Sunday, November 18, 2012

இராஜபாளையத்தில் ஒரு உத்தம ராசா....!

மண் எப்படியோ அதே போல மக்களின் மனதும் அப்படியே

காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண்,

தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி

காவல் காப்பதற்கு ஏற்ற நாய்கள் வாங்கவேண்டுமானால் அனைவரது நினைவிற்கும் வருவது இராஜபாளையமே

தியாகிகளும், நாட்டிற்கு உழைத்த நல்லவர்களும், கொடைத்தன்மை மிக்கவர்களும் நிறைந்த புண்ணிய பூமியும் கூட

மதுரையில் இருந்து குற்றாலம் போகிறவர்களுக்கு சீசனுக்கான தூரலைத் தந்து ரம்மியமாக வரவேற்பதும் இராஜபாளையமே.

இப்படிப்பட்ட இராஜபாளையத்தில் குடிநீர்ப் பிரச்னை இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது, இராஜபாளையத்தில் இருந்து ஐயனார் கோயில் போனால் அங்குள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரை நம்பித்தான் ராஜபாளையம் உள்ளது.

இந்த அணைக்கட்டோ ஐயனார் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் பெய்யும் மழையை நம்பியே உள்ளது.

ஆனால் மாறிவிட்ட இயற்கைச் சூழ்நிலையில் மழையைத் தற்போது முழுமையாக நம்ப முடியவில்லை.

இதன் காரணமாக வறண்டுவிட்ட அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெறமுடியாத சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டுவிடும். அப்போது மக்கள் குடிநீரின்றி ரொம்பவே சிரமப்படுவார்கள்.

தண்ணீருக்காக இவர்கள் விடும் கண்ணீரைத் துடைப்பதற்காக, அணைக்கட்டை ஒட்டியுள்ள பகுதியில் பண்ணை வைத்துள்ளவர்கள், தாங்களே முன்வந்து தங்களது கிணற்று நீரை வழங்க முன்வந்தனர். அவர்களில் முதன்மையானவர்தான் இராமசுப்பிரமணிய ராஜா.

இராஜபாளையத்தில் இரண்டாவது தலைமுறையாக மின்சாதனப் பொருள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இராமசுப்பிரமணிய ராஜா, தனது தந்தை அழகர்ராஜாவின் சந்தோஷத்திற்காக, ஐயனார் கோயில் போகும் வழியில் பெரிய தோப்பு ஒன்றை வாங்கிப்போட்டார்.

அந்தத் தோப்பில் மோசமான நிலையில் இருந்த கிணற்றைப் பெரும் செலவு செய்து சீரமைத்தார், கிணற்றுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம், சீரமைப்பு என்று பலரும் கேட்டபோது கிடைக்காத பதில் சீரமைத்து முடிந்த பிறகு கிடைத்தது.

ஆம் ! சுற்றுபக்கம் எதிலும் இல்லாத அளவிற்கு தண்ணீர் நன்றாக ஊற்றெடுத்தது.

கிணற்றில் நீர் நிரம்பி இருந்ததால் தோப்பில் வாழை, தென்னை, மா என நிறைய மரங்களை வைத்து மகசூல் பார்த்தார். இந்த நேரத்தில்தான் இராஜபாளையத்தை குடிநீர் பிரச்னை வாட்டி எடுத்தது.

கொஞ்சமும் யோசிக்காமல் தனது கிணற்று நீரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலவசமாக வழங்கினார்.

ஒரு லாரியில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் ஒரு நாளைக்கு முப்பது லாரி தண்ணீர் வரை எடுத்துச் செல்கிறார்கள். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல அறுபது நாள் வரை எடுத்துச் சென்றார்கள். இதனால் இராஜபாளையத்தில் குடிநீர்ப் பிரச்னை ஒரளவு குறைந்தது.

இது நடந்து பத்து வருடம் இருக்கும், அதன் பிறகு கடந்த பத்து வருடங்களாக எப்போதெல்லாம் ராஜபாளையத்திற்கு குடிநீர்ப் பிரச்னை என்றாலும் உடனே இவரது கிணற்று நீருக்கு லாரிகள் படையெடுத்துவிடும்.

ஒரு வருடம் மோசமான குடிநீர்ப் பிரச்னை, கொஞ்சம் கூடுதலாகவே தண்ணீர் எடுத்துச் சென்றார்கள், இப்படியே தண்ணீர் எடுத்தால் தோட்டத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிடும் ஆகவே எடுத்த வரை போதும் என்று சொல்லுங்கள் என்று பண்ணையாட்கள் இராமசுப்பிரமணிய ராஜாவிடம் கூறியபோது, குடிநீர் இல்லாமல் மனித உயிர்களே வாடும் போது பயிர்களா முக்கியம் என்று சொல்லி தடையின்றி தண்ணீர் கொடுத்தவர்.

இத்தனை வருடங்களாக இவர் தண்ணீர் கொடுத்து வந்தாலும், இவர்தான் தண்ணீர் கொடுக்கிறார் என்று பல அங்குள்ள பலருக்கே தெரியாது, காரணம் கொடுக்கும் இவரும் சொல்லிக் கொண்டது இல்லை, வாங்கும் நகராட்சியும் வெளியே சொன்னது இல்லை.

தண்ணீர் கொடுப்பதோடு நின்றுவிடாமல் தண்ணீரை எடுத்துச் சென்று சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, அங்கு இருக்கும் பணியாளர்களை உற்சாகப்படுத்துவார்.

நான் செய்யுறது சாதாரண காரியமுங்க எனக்கு எந்த நன்றியும் வேண்டியதில்லீங்க... நன்றியெல்லாம் இறைவனுக்கும், இயற்கைக்கும் செலுத்துனா போதுமுங்க என்று சொல்லும் இராமசுப்பிரமணிய ராஜாவை வாழ்த்த நினைப்பவர்களுக்கு அவரது எண்: 09842163864.

- எல்.முருகராஜ்

நன்றி;- மாலைமுரசு, 18-11-2012

2 comments:

 1. ///காவல் காப்பதற்கு ஏற்ற நாய்கள் வாங்கவேண்டுமானால் அனைவரது நினைவிற்கும் வருவது இராஜபாளையமே /////

  மலே மேற்கோள் கட்டி இருக்கும் வார்த்தைகள் மட்டுமே எனக்கு இராஜபாளையம் பற்றி தெரிந்த ஒன்று அதையும் தாண்டி எத்தனை த்தனை சிறப்புகள் அருமை ! பகிர்ந்தமைக்கு நன்றி மாலைமுரசு,

  ReplyDelete
  Replies
  1. புதிய நட்பு. நன்றி, பனித்துளியார் அவர்களே !

   Delete

Kindly post a comment.