Tuesday, November 20, 2012

புதிய தலைமைச் செயலகத்தை நீதிமன்றமாக மாற்றக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!



சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுத் தற்போது கைவிடப்பட்டிருக்கும் புதிய தலைமைச் செயலகத்தை நீதிமன்றமாக மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சிறிது காலம் இயங்கியது புதிய தலைமைச் செயலகம். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கே மாறியது. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 3-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், சென்னையில் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் பல இடங்களில் பிரிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சிரமம் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையோ 60 ஆக உயர்ந்துவிட்டது. அதனால் அவர்களுக்கான அறைகள், அலுவலக அறைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதேபோல் ஜார்ஜ்டவுன், எழும்பூர், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இது தொடர்பாக நவம்பர் 1-ந் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். சென்னையில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களையும் கீழமை நீதிமன்றங்களையும் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கோரியிருந்தேன்.

நான் அனுப்பிய மனுவைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியிருக்கிறார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி :- ஒன் இந்தியா, 20-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.