Monday, November 19, 2012

நூலகங்கள் மேம்பட ......................!


  வாசிக்கும் பழக்கத்தை இன்றைய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும்


பொது இடங்களில் தண்ணீர் குழாய்களுடன் கம்பிகளால் பிணைக்கப்பட்ட குடிநீர் டம்ளரைப் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள்;

அதைப் போலவே 15, 16ஆவது நூற்றாண்டுகளில் பொது நூலகங்களில் புத்தகங்களைச் சங்கிலிகளால் கட்டியிருந்தார்களாம் ஐரோப்பாவில்.

புத்தகங்களைப் "பாதுகாப்பதுதான்' அன்றைய நூலகங்களின் முதல் வேலையாக இருந்ததால் அந்த ஏற்பாடு.

இந்தியாவில் நூலக இயக்கத்துக்கு வழிவகுத்தவர் தமிழ்நாட்டின் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன். அவர் வகுத்த ""நூலகங்களுக்கான ஐந்து விதிகள்'' உலக அளவிலேயே நூலக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. ""புத்தகங்கள் பாதுகாப்புக்கே'' என்று அதுவரை இருந்த சிந்தனையை ""புத்தகங்கள் பயன்படுத்துவதற்கே'' என்று முதலில் மாற்றியவர் அவர்தான்.

பொது நூலகங்கள், கல்வி நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் என்று நூலகம் மூவகைப்படும். பொது நூலகங்கள் அனைவருக்கும் பொது. கல்வி நூலகங்கள் அந்தந்த நிறுவனங்களின் மாணவர்களுக்குப் பொது.

தமிழ்நாட்டில் 31 மாவட்ட மைய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 10 நடமாடும் நூலகங்கள், 1,724 கிராம நூலகங்கள், 598 பகுதி நேர நூலகங்கள் உள்ளன. சென்னையில் அமைந்துள்ள கன்னிமரா நூலகமானது மாநில மைய நூலகமாகும்.

தமிழகத்தில் இத்தனை பொது நூலகங்கள் அமையக் காரணமாக இருந்தது 1948-ல் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் கொண்டுவந்த பொது நூலகச் சட்டம்தான். இச் சட்டம்தான் இந்தியாவில் இயற்றப்பட்ட முதல் பொது நூலகச் சட்டம். கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி, எஸ்.ஆர். ரங்கநாதன் ஆகியோர் இதன் பின்னணியில் இருந்தனர்.

பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் குறிப்பிட்ட தொகையை, "நூலக சேவை வரியாக' வசூலிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. சொத்துவரியில் 10% இப்போது நூலக வரியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு நூலகத்துறைக்குச் செலுத்தப்படுகிறது.

உடைந்த ஜன்னல்கள், சரியாக மூடாத கதவுகள், கறையேறிய கழிவறைகள், தண்ணீர் வராத குழாய்கள், குப்பைக் கூளங்களுடன் "சன் ஷேடு'கள், ஒட்டடை படிந்த மேற்கூரைகள், நோட்டீஸ் ஒட்டிய சுவர்கள், மூத்திர நாற்றத்தோடு கூடிய சுற்றுப்புறம் என்பதே பொது நூலகங்களின் அடையாளங்களாக இருக்கக்கூடாதல்லவா?

நூலகம் வாசகர்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் இருக்கவேண்டும். அமைதியான சூழல் வேண்டும். நூலக அறைகளில் காற்றும் வெளிச்சமும் போதிய அளவு இருக்க வேண்டும்.

நூல்கள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். வாசகர்கள் தேடும் புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பருவ இதழ்கள், சிற்றிதழ்கள் வாங்கப்பட வேண்டும். நூல்களைத் தேடவும் பெறவும் நூலகர் இன்முகத்துடன் உதவ வேண்டும்.

