Wednesday, November 14, 2012

மணிப்பூர் மாநிலம் , சாண்டல் மாவட்டத்தில் உள்ள

From: Dhana Sekar Date: 2012/11/12Subject:  மோரே - ஒரு குட்டித் தமிழ்நாடு!

வருவதால் சரளமாகத் தமிழ் புழக்கத்தில் உள்ளது. மோரேவின் பூர்வீகக் குடிகளும் எல்லைப்பகுதியைச் சேர்ந்த பர்மியர்களுமே தமிழில் பேசிக் கொள்வது ஆச்சரியம்.

”செம்மொழியான தமிழ் மொழியாம்...தமிழ் மொழியாம்... இன்பத் தமிழ் மொழியாம்...!”-தமிழின் புதிய கீதம் ஒலித்த இடம் தமிழகம் அல்ல; மோரே!

மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக்கிராமம். பூர்வீகக் குடிகளான குக்கீஸ்களுடன் தமிழர்கள், நேபாளிகள், பஞ்சாபிகள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

தமிழர்கள் வந்த கதை

இங்கு தமிழர்கள் வந்த கதை சோகம் கலந்த சுவாரஸ்யம். அதற்குள் இந்திய சுதந்திரப்போரின் சுவடுகளும் பதிந்திருக்கின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசியப்படையில் மோரே தமிழர்களும் இணைந்திருந்ததை இங்குள்ள பாட்டிகள் கதைக்கதையாகக் கூறி வருகிறார்கள். மோரேவையும், சூரஜ்சந்த்பூரையும் இந்திய தேசியப்படை வீரர்கள் பயன்படுத்தி பிரிட்டிஷ் படையை எதிர்த்து நாகலாந்து வரை வந்து ஐ.என்.ஏ. கொடியை நாட்டியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது பர்மாவும் இந்தியாவின் அங்கமாகத்தான் இருந்தது. பர்மாவின் தலைநகர் ரங்கூன் வரை வியாபாரத்துக்காக இந்தியர்கள் சென்றுவர மோரே ஒரு முக்கியக் நுழைவாயிலாகச் செயல்பட்டது.
இவ்வாறு வியாபாரத்துக்குச் சென்றுவரும் இந்தியர்களுக்காக மோரே தமிழர்கள் வாடகை வீடுகள் மற்றும் உணவகங்கள் நடத்தித் தங்கள் வருவாயை ஈட்டிக் கொண்டார்கள். காலப்போக்கில் மோரே கிராமமாக உருவெடுத்தது. 1960களில் இங்குள்ள குக்கி பழங்குடியின மக்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் மோரே இருந்து வந்ததாக்கவும், ஷொலிம் பெயிட் என்பவர் கிராமத் தலைவராக இருந்ததாகவும் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

1962 களில் மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு இந்தியர்கள் அகதிகளாக அனுப்பப்பட்டனர். இதில் பர்மாவில் வசித்த தமிழர்கள் பெரும்பாலானோர் மோரேவில் தஞ்சம் அடைந்தனர். சென்னைக்குக் கப்பல்களில் அனுப்பப்பட்ட இந்தியத் தமிழர்களிலும் பெரும்பாலோர் தங்களின் பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறைக்கு அனுகூலமான மோரேவை நாடி குடும்பம் குடும்பமாகச் செல்லத் தொடங்கினர். இப்படி வந்தவர்களுக்கு ஷொலிம் பெயிட் உதவிகரமாக இருந்தார்.காரணம் இங்குள்ள தமிழர்கள் செலுத்திய மண் வரிதான். இந்த வரியில் குறிப்பிட்ட பங்கை அவர் எடுத்துக் கொண்டு மீதியை அரசுக்கு செலுத்தியது தனிக்கதை.

தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள, நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம் நடந்து வந்தது.அங்கு தொழிலாளர்களாகப் பணிபுரியத் தொடங்கிய தமிழர்களுக்கு அவர்களது புத்திசாலித்தனமும், உழைப்பும் புதிய கதவுகளைத் திறந்தன.

கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். துணிவகைகள், பாத்திர பண்டங்கள், மளிகைப் பொருட்கள் எனத் தொடங்கி மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களும் வணிகம் செய்யப்படுகிறது.

மோரே ஸ்மால் டவுண் கமிட்டி

சமீபத்தில் மோரே -மியான்மர் எல்லையில் தடையற்ற வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. காலை 7மணிமுதல் மாலை 5மணி வரை இங்கு இருநாட்டினரும் வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மியான்மரின் டம்மு பகுதிக்குள்ளும் வணிகத்துக்காக சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது. 1980 ல் 'மோரே ஸ்மால் டவுண் கமிட்டி’ அமைக்கப்பட்டது.

மோரே நகரத்தின் அளவு 7.38 சதுர கிலோமீட்டர் அளவுதான்.மோரேவின் மக்கள்தொகை சுமார் 30ஆயிரம். இதில் 17ஆயிரம் பேர் வரை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நானூறு குடும்பங்கள் அடங்கிய பகுதி ஒரு வார்டாகக் கூறப்படுகிறது. தற்போது மோரே ஒன்பது வார்டுகளைக் கொண்டுள்ளது.2,3,4,5,6,7 வார்டுகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

பெண்வீட்டாருக்கு கண்டிப்பாகத் திருமண சீர்

திருமண விஷயத்தில் பெண் வீட்டார்களுக்கு வரதட்சணை உள்பட எந்தப்பிரச்னையும் கிடையாது.பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்தால் மட்டுமே திருமணம். பெற்றோர்கள் கட்டாயம் செய்வது கிடையாது. 
அதேபோல் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாலும் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான திருமணம் நடைபெறும். மேலும் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாருக்கு கண்டிப்பாகத் திருமண சீர் கொடுக்கவேண்டும்.திருமணம் முடிந்த அன்றே மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றுவிடுவார்.

