Sunday, November 25, 2012

புதுவை நாடகக் கலைஞருக்கு ஃப்ரான்சின் செவாலியர் விருது !




புதுவையில் வசிக்கும் நாடகக் கலைஞரான காந்தி மேரிக்கு ஃபிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்த்தெடுத்தமைக்காக இந்த விருதைப் பெறுகிறார்.

லேடி டோக் கல்லூரியில் பணிபுரிந்த காந்திமேரி அங்கே கரகம், கும்மி,கோலாட்டம் பற்றி மாணவ மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்.

1986ல் "வெறியாட்டம்' நாடகத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பாண்டிச்சேரி நாடகப் பள்ளிக்காக இந்திரா பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் உருவான "ஒளரங்கசீப்' நாடகத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.

1990ல் பாண்டிச்சேரி நாடகப் பள்ளி மாணவர்களுக்காக "பாஞ்சாலி சபதம்' நாடகத்தில் நடித்தவருக்கு தெருக்கூத்தில் பங்கேற்ற முதல் தமிழ் நாடக நடிகை என்ற சிறப்பு கிடைத்தது.

இந்த மாணவர்களுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறையில் உருவான "கால யந்திரங்கள்' நாடகத்தில் நடித்தார்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப் பள்ளியில் பெண்கள் நடிக்க வராத காலகட்டத்தில் புகழ் பெற்ற பெண் கதாபாத்திரங்களில் மேடையில் தோன்றி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

1992ஆம் ஆண்டில் இவர் நடித்த "மிருகம்' நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. "காட்டுக்குள்ளே திருவிழா' ,

"தெப்பத் திருவிழா' ஆகிய குழந்தைகளுக்கான நாடகத் தொகுப்பை வெளியிட்டார். பல்வேறு நூல்களையும் இயற்றியிருக்கிறார்.

1998ஆம் ஆண்டு முதல் புதுவை லிசே ப்ரான்சேவில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் அங்கு பயின்ற மாணவ மாணவிகளுக்கு கும்மி, பின்னல் கோலாட்டம், முளைப்பாரி, கரகம் ஆகியவற்றைக் கற்றுத் தந்தார்.

இவ்வாறு நாட்டுப்புறக் கலை மற்றும் நாடகத் துறையில் சிறந்து விளங்கும் காந்தி மேரிக்கு மொழி மற்றும் கலாசாரத்தை வளர்த்தெடுத்தமைக்காக செவாலியர் விருது வழங்கப்பட்டிருப்பது நாடக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. - பா.சரவணகுமரன்                                                             

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 25-11-2012



0 comments:

Post a Comment

Kindly post a comment.