நூலக வரித்தொகை நூலகங்களுக்கு உரிய காலத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும். நூலகர்கள் நன்கு பணிபுரிய அவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம், பதவி உயர்வு, அவர்களுடைய சேவைக்கு அங்கீகாரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அவர்கள் மேலும் படித்து தங்களை மேலும் தகுதி உடையவர்களாக்க வாய்ப்புகளும் ஊக்குவிப்புகளும் அவசியம்.

நூலகங்களுக்குப் போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். சிறு அல்லது கிளை நூலகங்களில் நூலகர்கள் விடுமுறையில் சென்றால் மாற்று ஏற்பாடாக மற்றொருவர் அப்பணியை மேற்கொள்ள எல்லா மாவட்டங்களிலும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். நூலகருக்கு விடுப்பு மறுப்பதோ, நூலகத்தை மூடுவதோ தவிர்க்கப்பட வேண்டும்.

கதைப் புத்தகங்களின் சங்கமம்தான் பொது நூலகம் என்ற நிலை மாறிவிட்டது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இல்லாத நல்ல பாட, குறிப்புதவி புத்தகங்கள் மாவட்ட மைய நூலகங்களில் கிடைக்கின்றன.

வாழ்நாள் முழுவதும் கல்வி, வயதுவந்தோர் கல்வி, முறைசாராக் கல்வி, தொலைதூரக் கல்வி மாணவர்களும் இம் மையங்களையே இப்போது நாடுகின்றனர்.

வாசகர்களின் தேவை அறிந்து நூல்களை வாங்க அந்தந்தப் பகுதி நூலகங்களுக்கும் வாய்ப்பு அளித்து அதற்கேற்ப குறிப்பிட்ட சதவீதம் நிதியையும் வழங்க வேண்டும்.

மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் அனைத்தையும் கணினிமயமாக்க வேண்டும். அனைத்து நூலகங்களையும் "நெட்வொர்க்' மூலம் இணைக்க வேண்டும். பொது நூலகத்தின் நூற்பட்டியல் இணையதளத்தில் இடம்பெற வேண்டும்.

வாசிக்கும் பழக்கத்தைப் பள்ளிப் பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும். பாடப் புத்தகங்களோடு வாசிப்பை நிறுத்தக்கூடாது என்பதை உணர்த்த வேண்டும். பள்ளிக்கூட மாணவர்களை உறுப்பினராக்கும் முயற்சியில் சில பொது நூலகர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபடுகின்றனர். இதை நூலகத்துறை ஊக்குவிக்கவேண்டும்.

பொது நூலகத்தைப் பெண்கள் மிகக்குறைந்த அளவில்தான் இப்போதும் பயன்படுத்துகின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

மாவட்டந்தோறும் மகளிர், குழந்தைகளுக்கென தனி நூலகங்களையோ அல்லது தனிப்பிரிவுகளையோ தொடங்க வேண்டும். அங்கு நூலகராகப் பெண்களையே நியமிப்பதும் பெண்களிடையே தயக்கத்தைப் போக்க உதவும். அவர்கள் வந்து செல்லும்படியாக நேரத்திலும் மாறுதல்களைச் செய்யலாம்.

நூலகம் இல்லாத இடங்களுக்குச் செல்ல நடமாடும் நூலகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

நூலகத்துக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்க சமூக நிறுவனங்கள், தனியார் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கிடையே மின்னணு இதழ்கள், புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ள மின்னணு தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றன.

தமிழகப் பொது நூலகங்கள் கூட்டமைப்பும் இந்த முறையைக் கையாளலாம். தரமான இலவச மின்னணு இதழ்களையும் வாசகர்கள் படிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு பொது நூலகர்களின் கல்வித் தகுதியையும் ஊதிய விகிதங்களையும் உயர்த்த வேண்டும்.

பொது நூலகத்தின் சேவையையும் தரத்தையும் பரப்பையும் விரிவுபடுத்த உயர்நிலைக் குழுவை அரசு நியமிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்த அவர்களுக்குச் சிறப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.                

நன்றி:-.  கருத்துக்களம், தினமணி, 19-11-2012                                            
0 comments:

Post a Comment

Kindly post a comment.