Monday, November 5, 2012

மதுரை ,முனைவர் மா.தச. பூர்ணாச்சாரி, ஆலோசனைகளக் கேட்டால்தான் சில்லறை வணிகர்கள் தாக்குப்பிடிக்க முடியும் !

அன்னிய முதலீடும் ஆடும் தராசுகளும்-தினமணி-கருத்துக்களம்-05-11-2012



பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி கூடி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை  அனுமதிப்பதென்ற முடிவை எடுத்து அரசாணையும் வெளியிட்டது. ஒற்றை இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதமும் பல் இலச்சினை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

1996இல் சீனாவில் 19,20,604 பாரம்பரிய பல சரக்குக் கடைகளும் 13,079 சூப்பர் மார்க்கெட் கடைகளும் இருந்தன. 2001இல் அவை 25,65,028 பலசரக்கு கடைகளாகவும் 1,52,194 சூப்பர் மார்க்கெட்டுகளாகவும் 18,091 பல்நோக்கு வணிக வளாகமாகவும் 593 ஹைப்பர் மார்க்கெட்டுகளாகவும் (குண்டூசி முதல் விமானம்வரை விற்கும் ஒரே கடை) அதிகரித்துவிட்டன.

நம் நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் (2000-01 முதல் 2010-11 நிதியாண்டுகளில்) அன்னிய நேரடி முதலீடு 10,733 கோடிகளில் தொடங்கி 88,250 கோடிகளாக உயர்ந்திருக்கிறது. ஜனவரி 2000 முதல் ஜனவரி 2012 வரையில் ரூ.7,23,367 கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மோரிஷஸ் மூலம் 5016.4 கோடி (42%) பெறப்பட்டுள்ளது.

அன்னிய முதலீட்டால் கம்பெனிகள் நேரடியாக விவசாயிகளை அணுகிப் பொருள்களின் சுவை, தரம், அளவு, தனித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சரக்குகளைக் கொள்முதல்செய்யவும் அதற்காக நீண்ட கால, குறுகிய கால ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதற்காகப் படித்த இளைஞர்களைக் கம்பெனிகள் நியமிக்கும்.

இந்தியாவில் சராசரியாக ஆயிரம் பேருக்கு 11 சிறு கடைகள்தான் உள்ளன. இவற்றில் கடன் வியாபாரம் அதிகம் கிடையாது. அனைத்துமே ரொக்கம்தான். எனவே விற்க விற்க உடனடி லாபம்தான். 4 கோடிப்பேர் சில்லறைக் கடைகளில் வேலை செய்கிறார்கள் அல்லது உரிமையாளர்களாக உள்ளனர். 140 லட்சம் சிறு கடைகள் உள்ளன. அனைத்தும் 40 சதுர அடி முதல் 100 சதுர அடி பரப்பில் உள்ளவை. 4 சதவீதக் கடைகள் மட்டுமே 500 சதுர அடி பரப்பில் உள்ளன.

சில்லறை விற்பனைக் கடையின் மொத்த மதிப்பு ரூ.5,000 முதல் ரூ.20 லட்சம் வரை. பெரும்பாலும் வரிகளைச் செலுத்துவதில்லை. அரசு வரையறைகள் இல்லை. தரக்கட்டுப்பாடு ஏதும் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடையாது. பொருள்களை வாடிக்கையாளர்கள் கடைக்குள் சென்று பார்க்க முடியாது. கடைக்காரர் தருவதைத்தான் பார்க்க முடியும், வாங்க முடியும்.

வாடிக்கையாளர் கேட்கும் பொருள் தங்களிடம் இல்லாவிட்டால் மாற்றுப் பொருளை வியாபாரிகள் தருவார்கள். தங்களுக்கு அதிக லாபம் இல்லாதவற்றை விற்க மாட்டார்கள்.

முறையான பேக்கிங்குகள் கிடையாது. பல பொருள்களை பழைய செய்தித்தாள் காகிதத்தில் கையால் மடித்துக் கட்டித் தருவார்கள். பாதுகாப்பு வசதி, குளிர்பதன வசதி கிடையாது. கடைக்குள் பாச்சை, பல்லி, பெருச்சாளி நடமாட்டம் இருக்கும். தினசரி 4% பொருள்களைக் கெட்டுப் போய்க் குப்பையில் கொட்டுகிறார்கள். எடை அளவு, தரம் ஆகியவற்றில் வாடிக்கையாளருக்குச் சந்தேகம் வந்தாலும் ஏதும் கேட்க முடியாது.

கடைகள் சுகாதாரமாக இருப்பதில்லை. விற்பனைக்குப் பிந்தைய சேவை என்று எதுவும் கிடையாது. விற்ற பொருளைத் திரும்பப் பெறும் பழக்கமும் கிடையாது.

இந்தக் குறைகளைத்தான் குறிவைத்து வெளிநாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்தியாவில் விற்க முன்வந்துள்ளன.

அன்னிய நிறுவனங்களை எதிர்கொள்ள இந்தியச் சில்லறை, மொத்த வியாபாரிகள் தங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களைக் கவரும் உத்திகளை அடையாளம் காண வேண்டும். தரம், எடை, விலை ஆகியவற்றில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் விரும்பும் சரக்குகளை விரும்பும் வகைகளில் தருவதற்கு வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

விவசாயிகளிடமிருந்து பொருள்களை நேரடியாகக் கொள்முதல்செய்ய வேண்டும். இடைத் தரகர்களைப் படிப்படியாக வெளியேற்ற வேண்டும். விளைபொருள்களைத்  தங்கள் பகுதிக்குக் கொண்டுவரவும் பாதுகாத்து வைக்கவும் போக்குவரத்து, கிடங்கு வசதிகளில் முதலீடு செய்ய வேண்டும். குளிர்பதனக் கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உணவு தானியங்களை வாங்கி மதிப்புகூட்டு முறையில் அவற்றின் தன்மையை மாற்ற வேண்டும். விநியோக முறையைச் சிக்கனமாகவும் விரிவாகவும் மேற்கொள்ள வேண்டும். கூட்டாகச் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்த வேண்டும். உள்நாட்டில் விளையும் பொருள்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். வியாபாரத்தில் நுகர்வோர்தான் முக்கியமானவர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.                                                                        

சர்வதேசச் சந்தை என்று வந்துவிட்டபின் அஞ்சிப் பயனில்லை. அன்னிய முதலீட்டார்களுக்கு ஈடாகத் தரமுள்ள ,சுத்தமான, வாடிக்கையாளர் விரும்புகின்ற பொருட்களை விற்பதற்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.                                                      

நன்றி :- தினமணி, 05-11-2012





0 comments:

Post a Comment

Kindly post a comment.