பாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு அறிவுரை !
பாடப் புத்தகத்தைத் தாண்டி பிற புத்தகங்களையும் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்க வேண்டுமென, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில், மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:
மாணவர்கள் என்றால் வாசிப்பவர் என்று பொருள். எனவே, மாணவர்கள் வாசிப்புப் பழக்கத்தை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.
மனித வாழ்க்கைக்குக் கூடுதல் வசதியை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு மணித்துளிகளையும் புத்தகங்களை வாசித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடுதல் எனப் பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 90 சதவீத நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய நிலை உள்ளது. நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன.
படித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வசதியாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கக்கூடாது. சமுதாயத்தில் இருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
சுயநலத்தைக் கைவிட்டு சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள், மரம், செடி, கொடி, விலங்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். கற்றல் என்பது தொடர் நிகழ்வு. பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. கற்பதற்கு எல்லை இல்லையென சாதனையாளர்கள் எண்ணுகின்றனர். நூலகத்துக்குச் செல்லும்போதுதான் சாதனையாளராக மாற முடியும். பள்ளிப்படிப்புக்கும், கல்லூரிப் படிப்புக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
பள்ளிப் பருவத்தை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். ஆனால், கல்லூரிப் பருவத்தை மிகக் கவனமுடன் கையாள வேண்டும். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கக் கூடாது. அதையும் தாண்டி பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்த வேண்டும். வித்தியாசமாகச் சிந்தித்துக் கருத்துக்களைச் சொல்லும் நபர்களைச் சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை.
மார்க்ஸ், அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சால், குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற கொள்கையை உருவாக்கிய டார்வின் உள்ளிட்டோரைச் சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்குமென மாணவர்கள் காத்திருக்கக் கூடாது; வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.
நன்றி :- தினமணி, 05-09-2012
Saturday, November 3, 2012
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா எனது பெயர் கணபதி நான் முதுநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது தமிழ் நாடு பணியாளர் தேர்வாணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழை மிகவும் மட்டமான அவல நிலைக்கு(மன்னிக்கவும்) கொண்டு செல்லும் நோக்குடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கரணம் தமிழக மக்களுக்காக தமிழகத்தில் பணிசெய்ய ஒரு சாதாரண தமிழை கற்கவேண்டியது இல்லை என்று இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. எனெனில் சரியான முறையில் தமிழ்கற்காத (தெரியாத)ஒரு வெளிமாநிலத்தை சேர்ந்த நபர் தேர்வில் வெற்றி பெற்று பணியமர்ந்தாள் ஒரு படிப்பறிவில்லாத ஒரு தமிழனுக்கு தமிழகத்தில் எப்படி தேவையறிந்து சேவை செய்ய இயலும் எனவே இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனக் கோருகிறேன்.
ReplyDelete