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் உள்ளூர்ப் பெண்கள் வெளிமாநிலத்திலிருந்து மணிப்பூரில் அரசாங்க வேலை, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் வேலை, மற்ற துறைகளில் வேலை செய்பவர்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படியான திருமணங்களும் நடந்துள்ளது. 
இவர்கள் நமது இந்திய கலாசாரத்தைத் தழுவி நல்லவிதமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாகப் பஞ்சாபிகளும், மலையாளிகளும், தமிழர்களும் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மோரே மலைவாசிகள் ஆண்டுதோறும் அறுவடை நேரத்தில் அதாவது நவம்பர் மாதம் முதல் தேதியில் ‘கூட் திருவிழா’ கொண்டாடுவார்கள். ஆடிப்பாடி நடனம் ஆடுவார்கள். அவர்கள் சமூகப் பெண்களுக்கு அழகிப்போட்டிகளும் நடத்தப்பட்டு அழகி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்குவார்கள். 
இதே போல் தமிழர்கள் தைத்திங்கள் நாளில் பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். அப்போது பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். தமிழர்களின் விழாக்களின் போது மலைவாழ் மக்களின் கலாச்சார நடனமும் நடத்தப்படுகிறது. இவை தவிர தமிழர்களின் பண்டிகைகள் அனைத்தும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

மோராவில் மலைவாழ் மக்கள் சிறிய அளவிலான 29 கிறிஸ்தவ கோவில்களைக் கட்டியுள்ளனர். 20அல்லது 30 குடும்பத்தினருக்கு ஒரு கோவில் என்ற அளவில் இருக்கிறது. இவர்கள் ஒரு கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு என்று பிரார்த்தனைத் தலைவர்களும் தனித்தனியாக இருக்கிறார்கள்.

இயற்கையோடு இணைந்து வாழும் இம்மக்களின் சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு இடையே பிரச்னைகளும் இல்லாமல் இல்லை. இப்பகுதியின் மற்றொரு பூர்வீகக்குடிகளான நாகாக்கள் மோரே தங்களுக்குத்தான் என்று போர்க்கொடி பிடித்ததில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. 
 தமிழர்களுக்கும், குக்கீஸ்களுக்கும் இடையே கூட மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.தற்போது இவை மறக்கப்பட்டு எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றன.

மோரே தமிழ்ச்சங்கம்

தமிழர்கள் பெருகத் தொடங்கியதும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 1967ல் தமிழர் நலச்சேவா சங்கம் தொடங்கப்பட்ட நிலையில்,மூன்று மாதம் கழித்து ஜூலை 15 ம் தேதி புதிய குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, மோரே தமிழ்ச்சங்கமாக செயல்படத் தொடங்கியது.

இவர்களின் முயற்சியில் பள்ளிக்கூடத்துக்காக ஒரு இடம் வாங்கப்பட்டு நேதாஜி நினைவு ஆங்கில உயர் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

மோரே தமிழ்ச்சங்கத்தின் கீழ் வார்டு வாரியாக முத்தமிழ் மன்றம், சன்ரைஸ் யூத் கிளப், பேச்சுலர் வெல்ஃபர் யூத் கிளப், லிப்ரா பீபுள் கிளப் ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு பொதுப்பணிகளைத் தமிழ் இளைஞர்கள் செய்து வருகின்றனர். பெண்களுக்கு இலவசத் தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது மோரே தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ.3.60 லட்சம் வழங்கப்பட்டது.
2008-ல் பர்மாவில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி அளித்துள்ளனர்.

எப்படி செல்வது மோரேவுக்கு?

மணிப்பூர் மாநிலத்தின் கடைசி எல்லைக் கிராமம் தான் மோரே. அங்கு நாம் செல்ல முதலில் மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்லவேண்டும். விமானம் மூலமாகவும், ரயில் மூலமாகவும் இம்பால் செல்லமுடியும். விமானத்தில் செல்வதானால் கல்கத்தாவுக்கு முதலில் செல்ல வேண்டும். சென்னை - கொல்கத்தா 2மணிநேரம் விமானப்பயணம். கொல்கத்தாவிலிருந்து இம்பாலுக்கு பயண நேரம் ஒன்றரை மணிநேரம்.

இம்பாலிலிருந்து மோரே 110கி.மீட்டர். இதற்கு தனியார் வாகனத்தில் தான் செல்லமுடியும். ரயிலில் செல்ல சென்னையில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நாகாலாந்து மாநிலத்தின் டிமாப்பூர் வரை ரெயில்(திப்ருகர் எக்ஸ்பிரஸ்) இயக்கப்படுகிறது.
அங்கிருந்து இம்பாலுக்கு பஸ் உள்ளது. இம்பாலிலிருந்து மோரேவுக்கு தனியார் வாகனங்களில் செல்லலாம்.

நன்றி: முத்தமிழ் வேந்தன்


0 comments:

Post a Comment

Kindly post a comment.