Monday, November 5, 2012

மனைவியால் மனம் மாறிய மரண வியாபாரி நோபல் எழுதிய , சொத்தில் 94 % விகிதமே நோபல் பரிசுக்கான களஞ்சியம் !


ஆல்பிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் ஸ்வீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொறியாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.

இவர் 1894இல் இரும்பு எஃகு ஆலை ஒன்றை வாங்கி அதைப் போர்க்கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தினார். பாலிசைட், கார்டைட் என்ற புகையற்ற வெடிபொருள்களைக் கண்டுபிடித்தார். இதில் கார்டைட் குறிப்பிடத்தக்கது. இதற்காகக் காப்புரிமையும் பெற்றார். இப்படி மொத்தம் 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி  பெரும் கோடீஸ்வரரானார்.

 இவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "டைனமைட்' என்ற வெடிமருந்துதான். ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பாறைகளை  உடைக்க, பழைய கட்டடங்களை இடிக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல இதையே வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள்.

 நோபலின் கண்டுபிடிப்பால் அவருக்கு ஏராளமாகப் பணம் கிடைத்தாலும் அப்பாவி மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகின்றனவே என்று அவருடைய மனைவி பிரித்தான்ஸ்கி மிகவும் கவலையுற்றார்.

எனவே, நோபல் மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. அடிக்கடி அவருடன் சண்டையிட்டார். இந்த டைனமைட் தயாரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். நோபல் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார்.

கணவரை விட்டுப் பிரிந்த நிலையிலும் டைனமைட் உற்பத்தியை நிறுத்துமாறு  அவருக்குத் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். அப்போதும் நோபல் நிறுத்தவில்லை. ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தில் இறந்தார்.

பத்திரிகைகள் ஆல்பிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டன. ஒரு பத்திரிகை "மரண வியாபாரி' நோபல் இறந்தார் என்றே தலைப்பிட்டிருந்தது.

 வேறொரு நகரத்தில் அந்த நேரத்தில் இருந்த நோபல் இச் செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். தன்னுடைய மனைவியின் வருத்தம், மன்றாட்டு, கோபம் அனைத்தும் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தார். ஆக்கப் பணிகளுக்காகப் பயன்பட வேண்டிய நம்முடைய கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.

 இனி, மனித குலத்துக்கு மிகுந்த பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் இலக்கியக் கர்த்தாக்களுக்கும் பொதுச் சேவகர்களுக்கும் விருதுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்க தன்னுடைய சொத்துகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்.

இதற்காக தன்னுடைய சொத்தில் 94 சதவீதத்தைச் செலவிட 1895 நவம்பர் 27-ல் உயில் எழுதிக் கையெழுத்திட்டார்.

 அவருடைய இறப்புக்குப் பிறகு முதல்முறையாக 1901இல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் உலக அமைதிக்காகப் பாடுபட்டவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 1969இல் இருந்து பொருளாதார அறிஞர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இதுவரை 10 பேர் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் இந்த நாட்டில் வசித்த வெளிநாட்டவர்களும் அடங்குவர். விவரம் வருமாறு:

1902 ரொனால்ட் ரோஸ், மருத்துவம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.

1907 ருட்யார்ட் கிப்ளிங், இலக்கியம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.

1913 ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், இந்தியர்.

1930 சர். சி.வி. ராமன், இயற்பியல், இந்தியர்.

1968 ஹர்கோவிந்த கொரானா, மருத்துவம், இந்திய வம்சாவளியினர்.

1979 அன்னை தெரசா, அமைதி, இந்தியர்.

1983 எஸ். சந்திரசேகர், இயற்பியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.

1998 அமார்த்திய சென், பொருளாதாரம், இந்தியர்.

2001 வி.எஸ். நைய்பால், இலக்கியம்,  இந்திய வம்சாவளியினர்.

2009 வி. ராமகிருஷ்ணன், வேதியியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.

 நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் (1901 - 1930) 30 ஆண்டுகளில் 4 நோபல் விருதுகளைப் பெற்றுள்ளோம்.

 1930 முதல் 2012 வரை 82 ஆண்டுகளில் 6 நோபல் விருதுகளைத்தான் பெற்றுள்ளோம். இந்த எண்ணிக்கையை எவ்வாறு உயர்த்துவது?  ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம்கண்டு ஊக்குவித் தால் இது சாத்தியம்.

 இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் குர்டன், ஜப்பானைச் சேர்ந்த சின்ய யமனகா ஆகிய இருவருக்கு "ஸ்டெம் செல்' ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஜான் குர்டன் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில், 250 மாணவர்களில் அவர்தான் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாராம். ஆசிரியர்கள் கேட்கும்போது, ""நான் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவேன்'' என்று நம்பிக்கையோடு பதில் அளிப்பாராம். ""மக்குப் பையனுக்கு ஆசையைப் பாருங்கள்'' என்று எல்லோரும் கேலி செய்வார்களாம்.

 ஜான் குர்டன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஸ்டெம் செல் குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக இப்போது விளங்குகிறார்.                                                                                                      


நன்றி :- தினமணி, கருத்துக்களம், முனைவர், ச.வின்சென்ட் இலயோலா கல்லூரி, சென்னை, 05-11-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.