Sunday, November 25, 2012

கிண்டி லாட்ஜாக இருந்து பசுஞ்சோலையான ராஜ்பவன், சென்னை !

1670-களில் கிண்டி லாட்ஜ்ஜாக இருந்த இடம் தமிழக ஆளுநரின் குடியிருப்பான ராஜ்பவனாக பின்னாளில் மாற்றப்பட்டது. பரபரப்புக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடுக்கும் பெயர் போன சென்னை மாநகரின் மையத்தில் இப்படியொரு பசுஞ்சோலை அமைந்துள்ளது வியப்புக்குரியது. சுமார் 300 ஆண்டுகளாக இந்த வனம் பசுமையாக பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 
  விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட சென்னை ஆளுநர் மாளிகையின் தோற்றம்
1670-களில் கிண்டி லாட்ஜாக இருந்த இடம் தமிழக ஆளுநரின் குடியிருப்பான ராஜ்பவனாக பின்னாளில் மாற்றப்பட்டது. பரபரப்புக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடுக்கும் பெயர் போன சென்னை மாநகரின் மையத்தில் இப்படியொரு பசுஞ்சோலை அமைந்துள்ளது வியப்புக்குரியது. சுமார் 300 ஆண்டுகளாக இந்த வனம் பசுமையாக பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ராஜ்பவன் 156.14 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. அங்கு சுமார் 208 வகையான மூலிகைகள், புதர்கள், மரங்கள் காணப்படுகின்றன. மிகவும் அரிதான இனவகைகளும் இங்கு ஏராளமாக உள்ளன. அதிக மரங்களும் செடிகளும் இருந்தால் அங்கு அரிதான விலங்குகளும் இருக்கும்தானே? ஆம்; குள்ளநரி, கீரிப்பிள்ளை, கலைமான், குரங்குகள், அணில்கள், மான்கள் என பல்வேறு அரிய விலங்குகளும் சுதந்திரமாகத் திரிகின்றன.

அதிக மரங்கள் காணப்படுவதால் இந்தப் பகுதி "ஆக்ஸிஜன் பை' என வர்ணிக்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை எனும் மாபெரும் நகரில் உருவாகும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் கருவியாக இது செயல்பட்டு வருகிறது.

அதாவது காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவின் அளவைத் தணித்து, பிராணவாயுவை அதிகம் வெளியேற்றுகிறது.

ராஜ்பவனில் உள்ள செடிகளின் வகைகளையும், 208 வகையான செடி, கொடிகளின் புகைப்படங்கள், குறிப்புகள், பயன்கள் ஆகியவற்றைத் தொகுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்ற மையத்தின் நிறுவன இயக்குநர் ஏ.ராமச்சந்திரன் நூலாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் உள்ள சில தாவரங்களின் வகைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

நிலவேம்பு: வெப்ப மண்டலங்களில் அதிகம் வளரும் இந்த வகைச்செடி மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இதன் இலைகள் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் இந்த நிலவேம்பு பயன்டுத்தப்படுகிறது. கடுமையான சளியில் இருந்து நுரையீரலைக் காப்பாற்றுவதற்கு சீனாவில் இது பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் வாய்ந்த இதன் இலைகளைக் கொண்டு தயாரித்த நிலவேம்புக் குடிநீர், கடுமையான காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றுக்கு சரியான தீர்வு.

ராம்சீதா: சீதாப் பழ வகையைச் சேர்ந்தது ராம்சீதா. இந்தியா,பிலிப்பைன்ஸ், தைவான், ஆஸ்திரேலியா, வடக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இது பயிரிடப்படுகிறது. இதனைப் பழமாக உண்ணலாம், இதன் இலைகளும் மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. வயிற்றுப்போக்கு, அல்சர், குழந்தைகளுக்கான அஜீரணம் போன்றவற்றுக்கு இதன் இலைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.

குதிரைக் குளம்பு: குதிரை கால்களின் அச்சுபோன்று இதன் இலைகள் காணப்படுவதால் குதிரைக் குளம்பு என்றும் புலி பாதம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இதன் வேர்கள் வயிற்றுப்போக்கு, கொப்பளங்கள், நாய்க்கடி உள்ளிட்டவற்றுக்கான மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தச் செடியில் பூக்கும் ஒரு வகை மஞ்சள் நிறப் பூ ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டேயிருக்கும்.

வேலிப்பருத்தி: இந்த செடியின் வேர், இலை, தளிர், பழம் மற்றும் விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இந்தச் செடியை கல்லீரல் பிரச்னைகளுக்கும், மஞ்சள்காமாலை நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக இந்தச் செடியை பாரம்பரிய மருத்துவத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

சொடக்குத் தக்காளி: நம் ஊர்களில் வேலி ஓரத்திலும் சாலையோரங்களிலும் அதிகமாக இந்தச் செடியைக் காணலாம். இதன் இலை, தண்டு, பழம் என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. பழத்தில் புளிப்புச்சுவை உள்ளதால் வைட்டமின் "சி' சத்துகள் நிறைந்துள்ளன. பெரும்பாலும் பாரம்பரிய மருத்துவங்களுக்கே இவை பயன்படுத்தப்படுகின்றன. கடுகு எண்ணெயுடன் இதன் இலைச் சாறைக் கலந்து காது வலிக்கு கொடுக்கின்றனர். இலை மற்றும் தண்டு இரண்டையும் சேர்த்து அரைத்த கலவை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

குலமருது: இந்தியாவில் புனித மரங்களாக கருதப்படும் மரங்களில் குலமருதும் ஒன்றும். பண்டைய காலத்தில் இருந்தே இந்த மரம் ஆயுர்வேத மருத்துவத்திற்கு உபயோகப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், உடலில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படுதல் போன்றவற்றின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது படகுகள் தயாரிக்கவும் மர வீடுகள் கட்டுவதற்கும் விவசாயத்திற்கு தேவையான கருவிகள் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகிறது. மிகவும் உறுதியான மரம்.

கொட்டை இலந்தை: இதன் பழங்களை நாம் சுவைக்கலாம். இதன் பழங்களை உலர வைத்து ஜாம் செய்ய பயன்படுத்தலாம். காயங்களை ஆற்றுவதற்கு இந்த மரத்தின் பாகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. பாரம்பரிய மருத்துவங்களில் வயிற்றுப்போக்கு, நெஞ்சு வலி ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. மிட்டாய்கள், இனிப்புகள் போன்றவை தயாரிக்க பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

இவை தவிர, குப்பைமேனி, கொடி ரோஜா, காட்டாமணக்கு, மிளகுத்தக்காளி, பனைமரம், தேக்குமரம், நொச்சி, செங்கொன்றை, தும்பை, கோரைப்புல் என பல்வேறு தாவரங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வானுயரக் கட்டடங்கள் எழுப்புவதற்கு அடர்ந்து படர்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தும் இந்த யுகத்தில் பல நூற்றாண்டுகளாக ராஜ்பவனைப் பசுஞ்சோலையாக பராமரித்து வருவதற்கு "சபாஷ்' போடலாம்.

தகவல் உதவி: ஆர்.பன்னீர்செல்வம்                                                       

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 25-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.