Sunday, November 25, 2012

இந்தியப் பழங்குடியினரின் களிமண் வீடு, ஆஸ்திரியா, கனடா, அரேபியா, இந்தியா-நாடுகளில் கட்டித்தரும் அயர்லாந்துக்காரர் !

            ஸ்டீபன் மோரீஸ் ஊட்டியில் கட்டிக் கொண்டிருக்கும் களிமண் வீடு


ஊட்டி மார்கெட்டில் அவரைப் பார்த்தேன். அவருக்கு நிச்சயம் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். வெளி நாட்டவர் என்பது பார்த்த உடனே தெரிந்தது. திடீர் என்று எனக்கு ஓர் எண்ணம். இவர் யார் என்பதை முதலில் அவருக்குத் தெரியாமல் தொடர்ந்து போய் தெரிந்து கொண்டால் என்ன?

அவரைப் பின் தொடர்ந்து போக முடிவு செய்தபோது ஒரு பைக்கில் இன்னொரு வெளி நாட்டு ஆசாமியின் பின்னால் உட்கார்ந்து பறந்தார். அவசரம் அவசரமாக ஓர் ஆட்டோவைப் பிடித்து பைக்கை தொடரச் சொன்னேன்.

பைக் ஒரு பெரிய காம்பவுண்ட் உள்ளே நுழைந்தது. வெளியே "சிமர்னா ஹோம்' என்று ஒரு போர்ட் இருந்தது. உள்ளே நுழைந்ததும் அவர் பைக்கிலிருந்து இறங்கி கொண்டார். நானும் ஆட்டோவுக்கு காசு கொடுத்து விட்டு பின் தொடர்ந்தேன்.

அவர் அந்த ஏழைப் பிள்ளைகள் மற்றும் முதியவர் காப்பகத்தின் பின்புறம் போனார்.

அங்கே களிமண்ணைக் குழைத்து வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். "சரிதான் இந்த ஆள் இதை வேடிக்கைப் பார்க்க வந்துள்ளார்....' என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அது நடந்தது.

அந்த வெளிநாட்டு ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் முக்கால்வாசி கட்டியிருந்த வீட்டின் பக்க வாட்டில் சாய்த்து வைத்திருந்த ஏணியில் ஏறி கீழே இருந்து குழைத்த களி மண் பாண்டுச் சட்டியை வாங்கி மேலே தடுப்புப் பலகையில் வைத்துக் கொண்டு கையால் எடுத்து பக்கவாட்டுச் சுவர்களில் பூச ஆரம்பித்தார்.

எனக்கு ஆச்சர்யம்.

யார் இவர்? இந்த ஊட்டியில் களி மண் வீடு கட்டிக் கொண்டு...

அவரிடம் பேசிய போது -

""என் பெயர் ஸ்டீபன் மோரிஸ்.. எனக்கு வயது ஐம்பது ஆகிவிட்டது... எனது சொந்த நாடு அயர்லாந்து... எனது மனைவி முதலில் இங்கு பள்ளி ஒன்றில் வேலை செய்தார். அவருடன் தான் முதலில் வந்தேன். நான் அங்கே பார்த்துக் கொண்டிருந்த தொழில், லாண்ட் ஸ்கேப்பிங் மற்றும் மரப் பாதுகாப்பாளர் பணி. நான் பிறந்தது காங்கோ நாட்டில். பள்ளிப் படிப்பை முடித்த நான் லண்டன் சென்று இந்த களிமண் வீடு கட்டும் தொழிலை படித்தேன். அது ஒரு தனியார் கல்லூரி. பின் காங்கோவில் இருந்த என் தந்தையைப் பார்க்கப் போன வேளையில் அவர் "எங்கே போனாய் திடீர் என்று.. லண்டனில் ஏதோ படிக்கப் போனாயாமே.. என்ன கோர்ஸ் படிக்கச் சென்றாய்?' என்று கேட்டார்.

நான் அவரிடம் ""இயற்கையாக நமக்கு கிடைக்கும் களிமண்ணை வைத்து குறைந்த செலவில் வீடு கட்டுவது எப்படி? என்று படிக்கப் போனேன் என்றதும் என் தந்தை சிரித்தார்.

