தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள் -
இரா.வெங்கடேசன்;
பக். 136; ரூ. 75;
இராசகுணா பதிப்பகம்,
சென்னை- 15;
94440 23182.
÷செவ்வியல் வரலாறுகளைக் கூறும் நூல்கள் வெளிவரும் சூழலில், செவ்வியல் இலக்கிய, இலக்கண நூல்கள் உருவான வரலாற்றை விரிவாகக் கூறும் நூல் இது.
÷பண்டிதர்களின் வீட்டுப் பரண்களில் தூங்கிக் கொண்டிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. முதலான தமிழ்ச் சான்றோர்கள் செய்த முயற்சிகள் எண்ணற்றவை.
பல தமிழ்ப் பெரியோர்கள் அயராத முயற்சி செய்து ஓலைச் சுவடிகளிலிருந்து படி எடுத்து, அதில் எழும் ஐயங்களை மேலும் பல சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து, செம்மையான முறையில் பதிப்பித்தனர். பிறகு அதில் வெளியான பிழைகளை மீண்டும் திருத்திச் செம்மைப்படுத்திப் பதிப்பித்து இன்று நாம் ரசித்துப் படிக்கும் நிலைக்கு உருவாக்கப்பட்டவையே நம் பழந்தமிழ் இலக்கியங்கள்.
÷சென்னைப் பல்கலைக்கழகத்தின் 1863ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காகச்
சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் (கானல் வரி) பகுதியை முதன் முதலாக ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பித்த தி.ஈ.ஸ்ரீநிவாஸராகவாசாரியார்,
சிலப்பதிகார மூலத்தை உரையுடன் பதிப்பித்து செம்மைப்படுத்திய உ.வே.சாமிநாதையர்,
தொல்காப்பியப் பொருளதிகாரம்- இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன்முதல் வெளியிட்ட வ.உ.சி.,
1857-ல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையைப் பதிப்பித்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராய பண்டிதர்
இவ்வாறு தமிழறிஞர்களின் பதிப்புச் செயல்பாட்டை ஆய்கிறது இந்நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் இதுவரை வந்துள்ள அந்நூலுக்கான பதிப்புகளின் பட்டியலை இணைத்துள்ளது சிறப்பு.
÷தமிழ் செவ்வியல் நூல்கள் இதுவரை உருவாகி வந்த வரலாற்றை விரிவாக ஆராயும் சிறந்த நூல்.
நன்றி :- தினமணி, 19-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.