Monday, November 19, 2012

தேசியப் புத்தக வாரம்: தமிழகத்தில் 100 இடங்களில் புத்தகக் கண்காட்சி !



தேசியப் புத்தக வாரத்தை முன்னிட்டு புத்தக வெளியீட்டு விழா மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட், அறிவியல் வெளியீடு பாரதி புத்தகாலயம் இணைந்து தமிழகத்தில் 100 இடங்களில் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்துப் பாரதி புத்தகாலயப் பதிப்பாளர் க.நாகராஜன் விடுத்த செய்திக்குறிப்பு...

தேசியப் புத்தக வாரம் முதன் முதலாக 1934ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்டது, 1936-ல் உலக அளவில் ஒரு இயக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1939களில் கிறிஸ்துவ கத்தோலிக்க திருச்சபையினரால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் முயற்சியால் தேசியப் புத்தக வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசு நிறுவனமான "நேஷனல் புக் டிரஸ்ட்" ஆண்டு தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துகிறது.

அமெரிக்காவில் உள்ள ‘அமெரிக்கன் லைப்ரரி காங்கிரஸ்’ சார்பில் தேசியப் புத்தக வாரத்தில் புத்தகங்களை வெளியிடுவதுடன் அந்த ஆண்டுக்கான கவிதை, நாடகம், சிறுகதைத்தொகுப்பு, நாவல் போன்ற தலைப்புகளில் சிறந்த புத்தகங்களுக்குப் பரிசளிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தின் சார்பில் யூமா வாசுகியின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா 20/11/2012 அன்று மாலை 6 மணிக்கு பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ சாலை தேனாம் பேட்டையில்(அண்ணா அறிவாலயம் அருகில் நடைபெறுகிறது.

கறுப்பழகன் நாவலினை மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி வெளியிட இந்திய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கருமலையான் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம் நூலினை பத்திரிக்கையாளர் கவின்மலர் வெளியிட சிஐடியூ/ மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் பெற்றுக் கொள்கிறார்.

சிம்புவின் உலகம் நூலினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் சென்னைச் செயலாளர் லெனின் பெற்றுக் கொள்கிறார்.

மரத்தின் அழைப்பு நூலினை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோ.ராஜ்மோகன் பெற்றுக் கொள்கிறார்.

புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதுடன் குழந்தைப்பருவத்திலிருந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், அந்த வாசிப்பின் மூலம் குழந்தைகளின் மனதையும், அறிவையும் விசாலப்படுத்தவும் தேசிய புத்தக வாரக் கொண்டாட்டத்தை நேஷனல் புக் டிரஸ்ட் உடன் இணைந்து பாரதி புத்தகாலயம் சார்பில் தமிழகம் முழுவதும் நவம்பர் 14 முதல் டிசம்பர் 14ஆம் தேதிவரை தமிழகத்தில் 100 இடங்களில்  புத்தக கண்காட்சிகள் நடைபெற உள்ளன.

இந்தக் கொண்டாட்டத்தில் ரூ.500 க்கு புத்தகம் வாங்கினால் ரூ.250 மதிப்பிலான அவர்கள் விரும்பும் புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும்.மேலும், குழந்தைகளுக்காகப் பரிசளிக்கப் பரிசுக் கூப்பன் கிடைக்கும். முன்கூட்டியே பணம் செலுத்தி பெறுபவர்களுக்கு புத்தக மதிப்பில் 50% இலவசமாக வழங்கப்படும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.