நன்றி :-தினமணி, 19-11-2012
By மா. வீரபாண்டியன்
First Published : 19 November 2012 02:18 AM IST
வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்கூட உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்''. இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களின் பாராட்டுரைகளோ, மக்களின் கருத்துகளோ அல்ல; 1908-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த வெள்ளைக்கார நீதிபதி ஃபின்ஹே தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளாகும்.
ஒரு நாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும், இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும் என்பதைச் செய்து காட்டியவர் வ.உ.சி.
ஓட்டப்பிடாரத்தில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை உலகநாதன் பிள்ளை. தாயார் பார்வதியம்மாள். தொடக்கக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியைத் தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பயின்று 1895-ஆம் ஆண்டு வழக்குரைஞரானார்.
தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார் வ.உ.சி.. "விவேகபானு' என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார்.
வ.உ.சி.யை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்த சம்பவம் என்றால் அது சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்புதான். அதன்பின்தான் வ.உ.சி.யின் உள்ளத்தில் விடுதலைக் கனல் ஓங்கியது.
பாலகங்காதர திலகரின் ஆவேசப் பேச்சில் மனதைப் பறிகொடுத்த வ.உ.சி. நாட்டின் விடுதலைக்காக அவரைப் போலவே தீவிரத்துடன் போராடத் தொடங்கினார். அதன் காரணமாகவே, அவர் "தென்னாட்டுத் திலகர்' என அழைக்கப்பட்டார்.
வணிகம் மூலமாக நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்களை வணிக ரீதியாகவே விரட்ட வேண்டும் என, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற சங்கத்தை நிறுவி அதன் செயலர் ஆனார்.
காலியா, லாவோ என இரு கப்பல்களை வங்கக் கடலில் விட்டு, கொழும்பு நகரத்துடன் வாணிபத்தைத் தொடங்கிய வ.உ.சி., பல இடங்களுக்குச் சென்று மக்களிடையே விடுதலை குறித்துப் பிரசங்கத்திலும் ஈடுபட்டார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் வ.உ.சி.யின் மீது வழக்குத் தொடுத்து 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தனர்.
வ.உ.சி. இயற்றிய மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை ஆகிய நான்கு நூல்களுமே கவிதைகளால் உருவாக்கப்பட்டவை. 5 பகுதிகள் அடங்கிய மெய்யறத்தில் மாணவர்கள், இல்லறத்தார், நாட்டை ஆளும் அரசன் போன்றோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கிறார். நன்னெறியுடன் வாழ்தல், உண்மை நிலையை எவ்வாறு அடைதல் போன்றவைகளை விளக்கியுள்ளார்.
கண்ணூர் சிறையில் இருந்த வ.உ.சி. மற்றக் கைதிகளுக்கு நீதி நெறிகளை விளக்கிய செய்யுள் நூல் மெய்யறிவு. இதில் மனிதன் தன்னை அறிந்து நடந்து கொள்ளும் அனைத்து நிலைகளையும் விளக்கியுள்ளார். வ.உ.சி.யின் தலைசிறந்த படைப்புகளுக்குள் ஒன்று பாடல் திரட்டு. இந்த நூல், வ.உ.சி. பல சந்தர்ப்பங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாகும்.
வ.உ.சி. தனது சுயசரிதையை 2 பகுதிகளாகச் செய்யுள் நடையில் எழுதியிருக்கிறார். முதல் பகுதியில் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது பகுதியில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணூர்ச் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை போன்றவற்றை விளக்குகிறார்.
இரத்தினக் கவிராயர் எழுதிய இன்னிலை, சிவஞான போதம் என்ற பக்தி நூல், திருக்குறள் ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார். திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்), தொல்காப்பியம் (இளம்பூரணார் உரையுடன்) ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
ஆங்கிலத்திலும் புலமைபெற்ற வ.உ.சி., ஜேம்ஸ்ஆலன் என்பவரின் மனம் போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் ஆகிய நூல்களை எளிதாக மக்களுக்குப் புரியும் வண்ணம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
வலிமையான பொருளாதாரக் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி., சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக வீடு, பொருள், குடும்பம் என அனைத்தையும் இழந்து வெள்ளையர்களால் செக்கிழுக்க வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
வ.உ.சி பிறந்த வீடு இப்போது தமிழக அரசால் சுற்றுலாத் தலமாக்கப்பட்டு, அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவரின் புகழுக்கு மேலும் அழகு சேர்க்க திருநெல்வேலியில் அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
நன்றி ;- தினமணி, 19-11-2012

0 comments:
Post a Comment
Kindly post a comment.