இறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை பல்வகை உயிரினங்கள் இருக்கக் காண்கிறோம். வாரியார் சுவாமிகள் சொல்வது போல மனிதரில் சிலருக்கு ஆறறிவு என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும்பாலார் போதைக்கு அடிமைகளாக ஆகி, சமூக அந்தஸ்து, கெளரவம், பெருமை அனைத்தையும் தெருவோரக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கக் காண்கிறோம்.
பேருந்தில் அவசரமாக ஏறி ஏதோவொரு இடத்தின் பெயரைச் சொல்லி பயணச்சீட்டை வாங்கிவிட்டு, அந்த இடம் வந்ததும் நடத்துனர் எத்தனை முறை சொல்லியும் இறங்காமல் தடுமாறும் இளைஞர்களைப் பார்க்கிறேன்.
சாலையோரம் நல்ல உடையணிந்த மனிதன் அவை சீர்குலைந்து புழுதியில் புரண்டு வாயில் ஈக்கள் மொய்க்கப் படுத்துக் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது, அப்படிப்பட்டவர்களின் பெற்றோர் அல்லது மனைவி நம் நினைவுக்கு வருகின்றார்கள்.
நெடுந்தூரப் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழியில் ஓர் ஊரில் ஒரு இளைஞன் ஏறி காலியாகவிருந்த ஒரு இடத்தில் தொப்பென்று விழுந்தான். நடத்துனர் வந்து பயணச்சீட்டுக் கொடுக்கும்போதும் அவன் சுய நினைவின்றி, ஏதோ பணத்தை நீட்டி சென்னைக்கு ஒரு சீட்டு வாங்கிக் கொண்டதுதான், அது தொடங்கி அவன் வாயிலெடுத்து பேருந்தையே அசிங்கப் படுத்திவிட்டான். இறங்கும் இடம் வந்த பின்னும் அவனுக்கு மட்டும் நினைவு வரவே இல்லை.
இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டால் ஏடு போதாது எழுத, இடம் போதாது தளங்களில் ஏற்ற. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பெரிய ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். சுதந்திர நாள் கோலாகலக் கொண்டாட்ட ஊர்வலம் அது. அதில் கூட்டம் கூட்டமாக சிலர் ஆடிக் கொண்டு வந்தனர். அதன் பொருள் அப்போது எனக்குப் புரிந்ததோ இல்லையோ, இன்று நன்றாக புரிகிறது. குடியின் கேட்டை விவரிக்கும் காட்சிகள் அவை.
சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப் படுவதற்கு மக்களிடம் இருந்த ஆர்வம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இருந்தன. சாராயங்கள் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான இடத்தில், தென்னந்தோப்பு, ஆற்றங்கரை போன்றவிடங்களில் கள்ளுக்கடைகள் இருந்தன. முக்கிய சாலையிலிருந்து மறைவாக இருக்கும் அந்தக் கள்ளுக்கடைகளுக்கு வழிகாட்டிக் கொண்டு மரப்பலகையில் “கள்ளுக்கடை போகும் வழி” என்று தாரினால் எழுதி மாட்டி வைத்திருப்பார்கள்.
கிராமங்களிலும், நகரங்களிலும் கள்ளுக்கடைகளுக்குப் போகின்றவர்கள் ஊரறிய, நாடறியப் போகமாட்டார்கள். இருட்டிய பிறகு தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு திருட்டுத் தனமாகச் சென்று கள்ளைக் குடித்தார்கள்.
அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு, தாங்கள் ஒரு தவறான, சமூகம் வெறுக்கும் காரியத்தைச் செய்கிறோம் என்று. அன்று குடியினால் வீழ்ந்த ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் உழைக்கும் பாட்டாளி மக்கள். இவர்கள் குடிப்பதால் அவர்கள் குடும்பங்கள் சரிந்தன, அழிந்தன, பெண் பிள்ளைகள் தாலிகளைக்கூடக் கழற்றிக் கொடுத்து பாழும் கழுத்துடன் இருந்தனர். ராஜாஜி போன்ற சிறந்த சமூக நல வாதிகள் இந்த சமூக இழிவை, சமூக சீர்கேட்டை ஒழித்திட மதுவிலக்கைத் தமிழ் நாட்டில் கொண்டு வந்தார்கள்.
ராஜாஜி முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் இந்த மதுவிலக்கை அமல் படுத்திப் பார்த்து, அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டபின் சென்னை மாகாணம் முழுவதற்கும் அதனை அமல் படுத்தினார். குடியால் கெட்டழிந்த குடும்பங்கள் பெரும்பாலும் உடலுழைப்பைத் தரும் கூலிகள் மற்றும் விவசாயக் கூலிகள். அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார் ராஜாஜி.