பின் அவர், ""அந்த வேலையை நான் நாற்பது வருடம் முன்னாலேயே செய்து விட்டேனே காங்கோவில்...'' என்றார்.

எனக்கு ஆச்சர்யம். பின் அவரிடமிருந்தும் சில தகவல்களைப் பெற்றேன். இந்தியா வந்ததும் எனக்கு ஊட்டியில் ஒரு பள்ளியில் பி.டி. டீச்சர் வேலை கிடத்தது. சில பையன்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வரமாட்டார்கள். விசாரித்தால் மழையில் வீடு சரிந்து விட்டது. வீடு இல்லை... இப்படி காரணம் சொல்வார்கள். நேரில் ஒரு முறை ஊட்டியின் இறக்கங்களில் சென்றுப் பார்த்த நான் உண்மையிலேயே மனம் நொந்து போனேன். அப்படி ஒரு வறுமை. வீடு என்கிற பெயரில் நாலு மரம் அடித்த தடுப்பு. அவர்களுக்கு வீடு கட்ட பண உதவி செய்தேன்.

பின் எனக்கு ஹிமாலயா செல்லும் வாய்ப்பும் எனது களிமண் வீட்டை முதலில் அங்கு கட்டும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு கட்டி விட்டு வந்தேன். முழுக்க முழுக்கக் களிமண்ணால் கட்டப்படும் வீடு. கூரை பனை மரத்துப் பலகை மற்றும் புயலுக்கும் பறக்காத விசேஷத் தகடு. சிமெண்ட் வீடு கூட விரிசல் விடும். இது விடாது. அற்புதமான இந்த முறையை இந்தியப் பழங்குடியினர் செய்து வந்திருக்கிறார்கள்.

ஏழை மக்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். சிமெண்ட் வீட்டிற்கு நீங்கள் செலவு செய்வதில் மூன்றில் ஒரு பங்கு செலவு செய்தால் போதும். பூகம்பம் தாக்கினால் கூட இந்த வீடுகள் அசையாமல் நிற்கும்.

மலைப் பிரேதசங்களில் மட்டுமல்ல. எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். சின்ன வீடு என்று மட்டுமல்ல. மெக்சிகோவில் இப்பொழுது ஐந்தடுக்கு ஓட்டல் கூட கட்டி விட்டார்கள். இதுபோன்ற களி மண் வீடுகளை நான் ஆஸ்திரியா, கனடா, அரேபியா நாடுகளில் கட்டி உள்ளேன். எந்த இடமாய் இருந்தாலும் அந்த இடத்தில் களிமண் தன்மையை ஆராய்ந்து இறங்குவேன்.

பெங்களூரில் பெரிய ஃபார்ம் ஹவுஸ் மற்றும் வீடுகளை கட்ட உள்ளோம். எனது குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ஊட்டியைச் சேர்ந்த படித்த வேலையில்லாத இளைஞர்கள் உள்ளனர்.

அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையும் செயல் திறனும் எனக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. வீடு இல்லாத இந்தியன் இருக்கக்கூடாது என்பதுதான் என் லட்சியம். அதனால் தான் முதலில் இந்த "மாடல் ஹவுசை' எல்லோரும் பார்க்க வசதியாக இந்த "சிமர்னா காம்பவுண்டின்' உள்ளே கட்டி வருகிறேன். பெரிய இஞ்சினியர்கள் வந்து பார்த்தும் பயிற்சியும் எடுத்துப் போகிறார்கள்.

எனக்கு மூன்று மகள்கள். இப்போது லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மனைவியும் அவர்களும் விரைவில் இந்தியாவிற்கே வந்து ஊட்டியில் குடியேற உள்ளனர்'' என்ற தகவலை சொன்ன ஸ்டீபன் மோரிஸ் "ஐ லவ் இந்தியா' என்று முடித்தார்.                              

                                                                                                                  -சுப்ரஜா ஸ்ரீதரன்

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி




0 comments:

Post a Comment

Kindly post a comment.