா?

தருமபுரி சாதிக் கலவரம் பற்றித் தலையங்கம் எழுதிய தினமணி ஆசிரியர், சாதிக்கலவரம் நடக்காமல் இருப்பதற்கு, காந்தியம் மட்டுமே தீர்வு என்று மிக மிக மொக்கையாகத் தீர்ப்புச் சொல்லியிருப்பது விசித்திரமாக உள்ளது. 
 
 அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியினரை, தலித்துகள் என்றோ தாழ்த்தப்பட்ட சாதியினர்' என்றோ ஒரு தீவிர எழுத்தாளர் போன்று குறிப்பிடாமல், அரசுக்கோப்பில் குறிப்பெழுதும் அலுவலர் போன்று 'பட்டியல் சாதியினர்' என்று  ஒரு சமூக அரசியல் தலையங்கம் எழுதுபவர் குறிப்பிடுவது வேதனையளிக்கிறது.  

அது மட்டுமல்ல, தலையங்கக் கட்டுரையில், தலித்துகளுக்குப் பரிந்து எழுதுவது போன்ற தொனியில்  எழுதினாலும், இந்த சாதி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதிற்கு, தலித்து இளைஞர்கள் திட்டமிட்டுப் பிற சாதிப்பெண்களை காதலிப்பதும், சீண்டுவதும், வன்கொடுமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும்தான் காரணம் என்பது ஏனைய சாதியினரின் குற்றச்சாட்டு என்று எழுதியிருப்பது வெந்த புண்ணில் உப்பைத் தடவுவது போல் இருக்கிறது. 
 
இது நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்று பாரதியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு எழுதும் பத்திரிகை ஆசிரியரா, அல்லது, காடு வெட்டி குரு போன்ற சாதிவெறி கொண்டவர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு எழுதுவதா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

பிற்படுத்தப்பட்டு, விவசாயக் கூலிகளாக இருந்த வன்னியர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு பெற்றுத்தர வன்னியர் சங்கம் எனும் சாதி அமைப்பை மிகுந்த வன்முறைக் கலவரங்களுக்கு இடையில் தோற்றுவித்து, அதனை வெற்றிகரமாகப் பாட்டாளிகளுக்கான  அரசியல் கட்சியாக மாற்றினார் மருத்துவர் ராமதாஸ். 
 
அதே சமயத்தில் வன்னியருக்கான சமூக நீதி என்பதாக இல்லாமல் வன்னியசாதி வெறி எனும் ஒரு வழிப் பாதைக்குள் அந்த சாதியினரில் ஒரு சாராரை, காடுவெட்டி குரு போன்றோரின் துணையுடன் மருத்துவர் ராமதாஸ் அழைத்துக்கொண்டு வந்ததுதான் காரணம் என்பதை எழுதுவது ஆசிரியருக்கு வசதிப்படவில்லையோ? 

வன்னிய இனப் பெண்களைக் கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா, வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்றேன் என்று, மாநாட்டில் திரண்ட ஆயிரக்கணக்கான வன்னியர் இளைஞர்களிடம், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் முன்பாகவே, மாமல்லபுரத்தில் உச்சகட்ட சாதிவெறியைக் காடுவெட்டி குரு எனும் வன்னிய சங்கத்தலைவர் தூண்டியதைத் தலையங்கத்தில் குறிப்பிட மறுத்தது தற்செயலானதா?  

மற்ற எல்லா சமூகப் பிரச்சனைகளிலும் மிகத்தெளிவான, மிக முற்போக்கான, உண்மையாகவே சமுதாய அக்கறை மிகுந்த  கருத்துக்களை வைக்கும் பாமக தலைவர்  ராமதாஸ், தனது அரசியல் முன்னேற்றத்திற்குப் பின்னடைவு வரும்போதெல்லாம், வன்னியர் சங்கம், வன்னியர் நலம் எனும் போர்வையில் சாதிவெறியூட்டும் மட்டமான பஸ்மாயுதத்தைக் கையில் எடுப்பதுதான், தர்மபுரியில் நடந்த ஆதிக்க சாதி வன்முறை வெறியாட்டத்திற்கு காரணம் என்று கூறும் துணிவு, தினமணி ஆசிரியருக்கு இல்லையென்றால், குறைந்தது சாதிவெறி தொடர்பான தலையங்கக் கட்டுரை எழுதுவதையாவது தவிர்த்துவிடுவதுதான் நலம்.   

