Thursday, November 1, 2012

திபெத்தை விழுங்கும் சீன டிராகன்...சு. வெங்கடேஸ்வரன்


திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஒரு வாரத்தில் (அக்டோபர் 20-26) மட்டும் 7 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.                                        

 தனி நாடாக இருந்த திபெத்தை சீனா தனது ராணுவ பலத்தால் ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் ஒருபகுதியாக அறிவித்ததில் இருந்தே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுவிட்டது.

புத்தமத வழிபாட்டு முறை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை என தனித்தன்மையுள்ள நாடாக இருந்த திபெத்தில் 1950ஆம் ஆண்டு சீன ராணுவம் காலடி எடுத்து வைத்தபோதே பிரச்னையும் வந்து சேர்ந்தது.

 திபெத் என்றால் புத்த மதமும், மதத் தலைவர் தலாய் லாமாவும் பிரிக்க முடியாத அம்சங்கள். சீனா தங்கள் நாட்டைப் பிடித்துக் கொண்டதைக் கடுமையாக எதிர்த்ததால் 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து வெளியேறிய தலாய் லாமா இப்போது வரை இந்தியாவில்தான் வசித்து வருகிறார். திபெத் மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையும் தலாய் லாமாதான்.                               

 தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று தலாய் லாமா கேட்டுக் கொண்டும் உணர்ச்சிமிகு திபெத் இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் தங்கள் நாட்டுக்கு எதிரான தலாய்லாமாவின் தூண்டுதல்தான் இந்த தீக்குளிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறது சீனா.                                           

 திபெத்தியர்களை அடக்கி ஓடுக்குவதில் அரக்கத்தனமாக செயல்படுகிறது சீனா. தீக்குளிப்பவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள சீனப் போலீஸôர், சந்தேகத்தின்பேரில் பலரைக் கைது செய்தும் வருகின்றனர். இது அவர்களைக் காப்பாற்றும் முயற்சியல்ல, ""சாகத்தானே வேண்டும்! வா சிறையில் வைத்து நாங்களே அடித்துக் கொல்கிறோம்'' என்று கூறி நடத்தும் கொடூரம்.                          

 தங்கள் அதிகாரத்துக்குள்பட்ட சுதந்திரப் பகுதி என்று திபெத்தை அறிவித்துள்ளது சீனா. அந்நாட்டை தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் திபெத் மொழி, மத வழிபாடு என திபெத்தியர்களின் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு திபெத்துக்கு முழுமையாக சீனாவின் சாயத்தைப் பூசிவிட முயற்சி நடக்கிறது. இதுவே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.

திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது தவறு என்று தெரிந்தும் அதனை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி, சீனாவை கண்டிக்காமல் சர்வதேச சமூகம் மெüனம் காத்து வருகிறது.

இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம் பொருந்திய நாடாக உருவெடுத்துள்ள சீனாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற சுயநலமே இதற்குக் காரணம்.

 அதிகபட்ச முயற்சியாகத் திபெத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அவ்வப்போது கவலை தெரிவிப்பார்கள்.

சீனாவில் சிறுபான்மையினராக உள்ள திபெத்தியர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்று அறிவுரை கூறுவார்கள்.
 திபெத்தைச் சீனாவின் ஒருபகுதியாக அங்கீகரித்து வரைபடம் வெளியிட்டுள்ள ஐ.நா.விடம் திபெத் மக்கள், பெரிய அளவில் வேறு நியாயம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ""நாடு கடந்த திபெத் அரசை'' வைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.                                                                  

 திபெத் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், "இது எங்கள் உள்நாட்டுப் பிரச்னை, நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்' என்பதே சீனாவின் பதில். ஐ.நா. சபையிலேயே இதனை அறிவித்து விட்டது சீனா.
 ஒரு காலத்தில் எங்கு திரும்பினாலும் புத்த விகாரங்களுடன் பக்தி மணம் கமழும் நகரமாகத் திகழ்ந்த திபெத்தின் பாரம்பரியத் தலைநகரான லாசாவில், இப்போது கேளிக்கை விடுதிகளையும், மதுக் கடைகளையும் ஏகத்துக்கு திறந்துள்ளது சீனா. பள்ளிகளில் திபெத் மொழிக்குப் பதிலாக சீன மொழி திணிக்கப்பட்டுள்ளது.                                                                                                                     

 சீர்திருத்தம் என்ற பெயரில் திபெத்தின் அடையாளத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு, அடுத்த தலைமுறைத் திபெத்தியர்களைச் சீனர்களாக மாற்றிவிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

 இது இன அடையாள அழிப்பு.  ""இருந்தால் சீனனாக இரு, இல்லையென்றால் ஒழிந்துபோ'' என்பதுதான் திபெத்தியர்களுக்குச் சீனம் கூறும் செய்தி.

 தங்கள் கலாசாரமும், தனித்துவமும் கண்முன்னே அழிந்து வருவதைப் பொறுக்க முடியாத கழிவிரக்கம், அவநம்பிக்கை, விரக்தி போன்றவற்றின் வெளிப்பாடும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டுமென்ற தீவிர எண்ணமுமே திபெத்தியர்களின் தீக்குளிப்புக்குக் காரணங்கள்.                                                                                                            

நன்றி :- தினமணி, 01-11-2012                          




0 comments:

Post a Comment

Kindly post a comment.