தமிழக உழைப்பாளி வர்க்கத்துப் பெண்கள் ராஜாஜியைக் கெயெடுத்துக் கும்பிட்டு, தங்கள் வாழ்க்கையைப் புதுப்பாதைக்குக் கொண்டு சென்றவர் என்று வாழ்த்தினர். ஒரு தலைமுறை குடி என்பதை மறந்திருந்தனர் மக்கள். அப்போதும் திருட்டுத் தனமாக குடிக்கும் மனிதர்கள் இருந்தார்கள். பெரிய மனிதர்கள் பெர்மிட் வாங்கி வைத்துக் கொண்டு அயல் நாட்டு குடி வகைகளைக் குடித்தார்கள்.
கள்ளுக்கடைகளை ஒழித்ததனால் ஏற்பட்ட அரசு கஜானாவின் வருமான இழப்பை விற்பனை வரி மூலம் ராஜாஜி ஈடுகட்டினார். அரசாங்கத்துக்கு வருமானம் என்பதைவிட, இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பெரிதாக எண்ணிய தலைவர்கள் இருந்த காலம் அது.
அண்ணாதுரை அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆனபோது, அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க கள், சாராயக் கடைகளைத் திறப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அவர் அதனை ஏற்றுக் கொள்ளாததோடு, ஆட்சியையே நான் இழக்க நேர்ந்தாலும் ஏழைகளின் வாழ்க்கையைக் கெடுக்கும் கள் சாராயக் கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், மாறாகக் காமராஜ் போன்ற தலைவர்களோடு சேர்ந்து பூரண மதுவிலக்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வேன் என்றும் சொன்னார்.
அரசியல் நாகரிகம் சிறுகச் சிறுக மறைந்து, தனி மனிதத் துதிபாடல்களும், பகட்டான விளம்பரங்களும், விளம்பரங்களுக்காகத் திட்டங்களும் வகுக்கப்பட்ட காலமொன்று வந்தது. என்ன செய்வது. அரசாங்கத்தின் ஆடம்பரங்களுக்கு ஏற்ப போதிய வருமானம் தேவைப்பட்டது.
காமராஜ் காலத்தில் ஏழு அமைச்சர்கள் நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த நிலையில், பின்னர் வந்தவர்கள் இருபது முப்பது என்று அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டார்களே தவிர, மக்களின் கவலைகள் தீரச் சரியான நிர்வாக முறைகளோ, ஏழைகளைப் பாதுகாக்க நீண்ட கால திட்டங்களோ இல்லாமல் இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, கவர்ச்சிகரமான திட்டங்கள், அதற்கான விளம்பரங்கள், ஆடம்பர விழாக்கள் என்று அரசாங்க கஜானா திவாலாகிக் கொண்டிருந்த நிலையில், அவற்றை ஈடுகட்ட வருமானம் வந்து கொட்டுகின்ற அளவுக்கு மீண்டும் கள், சாராயக் கடைகளைத் திறந்து விடும் ஏற்பாடுகள் நடந்தன.
அந்த நிலையில் வயதாகி, உடல் நிலை முடியாமல் வீட்டில் இருந்த ராஜாஜி அன்றைய முதலமைச்சரை வீடு சென்று கைகளைப் பிடித்துக் கொண்டு, வேண்டாம், ஒரு தலைமுறை மக்கள் மறந்து போய்விட்ட இந்த பாழாய்ப்போன குடியை மீண்டும் கொண்டு வரவேண்டாம், ஏழை எளியவர்களை அழிக்கும் இந்தக் கொடுமையால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இதனால் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்களைக் கண்டு பிடிப்பதே சரியானது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால், அவைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.
பின்னர் தனி நபர்களுக்குக் கள்ளுக்கடை, சாராயக் கடைகள் வைத்துக் கொள்ள ஏலம் விடப்பட்டு அரசாங்கத்துக்கு வருமானம் வந்தது. அதில் பலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள், குடித்துக் குடியைக் கெடுத்தவர்கள் அல்ல,
குடிக்க வைத்து மக்களை நாசப்படுத்தியவர்கள். இவர்களுக்குப் போட்டியாக முளைத்ததுதான் கள்ளச்சாராயம். முதலில் பிற மாநிலங்களிலிருந்து திருட்டுத் தனமாகக் கொண்டு வந்தனர். பின்னர் ஆங்காங்கே குடிசைத் தொழிலாகக் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்டது. சமூகத்தில் அடிமட்டத்தில் கிடந்தவர்கள், சமூக விரோதிகள், அரசியலில் குறுக்கு வழியில் முன்னேறத் துடித்த சாதாரணர்கள் என்று இந்தத் துறை மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலபேர்.