நம் சாதிப் பெண்களை, குறிப்பாக, கல்லூரி மாணவிகளை மாற்றுச் சாதியினர் கலப்புத் திருமணம் செய்வதைத்தடுப்போம் என்று பாசிச ஹிட்லரைப்போன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு, நம் சாதிப்பெண்களைப் பள்ளிப்படிப்போடு முடித்துக்கொண்டு, கல்லூரிகளுக்கு அனுப்புவதைத் தடைசெய்யவேண்டியிருக்கும் என்றும் வெளிப்படையாகப்பேசி, நாளிதழ்களில் விளம்பரம் செய்யும் அளவிற்குத் தமிழகத்தலிபன்களாக மாறிய கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவையினர் பற்றியோ, நாடார், பிள்ளைமார், தேவர், செட்டியார், பிராமணர் போன்று தமிழகம் முழுவதும் சுயசாதிச் சங்கங்களின் உச்சகட்ட பிற்போக்குத்தனங்கள் பற்றியோ, முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தொடங்கி எல்லா சாதி அமைப்புகளின் விழாக்களில் சிறிதும் கூச்சமில்லாமல் வாக்குவங்கிக்காகக் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் கேவலமான நடவடிக்கைகள் பற்றியோ, கம்யூனிஸ்ட்கள் உட்பட தமிழத்தின் எல்லாக்கட்சிகளும் அப்பட்டமான சாதியமைப்புகளுடன் தேர்தல் உடன்படிக்கை செய்து கொள்வது பற்றியோ, தாமிரபரணியில் மாஞ்சோலைத்தொழிலாளர்கள் மூழ்கடிப்பு, வாச்சாத்தி வெறியாட்டம், பரமகுடி துப்பாக்கிச் சூடு என்று தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான மிக மோசமான ஏகப்பட்ட வன்முறைச்செயல்களுக்கும், அரசு இயந்திரமே, அரசுக்குத் தலைமைவகிப்பவர்களே துணை நிற்கும் நிலைதான் தருமபுரியில் தலித்துகள் மீதான வெறித்தாக்குதல்களுக்கு உந்துதலாக இருக்கிறது என்பது பற்றியோ பேசுவதற்கு, தினமணி தலையங்கத்தில் இடமில்லாது இருக்கலாம். 

ஆனால், இது கூலிவேலை செய்து பிழைக்கும் தாழ்த்தப்பட்ட தலித்துக் காலனிகள் மீது, அதே போன்று கூலிவேலை செய்து பிழைக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், தங்கள் தலைவர்களால் சாதிவெறியூட்டப்பட்ட நிலையில் நடத்திய வன்முறை வெறியாட்டம் என்று அறத்துடன் கூறாமல், இது ஏதோ இருசாதிக் கலவரம் என்று எழுதியதையும், நாடு முழுவதும் இப்பொழுதும்கூட ஒவ்வொரு நொடியும் சாதியச் சுரண்டலுக்கும், வன்முறைக்கும் ஆளாகும் தலித்துகள், அண்ணல்  காந்திக்கு நன்றிக்கடன் செலுத்தாமல், அவரைப்பழிக்கிறார்கள் என்று எழுதியதையும், இன்று காந்தி இருந்திருந்தால் வன்மையாகக் கண்டித்திருப்பார் என்பதுதான் உண்மை. 
 
நானும் ஒரு காந்தியவாதி, அம்பெத்காரிஸ்ட், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட்  என்று நம்புகிறபடியால் இவ்வினையைப் பதிவுசெய்கிறேன். 
 
அ,நாராயணன் (9840393581) 
சமூக ஆர்வலர்
பாடம் இதழ் ஆசிரியர்
-- 
To read all the issues of paadam, Pl visit our web www.paadam.in &
 blog  www.paadam-pm.blogspot.com and leave your comments.
 
Regards
A.Narayanan (98403 93581)
Editor
Paadam, Monthly Magazine in Tamil for Development Politics
2/628, Rapid Nagar,
Gerugambakkam
Chennai - 602 101.
\
பாடம் ஆசிரியர்  நண்பர்,நாராயணனுக்கு ஓர் கேள்வி !                                      

காந்தியவாதி, அம்பெத்காரிஸ்ட், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று எல்லாமுமாக ஒரு மனிதர் இருக்க முடியுமா ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.