Monday, November 19, 2012

வங்கக் கடலில் வலுப்பெறுகிறது புயல் சின்னம் !


வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைக் காட்டும் வரைபடம்.

வங்கக் கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றுப் புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தற்போது சென்னைக்குக் கிழக்கு - வடகிழக்கில் 800 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் ஆந்திரத்தின் தென் கடலோரம் மற்றும் வடதமிழகத்தைத் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை  முதல் நவம்பர் 20 கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை  நவம்பர் 17 வங்கக் கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் உருவான காற்ழுத்தத் தாழ்வு நிலை அன்றைய தினமே வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு 550 கி.மீ தொலைவில் உள்ள அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்துத் தற்போது புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. திங்கள்கிழமை நவம்பர் 19 காலைக்குள் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் உருவான பின்பு அதற்குப் பெயரிட உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"நீலம்' புயல் பாதிப்பு: கடந்த மாதம் அந்தமான் கடலில் உருவான தாழ்வு மண்டலம் "நீலம்' புயலாக மாறி, தமிழகக் கடலோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

"நீலம்' புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர்.

மீண்டும் புயல் சின்னம்: தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம், ஆந்திரத்தில் கரையைக் கடந்தாலும், கரை கடந்த பிறகு காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்து வட தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு கன மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் புயல் சின்னம் உருவாகியிருப்பதால் கடலில் 70 கி.மீ வரையில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி; தினமணி, 19-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.