Saturday, November 10, 2012

ஃபீனிக்ஸ் பறவை மெய்யா ? பொய்யா ?

நாம் எல்லோரும் கண்டிராத பறவை. உலக இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் ஒரு விநோதப் பறவை. இதனைச் சாகாவரம் பெற்ற பறவை என்றும், மரணத்திலிருந்து உயிர்த்தெழும் பறவை என்றும், தன் எரிந்த சாம்பலிலிருந்து மீண்டும் அது உயிர் பெற்று வந்துவிடும் என்றெல்லாம் கூறுவதுண்டு.

வெற்றி அடையும்வரை விடாமுயற்சியில் ஈடுபடுவோரை ஃபீனிக்ஸ் பறவையுடன் உவமைப்படுத்தியும் கூறுவர். மேலும் இப்பறவை சூரியனைக் காதலிக்கும் என்றும் அது சூரியனை நோக்கிப் பறந்துபோகும் என்றும், வழியில் வெப்பம் தாங்காமல் சாம்பலாகும் என்றும், இருப்பினும் மீண்டும் உயிர்த்தெழும், மீண்டும் சூரியனை நோக்கிப் பறக்கும் என்றும் அதனைப் பற்றிய விந்தைச் செய்திகளாகக் கூறுவர்.

இவையெல்லாம் எந்த அளவு உண்மை என்று நமக்குத் தெரியாது. இருப்பினும் மேனாட்டு இலக்கியங்கள் ஃபீனிக்ஸ் பறவைக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் கூட இது “ ஊழிக்காலப் பறவை” என்று வர்ணிக்கப்படுகின்றது.

ஃபீனிக்ஸ் உலகம் அழியும்போது தோன்றும். பின்னர் தீமூட்டி அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் என்று பண்டைய கிரேக்க இலக்கியங்கள் பகர்கின்றன.

ஃபீனிக்ஸ் பறவை சிவப்பு வண்ணம் உடையது. அதன் சிறகுகள் தங்கம்போல் ஒளிரும். அதன் குரல் அனைவரையும் மயக்கும் அற்புத இனிமையுடையது என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்றது.

ஃபீனிக்ஸ் என்ற நாட்டில் பிறந்த பறவையாதாலால், அதற்கு அந்தப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பறவை மரணத் தருவாயில் சோகமான ஒரு பாடலை இசைக்கும் என்று ஃபினிஷ்யா நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

’தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட மூன்று நாட்கள் கழித்து, அந்தச் சாம்பலிலிருந்து புதிய பறவை தோன்றும். அந்தப் பறவை இறந்த பறவையின் எச்சங்களைக்கொண்டு ஒரு முட்டை வடிவமாகச் செய்து அதனைத் தன்னுடன் எடுத்துச் செல்லும். அதனை எகிப்தில் உள்ள ஹெலிபோபோலிஸ் எனப்படும் சூரியன் கோவிலுக்குக் கொண்டு செல்லும்’ இவ்வாறு ஃபீனிக்ஸ் பற்றி வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.

ஆனால், நியூகினியா நாட்டில் உள்ள ‘சொர்க்கத்தின் பறவை’ எனும் அழகிய பறவையெ ஃபீனிக்ஸ் பறவையைக் குறிப்பதாகவும் கூறுகின்றனர். அந்த சொர்க்கத்தின் பறவையின் சிறகுகளும் தங்க நிறம் உடையவை. அந்நாட்டில் உள்ளவர்கள் அந்தப் பறவையின் சிறகுகளை வெளிநாடுகளில் விற்பனை செய்கின்றனர்.

அந்தச் சிறகுகளுக்கு அரபு நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளதாம். அரபு சுல்தான்கள் ஏராளமான பணத்தைக் கொடுத்து அதனை வாங்குகின்றனர்.

அச்சிறகுகளைப் பாதுகாக்க வாழை இலைகள், நார் போன்றவற்றை தீயில் காய வைத்து, அதனை முட்டை வடிவிலான ஒரு பெட்டியைச் செய்து, அதனுள் சிறகுகளை வைத்துக் கட்டி அனுப்புகின்றனர். இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் யாரோ சிலரின் கற்பனையில் உருவானதுதான் ஃபீனிக்ஸ் பறவர்கள் என்று சில வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஃபீனிக்ஸ் என்ற பறவையின் பெயரை அடிப்படையாகக் கொண்டு,  இவ்வளவு தகவல்களையும்  தொகுத்தவர், செவல்குளம் ஆச்சா என்கிற  சாத்தூர் மைந்தன். 

 தகவல் பெட்டகம் என்ற பெயரில் அதனை நூலாக வெளியிட்டது சென்னை-17, தியாகராயநகர், 19, கண்ணதாசன் சாலையில் உள்ள அநுராகம் பதிப்பகம். முதல் பதிப்பு வந்த வருடம் 2004. விலைரூபாய் 45/- 

அந்நூலில் இன்னும் இதுபோன்று சுவையான தகவல்கள் இன்னும் 78 இருக்கின்றன. ஆர்வலர் வாங்கிப் படித்து ரசிக்கலாம்.


வைரமுத்து தன் திரைப்படப் பாடலில் குறிப்பிடும் சக்கரவாகைப் பறவை பற்றியும்,

 தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும்,  நீருடன் கலந்த பாலை வைத்தால், நீரை விலக்கிவிட்டுப் பாலை மட்டும் பருகும் அன்னப்பறவை பற்றியும் 

யாராவது இது போன்று  தகவல்களைத் தொகுத்துள்ளனரா என்பதே எமது அடுத்த தேடல்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.