சட்டப்படியான கடைகளுக்கு எதிராக கள்ளக் கடைகள் பரவிவரும் கொடுமைகண்டு பதறினார்கள் அரசியல் வாதிகள். என்ன செய்வது. சட்டத்தின்படி திருட்டுத் தனமாக விற்கப்படும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் முடியவில்லை, அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அத்தனை வலுவாகத் தங்களை ஆக்கிக் கொண்டு விட்டார்கள். அரசியலை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றுவிட்டார்கள். வேறு வழியில்லை. சாராய வியாபாரத்தைத் தாங்களே எடுத்து நடத்தலாம். டாஸ்மாக் எனும் பெயரால் அரசாங்கக் கடைகளை ஒவ்வொரு தெருவிலும், ஆலயங்களுக்கு எதிரிலும், பள்ளிக்கூடங்களுக்கு அருகிலும் வைத்து ஓகோவென்று வியாபாரம். இதனால் வருமானம் கோடி கோடியாக அரசாங்கத்துக்கு வந்து கொட்டத் தொடங்கியது.
ஐரோப்பிய நாடுகளில் வார இறுதி என்றால் மக்கள் ஓய்வு தேடி அமைதியான இடங்களுக்கு ஓடுவர். இங்கெல்லாம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை வார விடுமுறை நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்காக டாஸ்மாக் கடைகளின் முன்பு திருவிழா கூட்டம் கூடுகிறது.
காரில் வரும் செல்வந்தர் வீட்டு ஆட்கள், மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் கூட்டம், சைக்கிளில் சாதாரண மக்கள், கால் நடையாகக் காக்கி உடை அணிந்த துப்புறவு தொழிலாளர்கள் முதல் மூட்டை தூக்குவோர், தள்ளுவண்டி வைத்திருப்போர் என்று ஒரே கூட்டம். சமீப காலமாக இந்த சாராயத்தைக் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் பள்ளி மாணவர்கள் தங்கள் சீருடை அணிந்த கோலத்தோடு விழுந்து கிடக்கும் கோலத்தைப் பத்திரிகைகள் படம் பிடித்துப் போட்டு வருகின்றன.
நல்ல உடைகள் வாங்கவோ, வீட்டுத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கவோ, பிள்ளைகளின் படிப்புக்குத் தேவைகளை கவனிக்கவோ நேரமின்றிப் போதைப் பொருட்களை உட்கொண்டு தெருவில் மயங்கிக் கிடப்பதையே பெரும்பாலோர் விரும்புவது போலத் தெரிகிறது. அது தவிர, இந்தப் போதையை ஏற்றிக் கொண்ட பெருமக்கள் தங்களை உலகத்தின் உச்சியில் இருப்பவர்களாக நினைத்துக் கொண்டு அரற்றுவது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, பெண்களைக் குழந்தைகளை வெறுப்படையச் செய்கிறது.
சில அரசியல் கட்சிகள் இந்த நிலைமையை ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்றன. ஆனால் அவை முழுமூச்சாக இதில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. ஒரு கொள்கைப் பிரகடனமாக மட்டுமே செய்கின்றனர்.
காந்திய இயக்கம் தமிழருவி மணியன் போன்றோர் தீவிரமாக இது குறித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு, மகாநாடுகள் நடத்தி வருகின்றனர். சாதாரண மக்கள்கூட இதற்குப் பதில் சொல்லுகின்றனர், என்னவென்று தெரியுமா, அரசாங்கம் நடப்பதே இந்த டாஸ்வாக் வருமானத்தில்தான். அப்படியிருக்க அவற்றை மூடவோ, முழு மதுவிலக்கை அமல் படுத்தவோ யார் விரும்புவார்கள் எங்கின்றனர் சாதாரண மக்கள்.
இந்த நிலைமை இப்படி நீடிப்பதில் யாருக்கும் வெட்கமில்லை.
பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் ?
என்று நாட்டில் முழு மதுவிலக்கு கொண்டுவரப்படும் ?
என்று ஏழை எளிய உழைப்பாளி மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தைத் தங்களுக்காகவும், குடும்பம், பெண்டு பிள்ளைகளுக்காகவும் செலவிட்டு மகிழ்ச்சியோடு, ஆரோக்கியமாக வாழப்போகிறார்கள். ?
என்று சமூகத் தொல்லைகள் ஒழிந்து மக்கள் இந்தக் குடிகார கேடர்களிடமிருந்து தப்பிச் சுதந்திரமாக தெருக்களில் நடமாடப் போகிறார்கள்?
என்று நம் நாட்டில் மீண்டும் வசந்தம் வரும்?
இவைகளுக்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள்தான் நன்கு சிந்தித்து ஒரு டிவுக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டின் கருத்தைப் போல, “திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது போல குடிகாரர்களே திருந்தி இனி எங்களுக்குக் குடி வேண்டாம் என்று என்று சொல்வார்கள் என்று காத்திருக்க வேண்டியதுதானா? மக்கள் தீர்ப்புக்குக் காத்திருப்போம்.
நன்றி :-http://www.tamilhindu.com/2012/09/
0 comments:
Post a Comment
Kindly post a comment.